உலகம் முழுவதும் நெல் பயிரிடல் பரவுவதற்குக் காரணமாக இருந்த நிலம், தமிழ் நிலம். இன்றைக்கு உலகம் முழுவதும் அரிசி என்ற சொல்லே, பல்வேறு வகைகளில் மருவி வழங்கி வருகிறது, ஆங்கிலத்தின் ரைஸ், அறிவியல் பெயரான ஒரைசா சட்டைவா உட்பட. இந்த ஒன்றே நெல் பயிரிடல் நம் மண்ணிலிருந்து, உலகெங்கும் பரவியது என்பதற்கு ஒரு அத்தாட்சி.
இப்படி உலகுக்கே நெல் பயிரிடக் கற்றுத் தந்த நம் மண்ணில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட பாரம்பரிய நெல் வகைகள் காலந்தோறும் கண்டுபிடிக்கப்பட்டு, பயிரிடப்பட்டு வந்தன. ஒவ்வொரு சிறப்புக் காரணத்துக்காக, ஒவ்வொரு வகையும் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சி சார்ந்த வேதி விவசாயமும், அது தந்த கலப்பின-வீரிய விதைகளும் பாரம்பரிய நெல் ரகங்களுக்குப் பாதகமாக அமைந்துவிட்டன.
இரண்டு விருதுகள்
அப்படிப் பரவலாகப் புழக்கத்தில் இருந்து மறைந்துபோன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தவர் நெல் ஜெயராமன். இந்தப் பணிக்காக மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேஷனல் இன்னோவேஷன் (கண்டுபிடிப்பு) ஃபவுண்டேஷன், தேசிய அடிப்படை நிலை கண்டுபிடிப்பு - பாரம்பரிய அறிவுக்கான விருதையும், SRISTI அமைப்பின் இளம் காந்தியத் தொழில்நுட்பக் கண்டறிதலுக்கான SRISTI சம்மான் விருதையும் அவர் பெற்றுள்ளார். சமீபத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இரண்டு விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டன.
சமுதாயத்தின் விளிம்பு நிலையில் வாழ்ந்துகொண்டு, மக்களுக்குப் பயனுள்ள அறிவியல் தொழில்நுட்பக் கண்டறிதல்களைச் செய்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பாரம்பரிய நெல் வகைகளில் அதிக மகசூல் பெற்றது, பெரும்பான்மை மக்களிடம் அந்த நெல் வகைகளைப் பரவச் செய்தது, வேதி பூச்சிக்கொல்லிக்கு மாற்றாக இயற்கை வழி பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்திச் சிறப்பாக நெல் சாகுபடி செய்ததற்காகவும் அவருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அச்சக தொழிலாளி
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு என்ற கிராமத்தில் சாதாரண ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜெயராமன், 9-ம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ளார்.
திருத்துறைப்பூண்டியில் ஒரு அச்சகத்தில் அச்சுக் கோக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த இவருக்கு நுகர்வோர் இயக்கங்களின் தொடர்பு கிடைத்து, அந்த இயக்கங்களில் இணைந்து பணியாற்றினார். நஞ்சில்லா உணவை நுகர்வோருக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நம்மாழ்வாரின் இயக்கம், இவருக்குள் இருந்த விவசாயியை வெளியே கொண்டு வந்தது. நஞ்சில்லா உணவை முன்னிறுத்தி 2003-ம் ஆண்டில் பூம்புகார் முதல் கல்லணைவரை ஒரு மாதக் காலம் நம்மாழ்வார் நடத்திய விழிப்புணர்வு நடைப்பயணத்தில் ஜெயராமன் பங்கேற்றார்.
நடைபயணத்தின்போது சில விவசாயிகள் காட்டுயாணம் உள்பட 7 பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை நம்மாழ்வாரிடம் வழங்கினர். அவற்றை ஜெயராமனிடம் ஒப்படைத்த நம்மாழ்வார். அவற்றை மறுஉற்பத்தி செய்து விவசாயிகளிடம் பரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பாரம்பரிய நெல் மையம்
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் ஜெயராமனின் பயணம் அன்றைக்குத்தான் தொடங்கியது. இன்றைக்கு 150-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டது மட்டுமல்லாமல், அவற்றை விவசாயிகள் பரவலாகப் பயிரிடவும் தொடங்கியுள்ளதுதான் இதில் முக்கியமானது.
இந்தப் பணிக்குப் பின்னணியில் இருந்த விஷயங்கள் என்ன?
"எங்கள் ஊரைச் சேர்ந்த ஜெ.நரசிம்மன் அமெரிக்காவில் வசித்துவருகிறார். நம்மாழ்வாரின் பணிகள் குறித்து அறிந்திருந்த அவர் 2006-ல் ஊருக்கு வந்தபோது, இயற்கை வழி வேளாண் முறையைப் பரவலாக்க ஏதாவது செய்யுங்கள் என்று சொன்னார். அதற்காக ஆதிரெங்கம் கிராமத்தில் உள்ள தனது 5 ஏக்கர் நிலத்தையும் அங்குள்ள கட்டிடத்தையும் தந்தார்.
நம்மாழ்வார் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்ட அந்த இடம்தான் இயற்கை வேளாண்மை, பாரம்பரிய நெல் ரகங்களைப் பரவச் செய்வதற்கான பயிற்சி களமாக இன்றைக்கு உருவெடுத்துள்ளது.
2006-ம் ஆண்டு இங்கே நடத்திய நெல் திருவிழாவில் 150 விவசாயிகள் பங்கேற்றனர். அவர்களிடம் 7 பாரம்பரிய நெல் விதைகளை வழங்கினோம். கடந்த ஆண்டு நடைபெற்ற நெல் திருவிழாவில் 4, 200 விவசாயிகள் பங்கேற்கும் அளவுக்கு அது வளர்ச்சி அடைந்துள்ளது. அவர்களிடம் 153 பாரம்பரிய நெல் விதைகளை விநியோகம் செய்திருக்கிறோம்.
ஆதிரெங்கத்தைப் போலவே தமிழகம் முழுவதும் 23 பாரம்பரிய நெல் பண்ணைகளை உருவாக்கி, 157 வகை பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டுள்ளோம். மாநிலம் முழுவதும் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு வருகின்றனர். இந்த ஆண்டும் மே 30, 31-ம் தேதிகளில் ஆதிரெங்கத்தில் நெல் திருவிழா நடைபெற உள்ளது" என்கிறார் ஜெயராமன்.
நமது நெல்லைக் காப்போம்
இவரது பணிகளைப் பாராட்டிய நம்மாழ்வார்தான், இவருக்கு ‘நெல் ஜெயராமன்’ எனப் பெயர் வைத்தார். இவருடைய பணிகளைப் பாராட்டிய நரசிம்மனின் சகோதரர் ரங்கநாராயணன், தனக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தையும் இயற்கை வேளாண் பணிகளுக்கு ஒப்படைத்தார். ஆதிரெங்கம் கிராமத்தில் உருவெடுத்துத் தமிழகம், கேரளம், கர்நாடகம், மேற்குவங்கம், ஒடிசா என 5 மாநிலங்களில் ‘நமது நெல்லைக் காப்போம்’ என்ற பெயரில் பாரம்பரிய நெல் ரகங்களைக் காக்கும் இயக்கம் இன்றைக்குப் பரவியுள்ளது.
நெல் ஜெயராமன் என்ற பெயருக்குப் பொருத்தமாக நம் மண்ணின் நெல் வகைகளைப் பாதுகாத்து, பரவலாக்கும் இவருடைய பயணம் எந்தத் தொய்வுமில்லாமல் தொடர்கிறது. அதைச் சிறப்பாக்கி, ஊக்கப்படுத்தும் வகையில் தற்போதைய இரண்டு விருதுகளும் அமைந்துள்ளன.