கடன் வழங்குவதிலும் தள்ளுபடி செய்வதிலும் இந்திய உழவர்களுக்கு எதிராக எப்படிப்பட்ட கொடுமையான போர் ஆட்சியாளர்களால் தொடுக்கப்பட்டுவருகிறது என்பதைப் பார்த்தோம். இத்தனைக்குப் பின்னரும் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 15.7 சதவீதமாக உள்ள வேளாண்மைத் துறை 56 சதவீத வேலைவாய்ப்பைத் தந்துவருகிறது.
கடன் எனும் இனிப்பு
‘நோயில்லாதவன் இளைஞன். கடனில்லாதவன் பணக்காரன்' என்ற என்றொரு பழமொழி உண்டு. இதன்படி, வருவாய்க்குள் வாழும் பண்பாட்டைக் கொண்டிருந்த நமக்குக் கடன் என்ற இனிப்புத் துண்டு காட்டப்பட்டு, அதன் ஊடாகப் பின்னப்பட்ட சந்தை என்ற வலை உழவர்களைக் கடன் பொறிக்குள் சிக்க வைத்துள்ளது.
அமெரிக்காவின் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான எலினா ரூஸ்வெல்ட் கடன் பற்றி ஒரு கருத்தைக் கூறுகிறார், 'கடன் என்பது உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும், போதிய அளவு கிடைக்க வேண்டும். குறைந்த வட்டிக்குக் கிடைக்க வேண்டும். அப்போதுதான் ஒருவர் கடன் வாங்கி, அதை வைத்துத் தொழில் செய்து மீள முடியும், கடனைத் திரும்ப அடைக்க முடியும்' என்கிறார். ஆனால், நடைமுறை அப்படி இல்லையே.
வங்கிகளுக்குச் சென்று கடன் பெறுவதில் உள்ள சிக்கல்கள் நம் அனைவருக்கும் தெரியும். பெரும் அலைக்கழிப்புக்கு ஆளாகாமல் யாரும் கடன் பெற்றுவிட முடியாது. இப்படி மிக மோசமாகத் தோல்வியடைந்துள்ள கடன் வழங்கும் முறை, பிற தனியார் நிதி அமைப்புகள் தாராளமாகப் புழங்கவும் வழிவகுத்துள்ளது.
தற்கொலை செய்தது யார்?
மன்னராட்சி காலத்தில் இருந்து உழவர்கள் மீதுதான் பெரும்பாலான சுமைகள் ஏற்றப்பட்டு வந்துள்ளன. உழவர்களிடம் வரி வாங்கியே பல அரசுகள் இயங்கியுள்ளன. 1960-களுக்குப் பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள் உழவர்களை வழங்கும் இடத்தில் இருந்து, பெறும் இடத்துக்கு மாற்றிவிட்டன. தேவையை நோக்கிய சாகுபடி முறை, சந்தையை நோக்கிய சாகுபடி முறையாக மாறிவிட்டது.
விளைபொருள்களைச் சேமித்து வைக்கும் பழக்கம் மறைந்துவிட்டதாலும், அதற்கான நிதி, வாய்ப்பு வசதிகள் இல்லாததாலும் சந்தையால் உழவர்கள் சூறையாடப்படுகின்றனர். இதனால் உழவர்கள் குடும்பம் குடும்பமாகத் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
இதுவரை (1997 முதல் 2011 வரை) நாட்டில் இரண்டரை லட்சம் உழவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதைக் குற்றவியல் ஆவணங்களில் இருந்து வேளாண் பொருளியல் ஆய்வாளர் சாய்நாத் விளக்குகிறார். இதில் தமிழ்நாட்டின் பங்கு 11.8 விழுக்காடு என்பது மிகவும் அதிர்ச்சியான தகவல். இவர்கள் எல்லோரும் பசுமைப் புரட்சி உழவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மனசாட்சி எங்கே?
முன்னேறிய மாநிலங்கள் என்று கூறப்படும் மாநிலங்களான, மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கேரளத்தில் உழவர் குடும்பங்கள் தற்கொலைக்குத் தள்ளப்படும்போது, இயற்கை வேளாண்மைக்கு மாறிய மாநிலங்களில் தற்கொலைகள் இல்லை. (பார்க்க: http://ncrb.gov.in/CD-ADSI2011/ suicides-11.pdf)
அதுமட்டுமல்ல தற்கொலைகள் அதிக அளவில் நிகழ்ந்துள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் இயற்கைவழி வேளாண்மை செய்யும் உழவர்களும் உள்ளனர். இவர்களில் ஒருவர் குடும்பம்கூடக் கடனுக்காகத் தற்கொலை செய்துகொள்ளவில்லை.
'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்று புறநானூறும், மணிமேகலையும் கடவுளுக்கு இணையாக உழவர்களை வைக்கின்றன. நமது பண்டை அறிஞர்கள் வேளாண்மையையும், உழவர்களையும் போற்றிப் புகழ்ந்துள்ளனர். ஆனால், நவீன சிந்தனையாளர்களான நாம் உணவளிப்பவர்களை எந்த இடத்தில் வைத்துள்ளோம்?
அன்பிற்குரிய, மன்னிக்கவும் அறிவுக்குரிய கொள்கை வகுப்பாளர்களே! ஆட்சியாளர்களே உங்கள் மனசாட்சியைத் தொட்டுப் பாருங்கள் இது நியாயம்தானா?
கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com