உயிர் மூச்சு

அதிவேகச் சாலைகள் அரிசியைத் தருமா?- ஏரின்றி அமையாது உலகு

பாமயன்

முன்பே நாம் பார்த்த மாதிரி நவீன இந்தியாவில் நிலவுடைமைப் போராட்டம் நீண்ட, நெடிய வரலாற்றைக் கொண்டது. ஆனால், விடுதலை பெறுவதற்கு முன்னிருந்த பிரித்தானியரின் மோசமான ஆளுகையைப்போல மாறும் சூழலை, 'நிலம் கையகப்படுத்தும் சட்டம்' மூலம் இந்திய அரசு மீண்டும் கொண்டுவர முனைகிறது.

மீண்டும் ஒரு கொண்டை ஊசித் திருப்பம். உழுபவர்களுக்குக் கொஞ்சமாகக் கிடைத்திருக்கும் நிலத்தையும் பிடுங்கும் முயற்சியாக இது விமர்சிக்கப்படுகிறது. நிலவுடைமையாளரிடம் அனுமதியைப் பெறாமலேயே, ஒருவருடைய நிலத்தை அரசு எடுத்துக்கொள்ளலாம் என்பதுதான் புதிய சட்டம்.

ஒரு மக்களாட்சி நாட்டில் இது எப்படிச் சாத்தியப்படுகிறது? இந்திய அரசியல் சட்டம், இதற்கு இடம் தருகிறதா? இதே சட்டத்தைப் பயன்படுத்தி, ஏதாவது தொழில் நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு நிலத்தை எடுக்க முடியுமா? அப்படி எந்தக் காலத்திலாவது நடந்திருக்கிறதா?

ஒரு இந்தியா போதாது

ஒடிசா மாநிலத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள போஸ்கோ நிறுவனத்தின் இரும்பு ஆலைக்குத் தேவையான நிலம் 4,000 ஏக்கர். அதேபோல, மிட்டல் நிறுவனத்துக்கு 12,000 ஏக்கர் (4,400 ஹெக்டேர்) அளவுக்கு நிலம் தேவை. இப்படி ஏராளமான பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலம் பெருமளவு தேவைப்படுகிறது.

பிரதமர் மோடி ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று வெளிநாட்டு நேரடி முதலீட்டை இந்தியாவுக்குக் கொண்டுவரப் பாடுபட்டுவருகிறார். அதன்படியே ஏறத்தாழ நூறு தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் கடை விரிக்க வேண்டும் என்று வைத்துக்கொண்டால், குறைந்த அளவாக 12,00,000 ஏக்கர் நிலம் தேவைப்படும். அதுபோல இந்த நிறுவனங்கள் தங்கள் சரக்குகளை அனுப்ப அகன்ற சாலைகள் தேவைப்படும். ஆக்ராவுக்கும் டெல்லிக்கும் இடையில் உள்ள 180 கி.மீ. ஆறு வழிச் சாலை போடத் தேவைப்படும் நிலத்தின் அளவு 1,06,255 ஏக்கர் (43,000 ஹெக்டேர்).

அப்படியானால் நூறு நிறுவனங்களின் பொருட்களை அனுப்பவும், அவற்றுக்கான மூலப்பொருட்களை எடுத்துச் செல்லவும் தேவைப்படும் சாலைகளின் அளவு, சென்னை முதல் டெல்லிவரை ஏறத்தாழ 2,160 கி.மீ. தொலைவு. அதற்குத் தேவை மேலும் 12,75,060 ஏக்கர். இந்தியாவின் உள்ள மொத்தச் சாகுபடிப் பரப்பு 39,50,000 ஏக்கர். அப்படியானால் இந்தியாவின் பாதிப் பங்கு நிலம் இந்தத் தொழில் துறைக்கு மட்டும் கொடுக்கப்பட்டுவிட்டால், இந்தியாவின் வேளாண்மை என்ன ஆவது? இப்போதே நாம் பல உணவுப் பொருட்களை இறக்குமதி செய்துதான் காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறோம்.

அழிக்கப்படும் முதலீடு

ஏறத்தாழ ரூ. 52,000 கோடியை முதலீடு செய்து போஸ்கோ என்ற நிறுவனம், வெறும் 2,000 பேருக்கு வேலை தருவதாகக் கூறுகிறது. இதில் தொழிலாளர் நலச் சட்டங்கள் ஏதும் செல்லுபடியாகாது என்பது தனிப் பிரச்சினை. அதாவது ஓர் ஆளுக்கு ஏறத்தாழ இரண்டரைக் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுவதாகப் பொருள். இதில் இவர்கள் நாசமாக்க உள்ள நிலப்பரப்பின் அளவு மட்டும் ஏறத்தாழ 10,000 ஏக்கர். வளமான காட்டை அழிக்காமல் உலோகத் தாதுவை எப்படி எடுக்க முடியும்?

இதே பணத்தை வேளாண்மை/கால்நடை வளர்ப்பில் முதலீடு செய்தால் நிலம் அழியாது. ஒரு லட்சம் ரூபாயில் ஒரு குடும்பம் நிம்மதியாக வாழ முடியும். கிராமப் பகுதிகள் அழியாது. பெரும் சாலைகள் தேவையில்லை. நகர்ப்புற நெருக்கடி தேவையில்லை. குடிநீர் வசதிக்கு என்று வீராணத்தில் இருந்து சென்னைக்கு நீரைக் ‘கடத்த’ வேண்டியதில்லை.

நிலத்தைப் பறிக்க வேண்டுமா?

வேளாண் நாடு என்று ஒரு காலத்தில் பறைசாற்றிக்கொண்ட நம் நாட்டில் வேளாண்மை நசிவதற்கு முதல் காரணம் ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகள், இரண்டாவது உழைப்பவனுக்கு நிலம் சொந்தமாக இல்லாமல் இருப்பதுதான். இன்றைக்குப் பெரும்பாலான தரிசு நிலங்கள் மற்ற தொழில்களைச் செய்வோரிடம் உள்ளது. அல்லது நகர்ப்புறப் பணக்காரர்களிடம் இருக்கிறது. அதனால்தான், வேளாண் நிலங்கள் மீது கைவைக்க ஆட்சியாளர்கள் துடிக்கின்றனர்.

‘தொழில் வளர்ச்சி' என்ற பெயரில் உழவர்களிடமிருந்து நிலத்தைப் பறிக்க வேண்டிய தேவையில்லை. நாடு முழுமையும் சுற்றி அலைந்து நமது விடுதலைப் போராட்டத் தலைவர்கள் (காந்தி முதல் நேரு, குமரப்பா, நேதாஜி, நம்பூதிரிபாட் வரை) மக்களின் சிக்கல்களை நேரடியாக உணர்ந்திருந்தார்கள்.

நிதர்சனம் தெரியாதவர்கள்

இன்று இரண்டாம் வகுப்புப் பெட்டியிலோ, நகரப் பேருந்திலோ பயணம் செய்யும் ஒரு சட்டப்பேரவை உறுப்பினரைப் பார்க்க முடியுமா? இவர்கள் எப்படி மக்களின் நெருக்கடியை உணருவார்கள்? இவர்களில் யாராவது, என்றைக்காவது குடிநீருக்காகக் குழாயடியில் காத்திருந்துண்டா? இன்னொரு இந்தியா இருப்பதைப் பார்க்க இவர்கள் தவறுகிறார்கள். வாக்கு சேர்க்க மட்டுமே கிராமங்களுக்குச் செல்கின்றனர்.

நமது தலைவர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய கொள்கைகளில் பலவும் நீர்த்துப் போய்விட்டன. குறிப்பாக ‘நேரடியாக வேளாண்மையில் ஈடுபடும் உழவர்களுக்கு நிலத்தை வழங்க வேண்டும்' என்ற கொள்கையை நீர்த்துப் போகச் செய்ததுடன், மீண்டும் நிலத்தை ஒரு சிலர் கையில் குவிக்கும் தலைகீழான போக்குக்கு பா.ஜ.க. அரசின் ‘நிலம் கையகப்படுத்தும் சட்டம்' வழிகோலுகிறது. நாடு முழுவதும் எழுந்துள்ள கடும் எதிர்ப்பைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, மத்திய அரசு அதைத் திரும்பப் பெற வேண்டும்.

- கட்டுரையாசிரியர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு: adisilmail@gmail.com

SCROLL FOR NEXT