உயிர் மூச்சு

வண்டலூரில் வெள்ளைப்புலி 3 குட்டிகளை ஈன்றது

செய்திப்பிரிவு

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 10 வயதுள்ள அனு என்ற வெள்ளைப் புலி 3 குட்டிகளை ஈன்றுள்ளது. இதுகுறித்து தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் இயக்குநர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2006-ம் ஆண்டு டெல்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவிலிருந்து விலங்குகள் பரிமாற்ற முறையின் மூலம் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்ட அனு என்ற பெண் வெள்ளைப்புலி கடந்த மார்ச் 16-ம் தேதி 3 குட்டிகளை ஈன்றது. இவற்றில் 2 ஆண், ஒன்று பெண். இத்துடன் சேர்த்து உயிரியல் பூங்காவில் மொத்தம் 14 வெள்ளைப் புலிகள் உள்ளன.

கோடை வெப்பத்தைத் தாங்கும் வகையில் அவற்றின்அறையில் சுற்றிலும் கோணிப்பைகள் கட்டப்பட்டு காலை, மாலை இரு வேளையும் தண்ணீர் தெளிக்கப்பட்டு குளிர்ச்சியான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. தாய் மற்றும் குட்டிகளின் செயல்பாடுகள் கேமரா உதவியுடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT