கடும் வறட்சியையும் தாங்கி வளர்ந்து மகசூல் தரக்கூடிய நெல் ரகம் குழியடிச்சான். மழையை நம்பியும் ஆழ்குழாய் கிணற்றை நம்பியும் சாகுபடி செய்து, அந்த தண்ணீரும் இல்லாமல் போனாலும்கூட வறட்சியைத் தாங்கி மகசூல் தரும் நெல் ரகம் இது.
உப்பு நிலத்தில்கூட நன்றாக வளரும். கடலோரப் பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. மானாவாரி மற்றும் பாசன நிலங்களில் சாகுபடி செய்யக்கூடியது.
எளிதில் துளிர்க்கும்
ஐப்பசி மாதத்தில் நேரடியாக விதைத்து ஒரு மழை பெய்து நெல் முளைத்துவிட்டால் போதும். அதன் பிறகு குறைந்த தண்ணீர் அல்லது ஈரப்பதம் இருந்தாலும் குழியில் கிடக்கும் நீரைக்கொண்டு துளிர்விட்டு தூர் வெடிப்பதால் குழியடிச்சான் என்ற பெயர் வந்தது. குளிகுளிச்சான் என்றொரு பெயரும் உண்டு.
பயிர் நன்கு வளர்ந்து தை மாதம் அறுவடைக்கு வந்துவிடும். 100 நாள் வயதுடையது, நான்கடி உயரம்வரை வளரும். பொன் நிறமான நெல், சிகப்பு அரிசி, மோட்டா ரகம், அரிசி முட்டை வடிவத்தில் இருக்கும்.
தாய்மார்களுக்கு நல்லது
குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு இந்த அரிசியில் இட்லி, தோசை, இடியாப்பம் செய்து கொடுத்தால் தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். நடவுக்கு முன்பாக தொழு உரம், பசுந்தாள் உரச்செடிகளான காவாலை, தக்கைப் பூண்டு, சஸ்பேனியா, டேஞ்சா போன்றவற்றை நிலத்தில் இட்டு உழவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் நிலத்தின் மண்வளத்தைக் கூட்டலாம். நுண்ணுயிர்கள் பெருகும். ஏற்கெனவே, உள்ள ரசாயன தாக்கத்தை மாற்ற முடியும்.
ஏக்கருக்கு குறைந்தது 20 மூட்டை மகசூல் கிடைக்கும். இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளரும். சாயும் தன்மை கிடையாது. இதை விதை யாகவும் அரிசியாகவும் விற்பனை செய்யலாம்.
நெல் ஜெயராமனைத் தொடர்புகொள்ள: 94433 20954