உயிர் மூச்சு

‘விவசாயிகள் புதியன கண்டுபிடிக்க வேண்டும்: பத்மஸ்ரீ புதுவை வெங்கடபதி

செய்திப்பிரிவு

புதுச்சேரி மாநிலம் கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடபதி (68), இந்தியாவிலேயே முதலாவதாக, தோட்டக்கலை வல்லுநர் என்ற அடிப்படையில் பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர்.

இவர் படித்தது 4-ம் வகுப்புவரை மட்டும்தான். தோட்டக்கலை மீதான இவரின் தீவிர ஆராய்ச்சிகளுக்காக, அமெரிக்காவைச் சேர்ந்த உலகத் தமிழ் பல்கலைக்கழகமும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும் மதிப்புறு அறிவியல் முனைவர் பட்டத்தை இவருக்கு வழங்கியுள்ளன.

தொடர்ந்து விவசாயம் சார்ந்த பல ஆராய்ச்சிகளில் இவர் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆராய்ச்சிகளுக்காகப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவருடன் ஒரு நேர்காணல்:

நான்காம் வகுப்பு மட்டுமே படித்திருக்கிறீர்கள். இத்தனை விருதுகளைப் பெறுவோம் என்று எதிர்பார்த்தீர்களா?

எனக்கு ஆராய்ச்சி செய்யப் பிடிக்கும். 1972-ல் கனகாம்பரத்தில் ஆராய்ச்சி செய்து காமா கதிர்வீச்சு மூலம் நூறு வகை புதிய இனங்களை உருவாக்கினேன்.10 லட்சம் செடிகளை ஏழைக் குடும்பங்களுக்குத் தந்திருக்கிறேன். தென்னிந்திய பூச்சந்தைகளில் பல கோடி ரூபாய்க்கு இப்பூக்கள் விற்பனையாகி உள்ளன. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

அதையடுத்துச் சவுக்குக்கு மாறினேன். சவுக்கில் 200 டன் மகசூல் தரும் இனத்தை உருவாக்கி யிருக்கிறேன். கல்பாக்கம் அணுமின் நிலையம் உதவியுடன், வறட்சியில் வளம் கொழிக்கும் ரகத்தைக் கதிரியக்கம் மூலம் உருவாக்கினேன்.

உள்ளூர் சவுக்கு 40 டன்தான் மகசூல் தரும். புதிய ரகத்தில் அதைவிட நல்ல மகசூல் கிடைத்தது. இதுபோன்ற பணிகளைப் பாராட்டித்தான் விருதுகள் கிடைத்தன.

விவசாயிகளுக்கு ஆராய்ச்சி அவசியமா?

விவசாயிகளுக்கு அறியாமைதான் எமன். ஈரப்பதத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். நிலத்தடி நீர் குறையத் தொடங்கியுள்ளது. சொட்டு நீர் பாசனத்துக்கு மாறினால், முன்னேற முடியும் என்பதை உணர வேண்டும். அதற்கு ஆராய்ச்சி உதவும்.

நான்காம் வகுப்பு மட்டுமே படித்த என்னை ஆராய்ச்சி செய்ய ஊக்குவித்தவர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். அதன் மூலம் டி.என்.ஏ. எடுப்பது, மரபியல் பற்றியும் அறிந்துகொள்ள முடிந்தது. என்னோட ஆராய்ச்சி அறிக்கை ஐ.நா. சபையில் வாசிக்கப்படும் தரத்துக்கு இருக்க வேண்டும் என்று உழைக்கிறேன்.

தற்போது விவசாயம் இருக்கும் நிலையில் அனைவராலும் இது சாத்தியமா? இதற்குத் தடையாய் இருப்பது என்ன?

தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. நிலத்தடி நீர் குறைகிறது. விவசாய நிலங்கள், பிளாட்டாக மாறி வருகின்றன. இத்துறைக்கான நவீனத் தொழில்நுட்பங்களை விவசாயிகள் கற்றுக்கொண்டால் நீடிக்க முடியும். மரபணு மாற்றப்பட்ட விதைகள் அதிக மகசூல் தரும் என்பது என் அனுபவம்.

நமக்குத் தேவையான ஆராய்ச்சியை நாமே செய்யலாம். புதிய ரகங்களை அவர்களே உருவாக்க முடியும். வித்தியாசமான சிந்தனை விற்பனையாளர்களுக்கு மட்டுமல்ல, விவசாயிகளுக்கும் தேவை.

கனகாம்பரம், சவுக்கு என்று உணவல்லாத பயிர்களில் நீங்கள் ஆராய்ச்சி செய்திருக்கிறீர் கள். உணவுப் பயிர்களில் ஆராய்ச்சி செய்திருக்கிறீர்களா?

எனது மகள் ஸ்ரீ லட்சுமியுடன் இணைந்து நெய் மணம் கமழும் மிளகாய் வகையை உருவாக்கியுள்ளேன். புதுவை முதல்வர் ரங்கசாமி புதிய ரகத்தை வெளியிட்டார். கல்பாக்கம் அணுமின் ஆராய்ச்சி நிலையத்தின் உதவியும் இதில் முக்கியமானது.

பத்தாயிரம் பேருக்கு மேல் இந்த வகையைத் தந்துள்ளேன். இந்த மிளகாயைப் பலரும் சாப்பிட்டுள்ளனர். தொடக்கத்தில் இம்மிளகாய்க்கு எதிர்ப்பு வந்தது.

விவசாயத்தை மீட்டெடுக்க உங்கள் யோசனை என்ன?

புதிய தொழில் நுணுக்கங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு பயிருடன் மட்டும் தேங்கிவிடக் கூடாது. குறைவான தண்ணீரைப் பயன்படுத்தும் உளுந்து, மற்றப் பயிர்களுக்கு மாற வேண்டும்.

வறட்சியான தர்மபுரி பகுதியில் மாமரம் வளர்த்து, பழச்சாறு எடுத்து ஏற்றுமதி செய்கின்றனர். அதைப்போல ஒவ்வொரு பகுதிக்கும் மாற்றுப் பயிர் குறித்துச் சிந்திக்க வேண்டும்.

நிலத்தடி நீர் குறைந்து, உப்புத் தண்ணீர் புகுந்துள்ளது. அதில் வளரும் சவுக்கையும் உருவாக்கியுள்ளோம். சுனாமிக்குப் பிறகு புதுச்சேரி - கடலூர் கடலோரப் பகுதிகளில் உப்பு தண்ணீர் அதிகமாகிவிட்டது.

இப்பகுதிகளில் நாங்கள் உருவாக்கிய சவுக்கு ரகம் நன்றாக விளைகிறது. அதனால், மாற்றம் குறித்து யோசிக்க வேண்டும். ஒவ்வொரு விவசாயியும் கண்டுபிடிப்பாளராக மாற வேண்டும். விவசாயத்துக்கு என்றும் மதிப்புண்டு.

புதுவை வெங்கடபதி தொடர்புக்கு: 94432 26611

SCROLL FOR NEXT