கேரட், பீட்ரூட் போன்ற இங்கிலீஷ் காய்கறிகள் குளிர் நிலவும் பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களில் சாதாரணமாக இந்தக் காய்கறி வகைகள் விளைகின்றன. இந்தக் காய்கறிகளைச் சமவெளிப் பகுதியில் விளைவித்திருக்கிறார் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பச்சுடையாம்பட்டி குட்டைத் தோட்டத்தைச் சேர்ந்த ஜி. சிவக்குமார்.
இதற்குக் காரணம் இயற்கை உரம் தந்த ஊட்டம். ரசாயன உரம் பயன்படுத்தாமல் காய்கறிளை விளைவிப்பது இவருடைய சிறப்பம்சம்.
மாத்தி யோசி
இவருடைய அப்பா ஆர். கோபாலும் இவரும் 40 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்துவருகிறார்கள். ஆரம்பக் காலத்தில் இருந்து குறுகிய காலப் பயிர்களான கீரை போன்றவற்றைப் பயிரிட்டு வருகிறார்கள். அதில் நல்ல விளைச்சல் கிடைக்கவே, குளிர் பிரதேசங்களில் விளையும் கேரட், பீட்ரூட், காலிஃபிளவர் போன்ற காய்கறி வகைகளை விளைவிக்கும் எண்ணம் தோன்றியது.
அதற்காக நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஆலோசனை பெற்றனர். அதன்படி, கேரட், பீட்ரூட், முள்ளங்கி, காலிஃபிளவர் போன்ற பயிர்களைப் பயிரிட்டார்கள். இவற்றுக்கு ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதில்லை.
வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளின் எரு, பஞ்சகவ்யம் போன்றவற்றையே பயன்படுத்துகிறார்கள். இதனால் விளைச்சல் அமோகமாக உள்ளது. இந்த விளைச்சல் தந்த நம்பிக்கையில் ஆப்பிள் மரக்கன்றுகள் வாங்கித் தற்போது நட்டுள்ளனர்.
மூன்றே மாதங்கள்
"இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால், எங்களது காய்கறிகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். மேலே குறிப்பிட்ட பயிர்கள் அனைத்தும் மூன்று மாதக் காலப் பயிர்கள் என்பதால், விரைவாக அறுவடை செய்ய முடிவதுடன், கணிசமான லாபமும் ஈட்ட முடிகிறது.
இப்பகுதியில் கேரட், பீட்ரூட் விளைவிப்பதைப் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து, தாங்களும் விளைவிக்க முடியுமா என்ற யோசனையுடன் செல்கின்றனர்’’ என்கிறார் ஜி. சிவகுமார். இவர்களது வயலில் தற்போது பீட்ரூட் விளைவிக்கப்படுகிறது. சகோதரர் தோட்டத்தில் காலிஃபிளவர் விளை விக்கிறார்கள். செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை கேரட், பீட்ரூட் விளைவிக்கிறார்கள்.
போதிய மழைப்பொழிவின்மை உள்ளிட்ட காரணங்களால் விவசாயம் நலிவடைந்துவரும் காலகட்டத்தில், குடும்பத்துடன் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வரும் சிவகுமார் காலத்துக்கேற்ப பயிர்களை விளைவித்து முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
விவசாயி சிவகுமாரை தொடர்புகொள்ள: 80152 - 67009