கடந்த ஆண்டில் கவனம் பெற்ற சுற்றுச்சூழல், இயற்கை, காட்டுயிர் நூல்கள் பற்றி ஒரு பார்வை:
மௌன வசந்தம்
உலகின் முக்கிய 100 புத்தகங்களில் தவறாமல் இடம்பிடிக்கும் சுற்றுச்சூழல் புத்தகம் மௌன வசந்தம். வெளியாகி 50 ஆண்டுகள் ஆகியும் பிரபலம் குன்றாத நூல். கடந்த ஆண்டுதான் தமிழில் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டது. ரசாயன விவசாயத்தின் பாதிப்புகளை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய இந்த நூலே, அந்த விவசாயம் மனித உடல்நலனுக்கும் பூமியின் ஆரோக்கியத்துக்கும் ஏற்படுத்தும் கேடுகளையும் ஆதாரப்பூர்வமாக முதன்முதலில் எடுத்துச் சொன்னது. உலகில் சுற்றுச்சூழல் அக்கறையைத் தீவிரமடையக் காரணமாக இருந்த இந்த நூல், வாசிப்பிலும் தனி அனுபவத்தைத் தரக்கூடியது.
மௌன வசந்தம், ரேச்சல் கார்சன்,
தமிழில்: பேராசிரியர் ச. வின்சன்ட்,
எதிர் வெளியீடு, தொடர்புக்கு: 04259-226012
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
சுற்றுச்சூழல் போராளிகள் தமிழகத்தில் அதிகமில்லை. அதிலும் தள்ளாத வயதிலும் சுற்றுச்சூழல்-விவசாயத்துக்கான போராட்டங்களில் தளராமல் ஈடுபட்டு வருபவர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன். நிலவுரிமையே ஏழைகளுக்கு விடுதலை தரும் என்ற கொள்கையின்படி செயல்பட்டவர். அதற்காக மாற்று நோபல் விருது பெற்ற அவர், நிலமற்ற தலித் மக்களுக்குச் சட்டரீதியாகவே நிலவுரிமையை பெற்றுத் தந்திருக்கிறார். எளிமையும் போராட்டங்களும் நிரம்பிய அவருடைய வாழ்க்கை வரலாறு நூல் இது.
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், பிரமிளா கிருஷ்ணன்,
பூவுலகின் நண்பர்கள்-தடாகம் வெளியீடு, தொடர்புக்கு: 9841624006
தமிழகத்தின் இரவாடிகள்
இரவுகளில் சஞ்சரித்து இரை தேடும் உயிரினங்கள் பெரும்பாலும் அருவருப்புடனும், பயத்துடனும் பார்க்கப்பட்டு வந்துள்ளன. இந்த நிலையில் பூமியின் ஆரோக்கியத்துக்குப் பெரும் பங்காற்றும் இருட்டை உலகமாகக் கொண்ட இந்த உயிரினங்களைப் பற்றிய அடிப்படை விவரங்கள், முக்கியத்துவம், அவற்றைப் பற்றிய மூடநம்பிக்கைகளைக் களையும் வகையில் வெளியாகியுள்ள அடிப்படை நூல் இது. காட்டுயிர் நூல்களுக்கு அழகே, அதில் இடம்பெறும் படங்கள்தான். முழு வண்ணப்படங்களுடன் தமிழிலும் அதுபோன்ற நூல்களைக் கொண்டுவர முடியும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.
தமிழகத்தின் இரவாடிகள், ஏ.சண்முகானந்தம், தடாகம் வெளியீடு,
தொடர்புக்கு: 8939967179
தவிக்குதே தவிக்குதே
நாடுகள், மாநிலங்கள், மனிதர்கள் இடையிலான போட்டியின் மையமாகத் தண்ணீர் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. இந்தப் பின்னணியில் தமிழகம் எதிர்கொள்ளவுள்ள தண்ணீர் பஞ்சம், பற்றாக்குறை தொடர்பாக மாநிலம் முழுவதும் பயணித்து, அதன் பல்வேறு அம்சங்களைப் பதிவு செய்துள்ள நூல்தான் தவிக்குதே தவிக்குதே. தண்ணீர் சேகரிப்புக்கான மாற்று வழிகளையும் முன்வைத்த வகையில் இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது.
தவிக்குதே தவிக்குதே, பாரதி தம்பி,
விகடன் பிரசுரம், தொடர்புக்கு: 044-42634283
நிகழ்காலம்
'புவி வெப்பமடைதல்', 'பருவநிலை மாற்றம்' போன்றவை விஞ்ஞானிகள் மத்தியிலும் வெளிநாடுகளிலும் மட்டுமே புழங்கும் வார்த்தைகள் அல்ல. இந்தப் பிரச்சினைகள் தமிழகத்திலும் தாக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டன என்பதை நேரடியாக விளக்குகிறது மூத்த பத்திரிகையாளர் பொன்.தனசேகரனின் நிகழ்காலம் நூல். சிக்கலான அறிவியல் பிரச்சினையை உள்ளூர் உதாரணங்களுடன் எளிமையாக வாசிக்கும்படி விவரித்துள்ளார்.
நிகழ்காலம், பொன்.தனசேகரன்,
கார்த்திலியா வெளியீடு, தொடர்புக்கு: 044-43042021
பறவைக்குக் கூடுண்டு
புத்தகங்களிலும் பொறியியல் கல்லூரிகளிலும் கட்டிடக் கலையைத் தேடாமல், எளிய மக்களிடம் தேடி, இந்திய மண்ணுக்கான கட்டிடக் கலையைக் கண்டெடுத்த கலைஞன் லாரி பேக்கர். அவருடன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்ட எலிசபெத் பேக்கர், அவருடைய வாழ்க்கை வரலாற்றை விவரிப்பதே பறவைக்குக் கூடுண்டு நூல். பிரிட்டனில் பிறந்தாலும் இந்தியாவெங்கும் சுற்றித் திரிந்து உள்ளூர் கட்டிடக் கலை, அது சார்ந்த தொழில்நுட்பங்களுக்கு லாரி பேக்கர் புத்துயிர் ஊட்டிய கதை.
பறவைக்குக் கூடுண்டு, எலிசபெத் பேக்கர்,
தமிழில்: ஈரோடு ஜீவானந்தம், பூவுலகின் நண்பர்கள்-தடாகம் வெளியீடு,
தொடர்புக்கு: 9841624006
தாய்மைப் பொருளாதாரம்
காந்தியப் பொருளியல் என்ற துறைக்கு வித்திட்டவர், முதலில் காந்தியுடனும் பிறகு காந்தி கிராமத்திலும் வாழ்ந்த ஜே.சி. குமரப்பா. சுற்றுச்சூழல் அக்கறை என்ற துறை கவனம் பெற ஆரம்பிப்பதற்கு நீண்ட காலத்துக்கு முன்னதாகவே தற்சார்புப் பொருளாதாரம், தற்சார்பு விவசாயம், தற்சார்பு சுற்றுச்சூழல் அக்கறைகளைச் சிந்தனைகளாக முன்வைத்தவர் அவர். அன்பு, கருணை, தியாகம், கடமை உணர்வு போன்றவற்றைக் கொண்ட சேவைப் பொருளாதாரமே, காந்தியப் பொருளாதாரம் என்கிறார் அவர். அந்தப் பொருளாதாரச் சிந்தனையை விளக்கும் நூல்தான் தாய்மைப் பொருளாதாரம்.
தாய்மைப் பொருளாதாரம், ஜே.சி. குமரப்பா கட்டுரைகள்,
தமிழில்: ஜீவா, பனுவல் சோலை, தொடர்புக்கு: 044-28353005
இயற்கை வழியில் வேளாண்மை
உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய இயற்கை வேளாண் அறிஞர் மசனாபு ஃபுகோகாவின் எதுவும் செய்யாத வேளாண்மை கொள்கையை விரிவாக விளக்கும் நூல் இயற்கை வழி வேளாண்மை. அவருடைய ஒற்றை வைக்கோல் புரட்சி நூலைவிடவும் இயற்கை வேளாண்மையைப் பேசும் இந்தப் பெரும் நூலை எதிர் வெளியீடு வெளியிட்டிருக்கிறது. தமிழில் வெளியாகும் ஃபுகோகாவின் மூன்றாவது படைப்பு இது.
இயற்கை வழியில் வேளாண்மை, மசானபு ஃபுகோகா,
தமிழில்: கயல்விழி, எதிர் வெளியீடு, தொடர்புக்கு: 04259-226012
தாதுமணல் கொள்ளை
"தென் தமிழகக் கடற்கரையில் கிடைக்கும் விலை மிகுந்த கார்னெட் வகை மணல், அரிய மணல் போன்றவற்றை மிகக் குறைந்த கட்டணத்துக்குத் தோண்டி எடுத்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து பெரும் பணம் ஈட்டப்படுகிறது. இதிலும் அரசு விதிமுறைகள் மீறப்பட்டுப் பெரும் பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது. இதன் காரணமாக உள்ளூர் சுற்றுச்சூழல், நோய்கள் பெருக்கம் போன்றவை அதிகரித்துவிட்டது" என்று குற்றஞ்சாட்டுகிறது, முகிலன் எழுதியுள்ள இந்த நூல்.
தாதுமணல் கொள்ளை, முகிலன்,
ஐந்திணை வெளியீட்டகம்,
தொடர்புக்கு: 7871357575
நீரின்றி அமையாது நிலவளம்
பண்டைத் தமிழகப் பாசன முறைகள், நீராதாரங்களை நமது மூதாதைகள் போற்றிய-நிர்வகித்த விதம், சூழலியல் அக்கறை பற்றி ஆராய்ச்சிகளின் அடிப்படையில் பல கண்டறிதல்களைத் தந்தவர் மறைந்த நீரியல் வல்லுநர் பழ. கோமதிநாயகம். நீர், நிலம், சூழலியல், காடுகள் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பையும், ஒன்றின் சீரழிவு மற்றொன்றைக் கடுமையாகப் பாதிப்பது தொடர்பான வருத்தம் மேலிட, தனது வாதங்களை இந்த நூலில் முன்வைத்திருக்கிறார்.
நீரின்றி அமையாது நிலவளம், முனைவர் பழ.கோமதிநாயகம்,
பாவை பப்ளிகேஷன்ஸ், தொடர்புக்கு: 044 - 28482441
ஒரு மலையும் சில அரசியலும்
மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரைப் பாதுகாப்பதற்கான திட்டத்தை வகுக்கச் சூழலியலாளர் மாதவ் காட்கில் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை அரசு கிடப்பில் போட்டுவிட்டது. மக்கள் சார்பாக அந்த அறிக்கை வாதிட்டதே இதற்குக் காரணம். அதன் சாராம்சத்தை விளக்குகிறது அவரே எழுதிய நூல்.
ஒரு மலையும் சில அரசியலும், மாதவ் காட்கில்,
தமிழில்: ஜீவா, வெளிச்சம் வெளியீடு, தொடர்புக்கு: 0422-4370945
புவிவெப்பமயமாதல்
'புவி வெப்பமயமாதல்' போன்ற நவீன சுற்றுச்சூழல்-அறிவியல் பிரச்சினைகள் நமக்குச் சம்பந்தமில்லாதவை போல இருக்கும் தோற்றத்தை விலக்கி, விளக்கப்படங்களுடன் விளக்குகிறது இந்த நூல்.
புவி வெப்பமயமாதல், டீன் குட்வின்,
தமிழில்: க. பூரணச்சந்திரன், அடையாளம் வெளியீடு, தொடர்புக்கு: 04332-273444
உயிர்த்துளி உறவுகள்
உள்ளூர் முதல் உலகம் வரையிலான சுற்றுச்சூழல், இயற்கை, காட்டுயிர்கள் சந்தித்துவரும் பல்வேறு பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி, அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைக் குழந்தைகள், இளைஞர்கள் புரிந்துகொள்ளும்படி எழுதப்பட்ட எளிமையான நூல்.
உயிர்த்துளி உறவுகள், தேவிகாபுரம் சிவா,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், தொடர்புக்கு: 044-26359906
மயிலு
நமது தேசியப் பறவை மயில் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகள் பற்றி தமிழில் ஆவணப் படம் எடுத்தவர் கோவை சதாசிவம். மயில்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளையும், தனது ஆவணப் படம் திரையிடப்பட்டபோது கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களையும் இந்நூலில் தொகுத்திருக்கிறார்.
மயிலு, கோவை சதாசிவம்,
வெளிச்சம் வெளியீடு, தொடர்புக்கு: 0422-4370945
பாலையெனும் படிவம்
தேசிய அளவில் அனைத்து முனைகளிலும் விவசாயம் சந்திக்கும் நெருக்கடிகளையும், பெருநிறுவனங்கள் , விதைக் கட்டுப்பாடு போன்றவை உருவாக்கும் மறைமுக நெருக்கடிகளையும் நாடறிந்த வேளாண் அறிஞர் தேவீந்தர் சர்மா விளக்கியுள்ளார்.
பாலையெனும் படிவம்?, சே.கோச்சடை, தேவீந்தர் சர்மா,
கருத்துப் பட்டறை, தொடர்புக்கு: 944388117