ஊட்டச்சத்தற்ற குப்பை உணவு வகைகள் (ஜங்க் ஃபுட்) உடல்நலனுக்கு எந்தளவுக்கு மோசமானவை என்பதைப் பற்றி புதிதாக ஒன்றும் சொல்லத் தேவையில்லை. ஆனால், அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சுற்றுச்சூழலுக்கு எப்படிப்பட்ட பிரச்சினையை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி, இதோ ஒரு புதிய தகவல்.
உலகின் மிகப் பெரிய ‘10’ உணவு, பானத் தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்களின் அளவு பின்லாந்து, ஸ்வீடன், டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து நாடுகள் மொத்தமும் சேர்ந்து வெளியிடுவதைவிடவும் அதிகமாக இருக்கிறது.
கோக கோலா, கெலாக்ஸ், நெஸ்லே, பெப்சிகோ, யூனிலீவர் (பழைய இந்துஸ்தான் லீவர்), அசோசியேடட் பிரிட்டிஷ் ஃபுட்ஸ், டனோன், ஜெனரல் மில்ஸ், மார்ஸ், மாண்டிலேஸ் இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக ஆக்ஸ்ஃபாம் நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது.
இந்நிறுவனங்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த எதையும் செய்ய விரும்பவில்லை. நுகர்வோரின் உடல்நலன் பற்றிய கேள்விகளுக்கே மந்தமாகப் பதில் சொல்லும் இவர்கள், பூமியின் நலனைப் பற்றியா கவலைப்படப் போகிறார்கள். சரி, அடுத்த முறை குப்பை உணவு ஒன்றைச் சாப்பிடும் முன் நாம் நிறைய யோசிப்போம்.