உயிர் மூச்சு

நாம் வசிக்கும் பகுதி நமதென்பதறிவோம்! - பொதுமக்களால் மிளிரும் யுனைடெட் இந்தியா நகர்

செய்திப்பிரிவு

அரசு என்னதான் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், நகரவாசிகளும் தங்களால் முடிந்த அளவிலான பங்களிப்பை அளித்தால் மட்டுமே, சுற்றுப்புற சுகாதாரத்தைப் பேணமுடியும் என்பதற்கு நகரில் சில குறிப்பிட்ட பகுதிகளைக் குறிப்பிடலாம். சென்னை அயனாவரத்தில் உள்ள யுனைடெட் இந்தியா நகர் பகுதியைக் கடப்பவர்களுக்கு அப்பகுதி எவ்வளவு அழகாக காட்சியளிக்கும் என்பதனை அறிவார்கள்.

பொதுவாக தென்சென்னையில் சில பகுதிகள் இவ்வாறு இருப்பதைக் காணலாம். ஆனால், வடசென்னையில் பசுமை நிறைந்த இடமாக, ரம்மியமாகக் காட்சியளிக்கிறது என்பதனை அப்பகுதியைக் கடப்பவர்கள் கண்ணாற கண்டிருப்பார்கள். அப்பகுதி அவ்வாறு விளங்க, அப்பகுதிவாசிகள் மேற்கொண்ட முயற்சியே காரணம். அயனாவரத்தில் இப்பகுதிக்கு மிக அருகில் உள்ள சில இடங்கள், பசுமையே இல்லாமல், பொலிவிழந்து காணப்படும் நிலையில், இப்பகுதி அதற்கு நேர்மாறாகக் காட்சியளிக்கிறது.

இது தவிர, சென்னை மாநகராட்சி சார்பில் தெருக்களில் குப்பை சேகரிப்போர், விசில் ஊதியபடி மூன்று சக்கர வண்டியில் வீடு, வீடாகச் சென்று குப்பை சேகரிக்கும் தற்போதைய சிறந்த முயற்சியினை நாம் அறிவோம். ஆனால், சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் இப்பகுதிவாசிகள் அதனை செயல்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி, யுனைடெட் இந்தியா நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவர் ச.எழில்மாறன் நம்மிடம் பகிர்ந்துகொண்டது:-

குப்பையை சேகரிப்பதில் உள்ள சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, எங்கள் குடியிருப்புப் பகுதியில் சில நேரங்களில் குப்பைகள் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் நிலை உருவானது. அதனால், எங்கள் பகுதியினை முடிந்தவரையில் சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் அனைவரும் சேர்ந்து 1997-ம் ஆண்டில் ஒரு திட்டத்தினை அறிமுகப்படுத்தினோம். அதன்படி, தெருவாசிகள் பணம் வசூலித்து ஒரு தள்ளுவண்டி வாங்கி, அதனை ஓட்டுவதற்கு ஒருவரை நியமித்தோம்.

அவர், விசிலை ஊதி ஒலியெழுப்பியபடி வீடு, வீடாகச் சென்று குப்பையை சேகரிப்பார். பின்னர், மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் லாரி வரும்போது, எங்கள் பகுதியில் சேகரித்த குப்பையை ஒப்படைத்துவிடுவார். இந்தத் திட்டத்தினை, சென்னையில் முதல் முதலாக நாங்கள்தான் அறிமுகப்படுத்தினோம். தற்போது, அதனை சென்னை நகரம் முழுவதும், மாநகராட்சி பயன்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது. அதன்மூலம், மாநகராட்சி ஊழியர்கள் ஒரு சில சமயங்களில் வராமல் போனாலும், எங்கள் பகுதியில் குப்பை சேராமல் சுத்தமாக பராமரிக்கமுடிந்தது.

தெருவைச் சுத்தமான வைத்துக் கொள்வதோடு மட்டும் நின்றுவிடாமல், சுற்றுச்சூழலைப் பேணும் நோக்கிலும், எங்கள் பகுதியை அழகாக வைத்துக் கொள்ளும் வகையில், செடி, மரக்கன்றுகளை பத்து ஆண்டுகளுக்கு முன்பு நட்டோம். அவற்றை பகுதிவாசிகள் நன்கு பராமரித்ததால் அவை தற்போது பூத்துக் குலுங்குகின்றன.

சென்னை மாநகராட்சி தரப்பில் குப்பையைக் கொட்டுவதற்காக ஆங்காங்கே தொட்டியை வைத்ததால், நாங்கள் செயல்படுத்திவந்த வீடு, வீடாகச் சென்று குப்பையை சேகரிக்கும் திட்டத்தை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நிறுத்திவிட்டோம். தற்போது, அந்த திட்டத்தை மாநகராட்சியே அமல்படுத்திவிட்டது.

நம் நாட்டைச் சுத்தமாக வைத்திருப்பதற்காக ‘தூய்மையான இந்தியா’ திட்டத்தினை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது. என்னதான் அரசு முயற்சிகளை மேற்கொண்டாலும், பொதுமக்களும் தங்களது பங்களிப்பினைத் தந்தால் மட்டுமே எத்தகையதொரு திட்டமும் வெற்றிபறும். நாங்கள் எங்கள் பகுதியினை ஏற்கெனவே சிறப்பாக பராமரித்துவந்தாலும், நாம் வசிக்கும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என்ற எண்ணத்தினை இளம் தலைமுறையினரிடம் ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக, என்பதற்காக பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியரை அழைத்து விழிப்புணவர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

இதுதவிர, குப்பையை தரம் பிரித்து, அதன் மூலம் உரம் தயாரிக்கும் மாநகராட்சியின் திட்டத்துக்கு உதவவும் முடிவெடுத்திருக்கிறோம். எங்கள் பகுதியில் குப்பையை தரம் பிரித்து வாங்கி, அருகில் உள்ள மாநகராட்சியின் மண்புழு உரம் தயாரிக்கும் மையத்துக்குத் தரத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக மாநகராட்சி அதிகாரிகளுடன் விரைவில் பேசவிருக்கிறோம். இதனால் குப்பையை மறுசுழற்சி செய்யமுடியும். இவ்வாறு எழில்மாறன் கூறினார்.

SCROLL FOR NEXT