கழுத்தில் வெள்ளைத் திட்டு கொண்ட பருந்தைக் கண்டால் 'கிருஷ்ணா... கிருஷ்ணா...' என்று சொல்லிக் கன்னத்தில் போட்டுக்கொள்ளும் வழக்கம் பலரிடமும் உண்டு. ஆனால், பருந்தின் நெருங்கிய சொந்தமான பிணந்தின்னிக் கழுகு (பாறு) நம் நாட்டில் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளது, நம்மில் பலருக்கும் தெரியாது.
சென்னை குரோம்பேட்டை தோல் பதனிடும் பகுதிகளில் ஒரு காலத்தில் காகங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் பிணந்தின்னிக் கழுகுகள் அதிகமாக இருந்திருக்கின்றன. இன்றைக்கு அப்பகுதியில் ஒரு பிணந்தின்னிக் கழுகைக்கூடப் பார்க்க முடியவில்லை.
காணாமல் போன கழுகுகள்
நமது சூழலியலைத் துப்புரவாகப் பராமரிக்கும் துப்புரவாளர் பிணந்தின்னிக் கழுகுகள்தான். நமது சூழலியலைப் பாதுகாப்பதில் மிக நுணுக்கமாகப் பங்களித்து வருகின்றன பிணந்தின்னிக் கழுகுகள்.
பிணந்தின்னிக் கழுகுகள் இரையை வேட்டையாடிக் கொல்வதில்லை. இறந்துபோன உயிரினங்களையே உண்கின்றன. மேலும், இறந்துபோன உயிரினங்களின் உடலில் ஆந்தராக்ஸ், காலரா, ராபிஸ் போன்ற நோய்த் தொற்றுகள் இருந்தால் அந்த உயிரினங்களைத் தின்பதன் மூலம் குறிப்பிட்ட நோய்க் கிருமிகளின் பரவலை இவை தடுக்கின்றன. அந்த நோய்க் கிருமிகளை ஜீரணித்துக் கொள்வதற்கான அமிலம் பிணந்தின்னிக் கழுகுகளின் வயிற்றில் சுரக்கிறது.
டைக்ளோஃபினாக் ஆபத்து
பிணந்தின்னிக் கழுகுகளின் அழிவுக்குக் காரணம் நகர்மயமாக்கம்தான் என்றாலும், முழு முதற் காரணம் கால்நடைகளுக்குத் தரப்படும் 'டைக்ளோஃபினாக்' எனும் வலிநிவாரணி மருந்து. 'டைக்ளோஃபினாக்' மருந்தை உட்கொண்ட கால்நடைகள் இறந்த பிறகு, பிணந்தின்னிக் கழுகுகள் அவற்றை உணவாகக் கொள்கின்றன. அப்போது அந்த உயிரினங்களின் உடலில் எச்சமாகத் தங்கியிருக்கும் 'டைக்ளோஃபினாக்' கழுகுகளின் உடலுக்குள் சென்று அவற்றை மரணத்துக்குத் தள்ளுகின்றன.
"இந்த மருந்தை விற்பனை செய்யும் மருந்துக் கடைகள் பிணந்தின்னிக் கழுகுகளைக் காப்பாற்ற 'இனி இந்த மருந்துகளை விற்பனை செய்வதில்லை' என்று பல ஊர்களில் முடிவெடுத்துவிட்டன. ஆனால், மருந்துகளைப் பரிந்துரைக்கும் கால்நடை மருத்துவர்கள், அந்த வலிநிவாரணியின் ஆபத்தைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்" என்கிறார் பிணந்தின்னிக் கழுகுகளைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவரும் பறவையியலாளர் சு. பாரதிதாசன்.
புதிய பிரச்சினை
பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கிய ஆரம்பக் காலத்தில், 'டைக்ளோஃபினாக்' தாக்குதல் மட்டுமே அவற்றின் அழிவுக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. ஆனால் சமீபகாலமாக 'சடலத்துக்கு விஷம் தடவுதல்' (carcass poisoning), அதாவது புலி போன்ற விலங்குகளால் கொல்லப்பட்ட இதர விலங்குகளின் உடலில் விஷத்தை வைத்துவிடுவதும் இக்கழுகுகள் அழிவுக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
புலிகள் போன்ற 'ஆட்கொல்லி' விலங்குகள் ஒரு மாட்டைக் கொன்றால், உடனடியாக முழு இறைச்சியையும் தின்றுவிடாது. இரையின் உடலை மறைவான இடத்துக்கு இழுத்துச் சென்று இரண்டு - மூன்று நாட்கள் வைத்திருந்தே உண்ணும். அப்போது, இந்தப் புலிகள் இதர மாடுகளைக் கொன்றுவிடக் கூடாதே என்ற அச்சத்தில், ஏற்கெனவே புலிகளால் கொல்லப்பட்ட மாட்டின் உடலில் விஷத்தைத் தடவி வைத்துவிடுகிறார்கள் உள்ளூர் மக்கள். அவற்றைப் புசிக்கும் புலியும் இறந்துவிடும். புலியைப் புசிக்கவரும் பிணந்தின்னிக் கழுகுகளும் இறந்துவிடுகின்றன.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
இந்தப் பிரச்சினைகள் குறித்துப் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிணந்தின்னிக் கழுகு பாதுகாப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் 'அருளகம்' அமைப்பு, பென்சில்ஸ்ராக், சென்னை இயற்கையாளர்கள் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து சென்னை பல்லாவரம் வேல்ஸ் வித்யாஸ்ரம் பள்ளியில் மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியையும், 'பிணந்தின்னிக் கழுகுகள் விழா'வையும் சமீபத்தில் நடத்தின.
சுமார் 3,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். சொல்லி வைத்தார்போல பெரும்பாலான மாணவர்கள் இறக்கையை விரித்துக்கொண்டு மரக்கிளையில் பிணந்தின்னிக் கழுகு அமர்ந்திருப்பதுபோலத்தான் வரைந்திருந்தார்கள்.
அதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது ஒன்றுதான்... மரங்களையும் பறவைகளையும் காப்பாற்றக் குழந்தைகள் ஆர்வமாக இருக்கிறார்கள். நாம்தான் அவர்களுக்கான சரியான பாதையை அமைத்துக் கொடுக்க வேண்டும்!