பூமியின் உட்பகுதியில் இருந்து கிடைக்கும் வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்று சொன்னால், சிலர் சிரிக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் இது நமக்கு நிறைய கைகொடுக்கப் போகிறது. ஏதாவது நடக்கிற கதையா சொல்லுங்க என்று சொல்பவர்கள், ஐஸ்லாந்துக்குப் போய்ப் பார்க்கலாம். ஏனென்றால், அந்நாட்டில், 70 சதவீத ஆற்றல் புவிவெப்ப ஆதாரங்களில் இருந்துதான் பெறப்படுகிறது.
புவிவெப்ப ஆற்றலை எப்படிச் செயல்திறன் கொண்டதாக மாற்ற முடியும் என்று ஐஸ்லாந்து விஞ்ஞானிகள் யோசித்தார்கள். அதற்கான திட்டத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 2,100 மீட்டர் ஆழத்தில் சூடான, உருகிய பாறைக்குழம்பை (மக்மா) பார்த்தார்கள். இந்த மக்மா 900-1,000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் நீராவியை உருவாக்கியது. இந்த எதிர்பாராத கண்டுபிடிப்பு உலகின் முதல் புவிவெப்ப ஆற்றல் மையத்தை உருவாக்கக் காரணமானது. உருகும் மக்மாவைக் கட்டுப்படுத்தி இன்னும் சிறப்பாக இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றி ஐஸ்லாந்து நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. எதிர்காலத்தில் இந்த மின்சாரம் உலகை ஆளலாம்.