குறையும் கரும்பு விளைச்சல்
இந்தியாவில், 2019-20ம் ஆண்டின் கரும்பு உற்பத்தி 18-சதவீதம் குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட கடும் வறட்சியும் தாமதமாக வரும் பருவமழையும் இந்த ஆண்டு கரும்பு உற்பத்தி குறைந்துள்ளதற்கான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.
இந்தியக் கரும்பு உற்பத்தியில் மகாராஷ்டிரம் இரண்டாம் இடம் வகிக்கிறது, மேலும், அங்கு ஏற்பட்டுள்ள வறட்சியால் சர்க்கரை ஏற்றுமதி தொய்வடைந்துள்ளது. உலக சர்க்கரை உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது.
வேளாண்மையும் ரோபோட்டும்
வேளாண் துறையில் ஆட்கள் பற்றாக்குறை உலகம் முழுவதும் பெருகிக் கொண்டிருக்கிறது. வேளாண்மை ஒரு கூட்டு வேலை. ஒவ்வோர் அடுக்கிலும் ஆட்கள் தேவைப்படுகிறார்கள். குறிப்பாக அறுவடை செய்வது சற்று சிரமமான வேலை, இந்நிலையில் கேம்பிரிட்ஜ் விஞ்ஞானிகள் காய்கறி அறுவடை செய்வதற்கு ஒரு ரோபோட்டைக் கண்டுபிடித்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட இந்த ரோபோவை முறையான சோதனைகள் மூலம் வடிவமைத்திருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். ‘வெஜ்போட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ காய்கறி அறுவடையில் ஈடுபடப் போகிறது.
படைப்புழுத் தாக்கத்துக்கு நிவாரணம்
வெளிநாட்டுப் படைப்புழுத் தாக்குதலால் தமிழ்நாட்டு மக்காச்சோள உற்பத்தி கணிசமான அளவு குறைந்ததுள்ளது. சாகுபடி செய்த 3.55 லட்சம் ஹெக்டரில் 2.20 லட்சம் ஹெக்டர் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு, குறு உழவர்கள் பாதிக்கபட்டுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட உழவர்கள் 2.93 லட்சம் பேருக்கு ரூ.186 கோடி நிவாரண நிதியாக வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்துள்ளார்.
- தொகுப்பு: சிவா