இயற்கை வேளாண் உணவைச் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? அப்படிச் சாப்பிடப் பழகிவிட்ட பிறகு, நாம் எப்போதாவது வெளியில் சாப்பிட நேர்ந்தால், அது நம்மை அதிகமாகப் பாதிக்குமா?
நாம் முன்பே பார்த்ததுபோல், நாம் உண்ணும் உணவிலிருந்து வரும் நஞ்சு பல உடல் உபாதைகளை, நோய்களை விளைவிக்கிறது. இயற்கை உணவை உண்பவர்களுக்கு இந்தச் சாத்தியக்கூறுகள் குறைவு.
மேலும் பல மரபு அரிசி, சிறுதானிய வகைகளை உண்பதால் பெரும் நன்மைகள் கிடைக்கின்றன - நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்றவை குறைவது ஆவணப் படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இயற்கை வேளாண் பொருட்கள் இயற்கையாகவே பல மருத்துவச் குணங்களைக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் பொதுச்
சந்தையில் நடைபெறும் கலப்படம், சேர்க்கப்படும் வேதிச் சுவையூட்டிகள், பதப்படுத்தும் வேதிப்பொருட்கள் போன்றவை இயற்கை வேளாண் பொருட்களில் இல்லாததால், மேலும் பல நன்மைகள் கிடைக்கின்றன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயற்கை வேளாண் உற்பத்தியைத் தொடர்ந்து பயன்படுத்திவருபவர்கள், தாங்கள் பெற்ற நன்மைகளைப் பற்றி அக்கறையுடன் பகிர்ந்துகொள்வதைப் பார்க்கிறோம். அதிலும் வயதில் மூத்தவர்கள் பலரும், நஞ்சற்ற இயற்கை உணவை உட்கொள்வதால் பல உடல் உபாதைகளிலிருந்தும், சளி இருமல் போன்ற நீடித்த நோய் நிலையிலிருந்தும் நிவாரணம் கிடைப்பதாகக் கூறுகின்றனர்.
இந்தக் கேள்வியின் இரண்டாவது பகுதி விதண்டாவாதத்துக்காகக் கேட்கப்படும் கேள்வி. பாதுகாப்பான உணவைத் தொடர்ந்து உண்டுவரும்போது, எப்போதாவது வெளியில் சாப்பிட நேர்ந்தால், அது எப்படி உடலை அதிகமாகப் பாதிக்கும்? ஒரு வேளை அதிகமாகப் பாதிக்கும் என்ற அச்சமிருந்தால் வெளி உணவைத்தானே நிறுத்த வேண்டும்? இப்படிக் கேள்வி கேட்டு, நஞ்சில்லா இயற்கை உணவு உண்பதை தள்ளிப்போடக் கூடாது. இந்த வாதத்தில் ஒரு துளிகூட உண்மை இல்லை.
கட்டுரையாளர்,
இயற்கை வேளாண் நிபுணர்
தொடர்புக்கு: organicananthoo@gmail.com