உயிர் மூச்சு

கால்நடைகளுக்குத் தீவனமாகும் பசுந்தாள் உற்பத்தி

வி.சுந்தர்ராஜ்

வி

வசாய நிலத்தில் பயிர்கள்தான் லாபம் தரும் என்பதில்லை. கால்நடைத் தீவனமான பசுந்தாளை உற்பத்தி செய்வது மூலமாகவும் நல்ல லாபம் ஈட்டலாம்.

கால்நடைத் தீவனத் தட்டுப்பாடு நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. தீவனம் வாங்குவதற்குச் செலவிடும் தொகை கட்டுப்படியாகாததால் கால்நடை வளர்ப்புத் தொழிலையே பல விவசாயிகள் விலகுகின்றனர்.

கால்நடைகளுக்கு வைக்கோல், புல், புண்ணாக்கு, செயற்கைத் தீவனம் போன்றவை கிடைத்தாலும், அவற்றுக்கு விவசாயிகள் அதிகமாகச் செலவிட வேண்டியுள்ளது. இந்தத் தீவனங்களால் கால்நடைகளின் உடலுக்குப் போதிய வலிமை கிடைத்தாலும்கூட, பச்சைப் பசேல் என்றிருக்கும் புல்லில் கிடைக்கும் நார்சத்துக்கு ஈடு இணை வேறு இல்லை.

05CHVAN_pasuntheevanam_photo__8_.jpg

தமிழகத்தில் போதிய மழையின்மையால் வயல், வரப்புகள் எல்லாம் தரிசாகிக் கிடக்கும் இந்தத் தருணத்தில் புல்லுக்கு எங்கே போவது? புல் பூண்டுகள்கூட முளைக்காமல் கட்டந்தரையாகக் காணப்படுவதால், மாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

எவ்வளவு வறட்சி வந்தாலும் நமக்குத் தேவையான உணவை, வேறு இடங்களில் இருந்து வரவழைத்துக்கொள்கிறோம்.

ஆனால், ஐந்து அறிவுள்ள கால்நடைகள் எங்கு சென்று உணவுத் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ளும்? கால்நடை வளர்ப்பவர்கள் அவற்றின் தேவையை அறிந்து செயல்பட வேண்டும்.

தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்நடைகளை வைத்திருக்கும் விவசாயிகள் மத்தியில் பசுந்தீவனம் பிரபலமாகிவருகிறது. பண்ணைகளில் பம்பு செட் வைத்து பாசனம் செய்பவர்கள் தங்கள் சாகுபடி பரப்பின் ஒரு பகுதியில் பசுந்தீவனம் பயிரிட்டால் கால்நடைகளுக்குத் தீவனம் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், அந்தப் பகுதியையே பசுமையாக்கிவிடுகிறது பசுந்தாள்.

பசுந்தாள் உற்பத்தி செய்வதன் மூலம் மாடுகளுக்கு எப்படித் தீவனம் வழங்குவது என்பது குறித்து கும்பகோணம் ஆலையடி சாலையைச் சேர்ந்த முன்னோடி விவசாயி வி. ராமச்சந்திரன் பகிர்ந்துகொள்கிறார்: என்னுடைய வயலில் பம்புசெட் மூலம் கரும்பு, வாழை பயிரிட்டு வருகிறேன். இதில் மூன்று ஏக்கரில் கோ -4 என்ற பசுந்தாள் கரணையை ஒரத்தநாடு கால்நடைப் பண்ணையிலிருந்து வாங்கி வந்து நட்டேன்.

பசுந்தாள் பயிரிட்டு 60 நாட்களுக்குப் பிறகு அதை வெட்டி கால்நடைகளுக்காக விற்பனை செய்துவருகிறேன். 45 நாட்களுக்கு ஒரு முறை பசுந்தாளை வெட்டி விற்பனை செய்கிறேன். மூன்று ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ளதால் தினமும் ஒன்றரை டன் பசுந்தாள் கிடைக்கிறது. ஒரு கிலோ ரூ. 5 என விற்பனை செய்துவருகிறேன். என்னுடைய இடத்துக்கே வந்து பெரிய பெரிய மாட்டு பண்ணை நடத்துவோர் பசுந்தாளை வாங்கிச் செல்கின்றனர். இதன் மூலம் சராசரியாக மாதம் ரூ. 1 லட்சம்வரை எனக்கு வருமானமாகக் கிடைக்கிறது.

பசுந்தாளை நடுவது எப்படி?

பசுந்தாளை நான்கு அடி இடைவெளியில் நட வேண்டும். பாத்தி அமைத்து, பட்டம் பிரித்து நடுவில் கரும்புக் கரணைபோல் நட வேண்டும். அப்போதுதான் ஒரு குத்துக்கு 30 தூர்கள் வெடிக்கும். பத்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட வேண்டும். வாரந்தோறும் பசுந்தாளை வெட்டும்போது, அதன் அருகில் உள்ள இடத்தைச் சுத்தம் செய்து மண்ணை வெட்டிப் புரட்டி போட வேண்டும். 

பசுந்தாள் தோகை நல்ல பச்சை பசேல் என்றிருக்கும். இப்படி இருந்தால் அதிகமான நார்சத்து கிடைக்கும். இந்த பசுந்தாளை கறவை மாடுகள் அதிகம் விரும்பி உண்ணும். இப்படி உண்ணும்போது, மாடுகளுக்குத் தேவையான உடல் வலிமையும் பால் கறவையும் அதிகரிக்கும். 

பசுந்தாளை குளத்தின் கரைகளிலும் நடலாம், இந்தப் பசுந்தாளை மீன்களும் கடித்து உண்கின்றன. கால்நடைகளுக்கு தீவனம் இல்லையே என்ற கவலை இல்லாமல் வழங்கலாம். பசுந்தாளை விவசாயிகள் நட்டு வளர்த்தால், மாடுகளுக்கான தீவனச் செலவு குறையும், பால் உற்பத்தி பெருகும் என்று கூறும் விவசாயி ராமச்சந்திரன், கடந்த இரண்டு ஆண்டுகளாக பசுந்தாளை உற்பத்தி செய்துவருகிறார்.

விவசாயி ராமச்சந்திரனைத் தொடர்புகொள்ள: 93445 52333.

SCROLL FOR NEXT