உயிர் மூச்சு

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 42: தனித்தன்மைகள் தெரியுமா?

பாமயன்

பண்ணை உறுப்புகளின் பண்புகளில் அடுத்த பகுதி, ஒவ்வொன்றின் தனிப்பட்ட தன்மைகள். அவற்றையும் நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். எடுத்துக்காட்டாக, தக்காளிச் செடி ஒன்றை பகுப்பாய்வு செய்து பார்த்தோமானால் அதற்கான கொடுப்பினைகளாக விதை, நீர், உரம், பயிர் பாதுகாப்பு போன்றவையும், கொள்வினை என்று எடுத்துக்கொண்டால் தக்காளிப் பழம், காய், உரமாக செடிக் கழிவுகள், அடுத்த சாகுபடிக்கான விதை, உடன் விளைவான புதிய பூச்சிகள், நோய்கள் போன்றவற்றைப் பட்டியல் இடலாம்.

இதையடுத்து அந்தத் தக்காளிச் செடியின் ரகம், அதாவது வகை என்ன? விதை மீண்டும் முளைக்கும் தன்மை கொண்டதா? அதன் பழத்தின் சுவை புளிப்பா, சற்று இனிப்புள்ளதா? அது கொடியினமா அல்லது செடியினமா என்பது போன்ற கேள்விகளை எழுப்பினால், அதற்குக் கிடைக்கும் விடையே அதன் தனிப்பட்ட தன்மைகள் அல்லது குணங்கள். இது மிகவும் அடிப்படையானது.

இது கத்தரிக்காய்க்கும் பொருந்தும், கோழி, ஆட்டுக்கும் பொருந்தும். ஆடுகளில் செம்மறியை எடுத்துக்கொண்டால் இறைச்சிக்கான ஆடும் உண்டு, ‘சண்டைக்கிடா' எனப்படும் ‘கச்சைகட்டிக் கிடா' வகையும் உண்டு. நாய்களை எடுத்துக்கொண்டால், காவல் நாய்களும் உள்ளன. மேய்ச்சல் நாய்களும் உள்ளன. இவற்றைத் தனிப்பட்ட தன்மைகள் அல்லது குணங்கள் என்கிறோம்.

ஒன்றின் தனித்தன்மைகள், பழக்க வழக்கங்கள் தெரியாமல் நாம் பண்ணையத்தில் இறங்கும்போது பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக நாட்டுக் கோழி வளர்ப்பில், அதன் பண்புகள் தெரியாமல் வளர்க்கும்போது சில சிக்கல்கள் ஏற்படுவதை அனுபவ உழவர்கள் அறிவார்கள். சிறுவிடைக் கோழி என்றும் பெருவிடைக் கோழி என்றும் இரண்டு பிரிவுகள் நாட்டுக் கோழிகளில் உண்டு.

சிறுவிடைக் கோழிகளின் உடல் அதிகம் பெருக்காது, அதாவது இறைச்சியை உருவாக்காது. ஆனால், அவற்றின் குஞ்சு பொரிப்புத் திறன் அலாதியானது. வளர்ப்புத் திறன் சிறப்பானது. பெருவிடைக் கோழிகள் விருப்பமுடன் அடைகாப்பது கிடையாது. எனவே ஒரு திறமையான பண்ணையாளர், பெருவிடைக் கோழிகளின் முட்டைகளை சிறுவிடைக் கோழிகளை வைத்து அடைகாக்கத் தெரிந்துகொண்டால் போதுமானது. அப்படியானால் இரண்டு வகைக் கோழிகளும் நமது பண்ணையில் இருக்கும். இரண்டும் ஒன்றுக்கொன்று உதவ முடியும்.

சில கோழிகள், குஞ்சுகளைச் சிறப்பாக வளர்க்கும். ஆனால், பிற கோழிகளின் குஞ்சுகளை அருகில் அண்டவிடாது. கொத்தி எறிந்துவிடும். சில கோழிகள் குஞ்சுகளைச் சரியாக வளர்க்காது. இதனால் நாட்டுக்கோழி வளர்ப்பில் குஞ்சுகளின் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும்.

கோழிகளின் முக்கியமான ஒரு பண்பு, இரவில் அவற்றுக்குக் கண் தெரியாது. அந்தப் பண்பை ஒரு பண்ணையாளர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் பிற கோழிகளின் குஞ்சுகளை நன்றாக வளர்க்கும் கோழிகளுடன் சேர்த்துவிட்டால், அவை தனது குஞ்சுகள்தாம் இவை என்று ‘தவறாக' நினைத்து சேர்த்துக்கொள்வதுடன், நன்றாகவும் வளர்த்துவிடும்.

எனவே பண்ணை உறுப்புகளின் தன்மைகள் என்பது அவற்றுக்குத் தேவையானவை, அவை நமக்குத் தருபவை, அவற்றின் பழக்க வழக்கங்கள், சிறப்புகள், தனித்தன்மைகள் முதலியவையே. இவற்றை அறிந்து உரிய இடத்தில் உரிய நேரத்தில் உரிய முறையில் இணைக்கும்போது பண்ணை வெற்றிகரமான பண்ணையாக மாறும்.

(அடுத்த வாரம்:

பண்ணைக் கூறுகளை சீரிணைத்தல்)

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்

தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

SCROLL FOR NEXT