உயிர் மூச்சு

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 40: சந்தைப் புரிதல் வேண்டாமா?

பாமயன்

ஒரு பண்ணையாளருக்கு தனது பண்ணை அமைந்துள்ள நிலத்தின், அதாவது அந்த நிலத்தில் வாழும் மக்களின் பண்பாடு எப்படி உள்ளது என்ற புரிதல் வேண்டும். ஆடுகளை உண்ணும் பழக்கம் உண்டா? மாடுகளை உண்ணும் பழக்கம் உண்டா? கத்தரிக்காயில் எந்த வகை கத்தரியை மக்கள் விரும்பி உண்கிறார்கள் என்பது மாதிரியான பழக்கவழக்கங்கள் பற்றிய அறிவு வேண்டும். வெள்ளைப் பன்றியை நன்றாக வளர்க்க முடியும் என்று தெரிந்துகொண்டதாலேயே, அதை உண்ணும் பழக்கமே இல்லாத ஒரு பகுதியில் சந்தைப்படுத்த முடியுமா?

வணிலா என்ற ஒரு மணப்பயிரை (ஐஸ்கிரீமில் பயன்படுத்துவது) நமது உழவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் பயிரிட ஆரம்பித்தனர். அந்தப் பயிரின் முக்கியமான சிக்கல், மகரந்தச் சேர்க்கை. வணிலாக்கொடியில் மெலிபோன் (melipona bee) என்ற தேன் பூச்சி மகரந்தச் சேர்க்கையை இயற்கையாக நிகழ்த்தும், ஆனால் அது நம் நாட்டில் இல்லை. எனவே மகரந்தச் சேர்க்கைக்காக கைகளால் மகரந்தத் தூளை எடுத்துத் தடவும் வேலையை ஆட்களைக் கொண்டுச் செய்ய வேண்டும். இதனால் செலவு அதிகம் பிடித்தது. விளைவு, சந்தையில் அந்தப் பயிர் நிற்க முடியவில்லை. உழவர்கள் பெருத்த நட்டம் அடைந்தனர்.

எந்த முறையில் அமைப்பது?

இதேபோல ஈமுக் கோழி என்ற மோசடி நடைபெற்றது. நமது நாட்டில் சந்தையே இல்லாத ஒன்றுக்கு அத்தனை விளம்பரப்படுத்தி விற்றுத் தீர்த்தனர். இதில் உழவர்கள் மட்டுமல்லாது, பேராசை கொண்ட நடுத்தர மக்கள் பலரும் ஏமாந்து போயினர். எனவே பண்ணையின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் பற்றிய தெளிவான அறிவு இல்லாவிட்டால் பண்ணையை வடிவமைக்கவும் முடியாது, பயன் ஈட்டவும் முடியாது.

ஒரு பண்ணையின் அடிப்படைக் கூறுகள் இப்படி மூன்று பெரும் பிரிவுகளாக உள்ளன. அவற்றை நாம் உள்வாங்கிக்கொண்டு பண்ணையை வடிவமைக்க வேண்டும். முதலில் பண்ணை வடிவாக்க முறைகளைப் பற்றிச் சுருக்கமாகப் பார்த்தோம், இப்போது பண்ணை வடிவமைப்புக் கூறுகளை சுருக்கமாகப் பார்த்துள்ளோம். பண்ணைக் கூறுகளை எந்த முறையில் அமைப்பது என்பதுதான் வடிவமைப்பு. இதை எந்த அளவு திறமையுடன், நமது படைப்பாற்றலின் துணைகொண்டு அமைக்கிறோமோ, அந்த அளவுக்குப் பயன் கிடைக்கும்.

(அடுத்த வாரம்: பண்ணைக் கூறுகளின் தன்மைகள்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

SCROLL FOR NEXT