தமிழகம் ஒரு அசாதாரணமான பூமி. 2015-ம் ஆண்டில் பல மாவட்டங்களில் வெள்ளம் கரைபுரளும் அளவுக்கு மழை பெய்தது. 2016-ம் ஆண்டில் மாநிலம் முழுக்கவே வரலாறு காணாத வறட்சி. ஆறுகள், ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் என எத்தனையோ நீராதாரங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் பலவற்றை மணல் கொள்ளைக்காகக் காவு கொடுத்துவிட்டு நிற்கிறோம். இருக்கின்ற நீர்நிலைகளைப் பாதுகாக்க முடியாமல், பக்கத்து மாநிலங்களிடம் நதிநீர்ப் பங்கீட்டுக்காகக் கையேந்த வேண்டிய நிலை.
இப்படியான சூழ்நிலையில், தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்பட்ட தஞ்சை பாசனப் பகுதியில் அடுத்தடுத்து விவசாயிகளின் தற்கொலை நிகழ்வுகள். ‘விவசாயத்தைக் காப்பாற்றுவது இருக்கட்டும். முதலில் விவசாயிகளைக் காப்பாற்றுங்கள்’ என்பதுதான் பாதிக்கப்பட்ட மக்களின் வேதனை. அந்த வேதனையின் எதிரொலிதான்... டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம்!
வறட்சி தணிக்குமா நிதி?
தமிழகத்தின் சராசரி மழை அளவு ஒரு வருடத்துக்கு 920 மி.மீ. முதல் 1,200 மி.மீ. வரை. இந்தப் பருவமழை அளவில், கூடுதலோ குறைச்சலோ இருக்கலாம். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் மழை, குறிப்பிடத்தக்க அளவு சரிந்திருக்கிறது. அதிலும் கடந்த ஆண்டு பதிவான மழையின் அளவு 543 மி.மீ. மட்டுமே. இந்த அளவு குறைந்த மழை, இதற்கு முன்பு 140 வருடங்களுக்கு முன்பு பதிவாகியிருக்கிறது. 1876-ம் ஆண்டு தமிழகத்தின் மழை அளவு வெறும் 534 மி.மீ. மட்டும்தான்.
ஒரு பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பருவமழையுடன் சேர்த்துத்தான் கணக்கிட வேண்டும். பருவம் தப்பினால், வாழ்க்கைத் தரமும் குறையவே செய்யும். அப்படியான சூழ்நிலையில், பொருளாதார நெருக்கடிகள் கழுத்தை நெறிக்க, விவசாயிகள் தற்கொலைக்கு உள்ளாகிறார்கள்.
ஆனால் இந்த உண்மையை அரசியல்வாதிகள், அதுவும் தமிழக அரசியல்வாதிகள் உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை. காரணம், கடந்த ஆண்டு தமிழகம் வறட்சியால் பாதிக்கப்பட்டது என்பதையே, ஆளும் அரசு சமீபத்தில்தான் ஒப்புக்கொள்ளவே தொடங்கியிருக்கிறது. ஆனால் கேரளத்திலோ கர்நாடகத்திலோ நிலைமை வேறு. கடந்த ஆண்டே தங்கள் மாநிலத்தை வறட்சி பாதிக்கப்பட்டதாக அறிவித்ததோடு நில்லாமல், மத்திய அரசிடமிருந்து வறட்சி நிவாரண நிதியையும் பெற்றுவிட்டன.
தமிழகத்தின் நிலை, பரிதாபத்துக்குரியது. வறட்சி நிவாரண நிதியாக ரூ.39,565 கோடி ரூபாய் கேட்கிறார்கள் விவசாயிகள். ஆனால் தமிழக அரசோ ரூ.2,247 கோடி ரூபாய் தேவை அறிவிக்கிறது. வறட்சி பாதித்த 32 மாவட்டங்களையும் ஆய்வு செய்த மத்தியக் குழுவோ, ரூ. 2,096.80 கோடி ரூபாய் போதும் என்று பரிந்துரைக்கிறது. அந்தக் குழுவின் துணைக் குழுவோ, ‘அவ்வளவு எதற்கு? ரூ.1,748 கோடி ரூபாய் மட்டும் போதும்’ என்கிறது. விவசாயிகள் கேட்ட நிவாரணத் தொகையின் அளவு எங்கே, நிபுணர்கள் பரிந்துரைக்கும் தொகையின் அளவு எங்கே? இது பசித்த வயிற்றுக்கு, ஒரு சிட்டிகை நீர் புகட்டுவது போன்றது.
வலுப்பெறும் போராட்டம்
இந்தப் பின்னணியில்தான் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாகத் தேசியத் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்திவந்தனர்.
போராட்டத்தில் முதியவர்கள், பெண்கள், நோயாளிகள் எனப் பலதரப்பட்ட விவசாயிகள் பங்கேற்றிருக்கின்றனர். அத்தியாவசியத் தேவைகளைக்கூடப் பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலையில், அங்கு அவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். மத்திய அரசால் இப்போதுவரை கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் இவர்களின் பசியையும் தாகத்தையும் தணித்திருக்கிறார்கள் சில நல்ல தமிழ் உள்ளங்கள். அவர்களில் ஊடகவியலாளரான சுசித்ராவும் ஒருவர். போராட்டம் நடக்கும் பகுதியின் கள நிலவரங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.
“போராட்டத்தின் ஆரம்பத்தில் சுமார் 110 விவசாயிகள் இருந்தனர். அவர்களில் பலர் 60 வயதுக்கும் மேலான முதியவர்கள். அவர்களில் நீரிழிவு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினை கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். போராட்டம் ஒரு வாரத்துக்கும் மேலாக நீண்டதில், சுமார் 15 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஆறு பேரின் நிலை மிகவும் மோசமானதால், அவர்கள் ஊருக்குத் திரும்ப அனுப்பப்பட்டனர். மீதமுள்ள ஒன்பது பேர் டெல்லி ஆர்.எம்.எல். மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்” என்பவர் மேலும் பகிர்ந்துகொண்ட தகவல்கள் பரிதவிக்கச் செய்கின்றன.
“இந்த விவசாயிகளில் சிலர் மனித மண்டை ஓடுகள், எலும்புகள் ஆகியவற்றைக் கொண்டுவந்துள்ளனர். வறட்சி காரணமாகத் தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் மண்டை ஓடுகள் அவை. இறந்தவர்களின் குடும்பத்தினரின் சம்மதத்தோடு அந்த எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டன.
‘இந்த நிலைமை தொடர்ந்தால், மொத்தத் தமிழகத்தின் நிலையுமே இதுதான்’ என்று சொல்லாமல் சொல்லும் விதமாக, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும்படியான போராட்டமாக இதை மாற்றியிருக்கிறார்கள். நாட்டில் பாதுகாப்பு அமைச்சகம் போன்ற அமைச்சகங்களுக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட்டின் அளவே சுமார் ரூ. 40 ஆயிரம் கோடி அளவுக்குத்தான் வரும். ஆனால், அந்த அளவுக்கு நமது விவசாயிகளின் நிவாரணத் தேவை இருக்கிறது. எனவே, இவர்களின் கோரிக்கையை மத்திய அரசு முழுமையாக ஏற்குமா என்பது சந்தேகம்தான்” என்கிறார்.
இது நியாயமா?
மறைந்த கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி 1976-ம் ஆண்டு ‘பறா’ எனும் குறுநாவலை எழுதினார். ‘பறா’ என்ற கன்னடச் சொல்லுக்கு, ‘வறட்சி’ என்று பொருள். கர்நாடக மாநிலத்தின் மாவட்டம் ஒன்றில் நிலவும் வறட்சியே கதையின் மையம். அந்த மாவட்டத்தின் எம்.எல்.ஏ., தன் மாவட்டத்தை வறட்சி பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்து நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று முதல்வரைக் கோருகிறார். ஆனால், முதல்வரோ, தனக்கு வளைந்துகொடுக்காத அந்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வின் பேச்சைத் தட்டிக் கழித்துக்கொண்டே இருக்கிறார்.
ஒரு கட்டத்தில், அந்த மாவட்ட மக்கள் வன்முறையைக் கையில் எடுக்கிறார்கள் என்பதோடு அந்தக் கதை முடியும். இந்த நாவலை மறுவாசிப்புச் செய்யும்போது, தற்போதைய தமிழகத்தின் நிலைக்கு அந்தக் கதை வெகுவாகப் பொருந்திப்போவதை உணர்ந்துகொள்ள முடியும்.
தங்களுக்குப் பசித்தபோதும், நமக்குச் சோறிட்டுவிட்டு, எலியைப் பிடித்துத் தின்றவர்கள் விவசாயிகள். அவர்களை இத்தனை நாளைக்குப் பிறகு நாம் எந்த அளவுக்கு மதிக்கிறோம் என்பது வெளிப்பட்டிருக்கிறது. வானம் பொய்த்தது இயற்கை நிகழ்வு. ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மிகக் குறைந்த நிவாரண உதவி, அரசு நிர்வாகத்தின் மனதிலும் வறட்சி நிலவுவதையே எடுத்துக்காட்டுகிறது.