பொதுவாக வெட்டுக்கிளி என்றால் உடனேயே பச்சை நிறத்தில் எதிரெதிர் திசையில் தத்தித் தத்திப் போகும் வெட்டுக்கிளியே நம் மனதில் தோன்றும். என்னுடைய காட்டுப் பயணங்களில் பார்த்தும், ரசித்தும் வருகின்ற பல வெட்டுக்கிளிகளின் திட்டவட்டமான பெயர்களை அறிய முடிந்ததில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு பாபநாசம் அருகேயுள்ள களக்காட்டில் கண்ட வெட்டுக்கிளியின் உடல் மணல் பழுப்பு நிறத்தில் காணப்பட்டது. உடலின் இரண்டு பக்கமும் அடர் பழுப்பு நிறப் பட்டைகள் தென்பட்டன. கால்கள், உணர்கொம்புகள், கண்கள் யாவும் பழுப்பு நிறத்தில் இருக்க, உடலின் மேல்பகுதியில் சிவப்பு திட்டொன்றும் காணப்பட்டது. கால்கள் முள்முடிகளுடன் இருந்தன.
மணல் பழுப்பு வெட்டுக்கிளியைக் கண்டதும், ஒளிப்படம் எடுக்க அருகில் நெருங்க, வழக்கம்போல் அது தாவிச் சென்று அருகில் இருந்த புதர்ச்செடிக்குள் உட்கார்ந்துவிட்டது. ஒளிப்படம் எடுக்க வாய்ப்பற்ற காரணத்தால், காலை வெயிலில் சிறிது நேரம் காத்திருக்கத் தொடங்கினேன். திடீரென என்
தலையின் மீது ஒரே தாவாகத் தாவி உட்கார்ந்தது அந்த வெட்டுக்கிளி. புதர்ச்செடியில் இருந்த ஏதோவொரு இடையூறு அல்லது இரைகொல்லியிடம் இருந்த தப்புவதற்கு அப்படிச் செய்திருக்கலாம்.
பிறகு என் மீதிருந்து நீண்டு வளர்ந்திருந்த புல்லின் மேல் தாவி அமர்ந்தது. உடனடியாக அதைப் படமெடுத்தேன். பூச்சிகளை ஒளிப்படம் எடுக்கும் சந்தர்ப்பங்களில் இதுபோல நேரம் போவது குறித்தெல்லாம் கவலை கொள்ளாமல், பொறுமையாகக் காத்திருப்பதே சிறந்த ஒளிப்படங்களை எடுப்பதற்கான வழி. பல நேரம் சிறந்த பதிவுகள் கைகூடும் என்றாலும், சில நேரம் கை நழுவிப் போவதும் உண்டு. அதுதானே இயற்கையும்கூட.
- கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: shanmugam.wildlife@gmail.com