உயிர் மூச்சு

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 36: மரக்கறி மட்டுமா உண்கிறோம்?

பாமயன்

மரக்கறி உண்பதால் சூழலைப் பாதுகாக்கலாம், அது குறைந்த கரிமச் சுவட்டை (low carbon footprint) கொண்டது என்ற கருத்தும் உள்ளது. இது ஒருவகையான மாயையே. இது மேலைத்தேயச் சிந்தனையும்கூட. ஏனெனில், மரக்கறி உணவான சோயா மொச்சையைப் பயிரிடுவதற்கு மிகவும் வளமான காடுகள் பிரேசில் போன்ற நாடுகளில் அழிக்கப்பட்டன.

இதற்காகவே 1980-82-களில் மிகப் பெரிய காடழிப்பு அங்கு நடந்தது. தானாக ஓடித்திரியும் கோழி இடும் முட்டையை உணவாகக் கொள்வதைவிட, 100 கிராம் சோயா மொச்சையைச் சாப்பிடும்போது அதிகமாகச் சூழலைக் கெடுக்கிறோம் என்று பொருள். சோயா மொச்சை, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் போன்ற தொழிற்சாலை உணவுகளுக்குப் பல பன்னாட்டு நிறுவனங்கள் காப்புரிமை பெற்றுள்ளன. அந்நிறுவனங்கள் நிலத்தின் வளமான மேல் மண்ணை ரசாயனங்களால் நாசப்படுத்திய பிறகே, அதில் உற்பத்தியை மேற்கொள்கின்றன.

எது லாபம் தரும்?

அது மட்டுமல்ல, உணவு கோபுரத்தின் உச்சியில் உள்ள மனிதர்கள்தான் உலகில் அதிக நச்சுகளை உண்கிறார்கள். புற்கள் எடுத்துக்கொள்ளும் பூச்சிக்கொல்லியையும் களைக்கொல்லியையும்விட, மக்கள் உட்கொள்வதே அதிகம். ஏனெனில் மக்கள்தான் உணவுக் கோபுரத்தில் உச்சத்தில் உள்ளனர். நஞ்சு பூச்சிக்கொல்லியான டி.டி.ட்டியின் அளவு பயிரில் இருப்பதைவிட மனிதர்களிடமே அதிக அடர்த்தியில் உள்ளது.

நமது வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படும் கீரைகளும் கிழங்குகளும், பருப்புகளும் சிறந்தவை. அதேநேரம் தொழிற்சாலை மரக்கறி உணவு சூழலியலை மிக மோசமாகச் சீர்கெடுக்கிறது.

எனவே, பண்ணை உருவாக்கத்தில் பல வகையிலும் ஆற்றலைச் சேமித்துக் கழிவுகளில் இருந்து பயிர்களை, கால்நடைகளை உருவாக்கி, அதைச் சந்தைக்கு அனுப்புவதன் மூலமாகவே பயனைப் பெற முடியும். அதிலும் மதிப்புக்கூட்டிய பின்னர் அனைத்துக் கழிவுகளை நமது பண்ணைக்கே அனுப்ப வேண்டும். தேங்காய் விற்பனை செய்யும்போதுகூட, நாரை உரித்துவிட்டுக் காயை மட்டுமே அனுப்ப வேண்டும். கீரையைச் சந்தைக்கு அனுப்புவதைவிட, கீரையைக் கொடுத்து ஆட்டை வளர்த்துச் சந்தைக்கு அனுப்புவது சிறந்தது.

(அடுத்த வாரம்: பண்ணை வடிவமைப்பு முறைகள்)

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர். | தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

SCROLL FOR NEXT