உயிர் மூச்சு

அந்தமான் விவசாயம் 16: அங்கக வேளாண்மையும் ஆரோக்கியமும்

ஏ.வேல்முருகன்

அங்கக வேளாண்மை என்பது நம் மண்ணுக்குப் புதிதல்ல. பண்டைத் தமிழ் நூல்களான பெரும்பாணாற்றுப்படையும் திருக்குறளும் அந்தக் கால வேளாண் முறைகளை விரிவாக எடுத்துரைக்கின்றன. எனவே, அது நம் பண்டைய கலாசாரத்தின் ஒரு பகுதி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

வேளாண்மை: நேற்றும் இன்றும்

அங்கக வேளாண்மை என்பது அங்ககக் கழிவு, நன்மை தரும் உயிரினங்களை வேளாண் பண்ணையில் பெருகச் செய்தோ அல்லது நேரடியாகப் பயன்படுத்தியோ மண்ணின் வளத்தைப் பாதுகாத்துச் சுற்றுச்சூழல் மாசுபடாமல் உணவு உற்பத்தி செய்வது. ஆனால் மக்கள்தொகைப் பெருக்கம், அந்நியர்களின் தவறான வேளாண் கொள்கைகள், இயற்கைக்குப் புறம்பான வேளாண் வளர்ச்சி மற்றும் பிற காரணங்களால் மண்ணின் வளம் சீர்கெட்டுச் சுற்றுச்சூழல் சீரழிந்துவிட்டது. இதன் மற்றொரு விளைவாகச் சமமற்ற அல்லது பற்றாக்குறை உணவை மக்கள் உட்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டது.

இதை நாம் சரிசெய்ய இயலாதா? ஏன் இந்த இடத்தில் அங்கக வேளாண்மை பற்றி பேசவேண்டும்?

ஏனெனில், விளைச்சல் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட, தற்கால உணவு உற்பத்தி முறைகளில் மறைந்திருக்கும் மற்றொரு விரும்பத்தகாத விளைவு இருக்கிறது. அது உயிர்வேதிப்பொருட்கள், சத்துகள், தாது உப்புகளின் குறைபாடாகும். ஆனால், அங்கக வேளாண்மையில் விளைச்சல் அதிகரிப்பது மட்டுமல்லாமல் உடலுக்கு நன்மை பயக்கும் உயிர்வேதிப்பொருட்களைத் தருவதுடன், இயற்கை வளத்தைப் பேணுவதிலும் கவனம் செலுத்துகிறது என்பது அதன் சிறப்பம்சம். அப்படியென்றால் இது அறிவியல்பூர்வமாக எந்த அளவுக்கு உண்மை? பொருளாதார ரீதியில் சாத்தியம்தானா என்னும் கேள்விகள் எழும்.

(அடுத்த வாரம்: அந்தமானின் அங்கக முறைகள்)
கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: velu2171@gmail.com

SCROLL FOR NEXT