மலைகளின் ராணியான நீலகிரி மாவட்டத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில், தொட்டபெட்டா பகுதியில் பூத்துள்ள குறிஞ்சி மலர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.
மலையும் மலை சார்ந்த இடமாக விளங்குவது குறிஞ்சி நிலம். முருகக் கடவுளுக்கு படைக்கப்படும் மலர் குறிஞ்சி. குறிஞ்சி மலர்களின் இருப்பிடமாக நீலகிரி மலை விளங்குகிறது. இந்த மலர்கள் பூக்கும்போது நீலகிரி மலைச் சரிவுகள் பச்சை நிறத்திலிருந்து ஊதா நிறத்துக்கு மாறும்.
குறிஞ்சி மலர்களில் பல்வேறு வகைகள் உள்ளன. ஆண்டுதோறும் பூப்பது; 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பது; 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பது; 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பது உள்ளிட்ட ரகங்கள் உள்ளன. இதில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக் குறிஞ்சி மலர், சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது.
`ஸ்டிரோபிலான்தஸ் குந்தியானஸ்' என்ற தாவரவியல் பெயர் கொண்ட நீலக் குறிஞ்சி, தற்போது `ஸ்டிரோபிலான்தஸ் நீலகிரியான்தஸ்' என பெயர் மருவியுள்ளது. ஜூலை முதல் டிசம்பர் வரை பூக்கும் தன்மை கொண்டது. ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை ‘பீக் சீசன்’.
2006-ம் ஆண்டு நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் மலர்ந்த நீலக் குறிஞ்சி மலர்கள், இந்த ஆண்டு மூணார் பகுதியில் பூக்கும். தற்போது நீலகிரி மாவட்டத்தின் பல இடங்களில் சிறு குறிஞ்சி உள்ளிட்ட பிற ரகங்கள் பூத்து வருகின்றன. நீலகிரியில் 2018-ம் ஆண்டு நீலக் குறிஞ்சி மலர்கள் பூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.