மனிதன் ரொட்டித் துண்டால் மட்டும் வாழ முடியாது.
‘உண்டி முதற்றே உணவின் பிண்டம்' என்று சங்க இலக்கியமான புறநானூற்றில் குடபுலவியனார் கூறுகிறார். ‘மனிதர்கள் ரொட்டியால் மட்டும் வாழ முடியாது' (Man does not live by bread alone) என்று கூறும் திருவிவிலியம், மனிதர்களுக்கு இறையுணர்வும் முக்கியமானது என்ற பொருளில் கூறப்பட்ட கருத்தாக்கம் இது. அதை இன்னும் விரிவாக்கி உடை, உறையுள், கலை, இலக்கியம், விடுதலையுணர்வு என்று மக்களின் தேவை மேலும் விரிவானது என்று விளக்குவார்கள்.
பசிப்பிணி அகற்ற முற்பட்ட மணிமேகலைக்கு மணிமேகலா தெய்வம் கூறியது, ‘மக்கள் யாக்கை, உணவின் பிண்டம்' என்பதாகும். வடஇந்தியப் புத்த நூல்களில் மணிமேகலை பற்றிய கருத்துகள் இல்லை. ‘பசிப் பிணி அறுத்தல்’ என்ற அறமும் புத்த நூல்களில் கூறப்படவில்லை, மணிமேகலையில்தான் கூறப்பட்டுள்ளது.
அனைத்தும் தொடர்புடையவை
உணவு - உடல் இரண்டுக்கும் இடையிலான உறவு மிகவும் நுட்பமாக நோக்க வேண்டியது. சூழலியல் நோக்கில், `மக்கள் ரொட்டித் துண்டால் மட்டும் வாழ முடியாது’ என்பதை, மக்கள் வெறும் `தழை குழைகளை மட்டும் உண்டு வாழ இயலாது’ என்ற கோணத்திலும் அணுகலாம். ரொட்டித் துண்டு என்ற மரக்கறி உணவை மட்டும் உண்டு வாழ முடியாது என்றும் பொருள் கொள்ளலாம்.
இங்கு நாம் உயிர் இரக்கம் அல்லது ஜீவகாருண்யம் எனப்படும் உயரிய அறத்தையும் உணவுப் பழக்கத்தையும் பிரித்துப் பார்க்க வேண்டும்.
பண்ணையில் ஒரு பயிர் அல்லது விலங்கு வளர்வதற்கு எவ்வளவு ஊட்டம் தேவை என்பதை நாம் விளங்கிக் கொள்வதற்கு உணவு பெருமேடு (Pyramid) என்ற கோட்பாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது எளிய உயிரான பாக்டீரியா முதல் மனிதர்கள் வரையான நீண்ட உணவுத் தொடர்ச்சி சூழலில் நிலவுகிறது. இதை நாம் கூர்கோபுரமான ஒரு பெருமேட்டைப்போல உருவகித்துக்கொண்டால் புரியும்.
(அடுத்த வாரம்: எதுவும் தனித்து வாழ்வது சாத்தியமில்லை)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com