கோவையின் வேடந்தாங்கல் எனப்படும் சுண்டக்காமுத்தூர் பேரூர் குளத்திற்கு ஏராளமான நத்தை குத்தி நாரைகள் (asian open-billed stork) வந்துள்ளன.
கோவை உக்கடம், பெரிய குளம், வாலாங்குளம், பேரூர் குளம், முத்தண்ணன்குளம், நாகாராஜபுரம் ஏரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வேனிற்காலம் துவங்கும் முன்பு பனிக் காலத்திலேயே வெளி நாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் உள்நாட்டுப் பறவைகள் வருவது வழக்கம்.
உக்கடம் பைபாஸ் சாலையிலிருந்து சுண்டக்காமுத்தூர் செல்லும் புட்டுவிக்கி சாலையில் உள்ள குளத்திற்கு மிகுதியான பறவைகள் ஆண்டுதோறும் வரும்.
கோவை நகரப் பகுதிகளில் இருக்கும் குளங்களில் ஓரளவிற்கு சாக்கடைகள் கலக்காத, ஆகாயத் தாமரைகள் முளைக்காத சுகாதாரமான குளம் என்பதும் ஒரு காரணம்.
இதனால், பறவைகள் தங்குதடையின்றி நீரில் உலா வர முடியும். இதில் ஆண்டுதோறும் பெலிகான், மஞ்சமூக்கு நாரை, நீர்க்காகம், அரிவாள்மூக்கன் உள்ளிட்ட பறவைகள் வந்து மாதக்கணக்கில் தங்கும். எனவே, இந்த குளத்தை மட்டும் பறவைகளின் சரணாலயம் போல் அறிவிக்க பேரூர் பேரூராட்சியும், கோவை மாநகராட்சியும், சில ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டிருந்தது. அது அறிவிப்பு அளவிலேயே நின்று போனது.
சில மாதங்களாகவே இக்குளத்திற்கு வந்த பெலிகன்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே காட்சி தந்து வந்தன. சில நாட்களாக இக்குளத்தில் தண்ணீர் வறண்டு நீர்ப்பரப்பு சுருங்கி விட்டதால், குவியலாக ஒரே இடத்தில் மீன்கள் துள்ளுகின்றன.
அதன் காரணமாக இங்கே பெலிகன், நீர்க்காகங்கள் உள்ளிட்ட பறவைகளின் வரத்து அதிகமாகியிருக்கிறது.
வியாழக்கிழமை காலை நத்தை குத்தி நாரைகள் மிகுதியாக வந்தன. அவை கூட்டம், கூட்டமாக போட்டி போட்டுக் கொண்டு நீரைக் களைவதும், அழகிய மூக்கினால் மீன்களை கொத்திச் செல்வதையும் அவ்வழியே போவோர் வருவோர் கண்டுகளித்தனர்.
பேரூர் குளத்தில் உலாவும் நத்தை குத்தி நாரைகள்.
பேரூர் சுண்டக்காமுத்தூர் குளத்தில் சாக்கடைகள் கலக்காமலும், ஆகாயத்தாமரைகள் இல்லாமலும், இருப்பதால் பெரும்பாலான பறவைகள் இந்த குளத்தை நாடிவந்து உலா வருகின்றன