உயிர் மூச்சு

அந்தமான் விவசாயம் 36: உற்பத்திக்கு ஊக்கம்

ஏ.வேல்முருகன்

நறுமணப்பொருட்களின் பரப்பளவு, அங்கக முறையில் உற்பத்தி, ஏற்றுமதி போன்றவற்றை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு தேசிய அங்கக பொருட்களின் உற்பத்தி செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. ஏற்றுமதிக்கு உதவும் வகையில் மணப்பயிர்கள் வளர்ச்சிக் கழகம், வேளாண் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம், பாக்கு மணப்பொருட்கள் வளர்ச்சி கழகம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

குறிப்பாக மணப்பயிர்கள் வளர்ச்சிக் கழகம் விவசாயிகள், ஏற்றுமதியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது. மேலும், உற்பத்திச் செலவில் 12.5%, சுயசான்றளிப்பு அமைப்புக்குப் பராமரிப்புத் தொகையில் 50%, சான்றளிப்பில் 50%, வேளாண்மைக்கான அங்கக உட்பொருட்கள் உற்பத்திக்கு 33% மானியமாகத் தருகிறது. இதைத் தவிரத் தற்போது அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர்கள் இணைய வர்த்தகத்திலும் ஈடுபடலாம்.

வாழ்வாதாரம் தரும்

விழிப்புணர்வு, போதிய பயிற்சி, புதிய ரகங்கள், பொருட்களின் மதிப்புக்கூட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் மணப்பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கப் பல அரசு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முனைப்புடன் செயல்பட்டுவருகின்றன.

நறுமணப் பயிர்கள் பல புதிய தொழில்நுட்பங்கள் மூலம் கிராமப்புற வேலையற்ற மகளிர், இளைஞர்களுக்கு வாழ்வாதாரத்தைத் தரவல்லவை என்பது வல்லுநர்களின் உறுதியான எதிர்பார்ப்பு. நறுமணப்பொருட்களின் தேவை உலகச் சந்தையில் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அந்தமான் மற்றும் தமிழக நறுமணப்பொருள் உற்பத்தியாளர்களும் ஏற்றுமதியாளர்களும் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.

கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர். | தொடர்புக்கு: velu2171@gmail.com

SCROLL FOR NEXT