ஆஸ்திரேலியாவின் தெற்கில் உள்ள டாஸ்மேனியாவில் ராட்சத ஜெல்லி மீன் (இழுது மீன்) ஒன்று கரை ஒதுங்கியிருக்கிறது. இதைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்த அறிவியலாளர்கள், இழுது மீன் வகைகளில் இது எந்தப் பிரிவைச் சேர்ந்தது என்று ஆராய்ந்துவருகிறார்கள். அந்த மீன் 4 அடி 11 அங்குல நீளம் உள்ளது. இப்போது அது உயிரோடு இல்லை.
காமன்வெல்த் அறிவியல், தொழில்துறை ஆய்வக அமைப்பைச் சேர்ந்த லிசா ஆன் ஜெர்ஷ்வின் என்ற அறிவியலாளர் கடந்த 20 ஆண்டுகளாக இழுது மீன்களைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். அவர் இந்த மீனைப் பற்றி ஆய்வு செய்துவருகிறார். "இது போன்ற மீன்களைக் கடலில் பார்த்ததாக மீனவர்களும் மற்றவர்களும் கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால் இதுவரை வகைப்படுத்தப்படாத இழுது மீன் இது" என்றார் ஜெர்ஷ்வின்.
ஹோபார்ட் நகருக்குத் தெற்கில் உள்ள ஹௌடன் என்ற இடத்தில் லிம் குடும்பத்தினர், இந்த மீனைக் கடந்த மாதம் பார்த்திருக்கின்றனர். கடலோரத்தில் சிப்பிகளையும் கிளிஞ்சல்களையும் அவர்கள் சேகரித்துக்கொண்டிருந்தபோது, அந்த மீன் அவர்கள் காலில் வந்து உரசியிருக்கிறது.
இழுது மீன்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால் கொட்டும் தன்மை கொண்டவை, அப்படிக் கொட்டுவதன் மூலம் நமது உடல் எச்சரிக்கை உணர்வு தூண்டப்பட்டுவிடும் என்றார் ஜெர்ஷ்வின். இந்த மீனுக்கு என்ன (ரகம் என்று) பெயர் வைப்பது என அவர் தீவிரமாக விவாதித்து வருகிறார்.