‘நீரின்றி அமையாது உலகு’ என்று சங்க இலக்கியங்களும் திருக்குறளும் கூறுகின்றன. இந்த உலகத்தில் உள்ள நீரானது ஒரே அளவாக மாறாமல் உள்ளது. இதை வள்ளுவர் ‘மாறாநீர்’ என்கிறார். ஆனால், இந்த நீரானது பல்வேறு வடிவங்களில் பல்வேறு அளவுகளில் காணப்படுகிறது. பனிக்கட்டியாக, நீராக, நீராவியாகக் காணப்படுகிறது. கடல்களிலும், மண்ணுள்ளும், செடி/கொடி, விலங்குகளிலும் நீர் காணப்படுகிறது. இந்த நீரானது ஒரே இடத்தில் நிலையாக இல்லாமல் சுழன்றுகொண்டே இருக்கிறது.
பெருமளவு கடலில் உள்ள நீர், வெயிலின் வெப்பத்தால் ஆவியாக மாறுகிறது. பின்னர், அதுவே மேகமாக உருவெடுத்துக் காற்றின் துணையால் இடம்பெயர்கிறது. பின்னர்க் குளிர்ந்து மழையாக மலைகளிலும் சமவெளிகளிலும் பொழிகிறது. பின்னர் அது பல்வேறு வழிகளில் கடலைச் சென்று அடைகிறது. இப்படியாக நடக்கும் இந்தப் பயணத்தையே ‘நீரின் சுழற்சி’ என்கிறோம்.
தொடர்ச்சியான சுழற்சி நீரானது மழையாகவும்,மண்ணுக்குள் செல்லும் நீராகவும்,நிலத்தின் மீது ஓடும் நீரோட்டமாகவும் உள்ளது. குளிர்ந்த மேகம் மழையாகப் பெய்கிறது.
குறிப்பிட்ட அளவு நீரானது ஆவியாகிவிடுகிறது. இது ஏறத்தாழ ஐந்து சதவீதம் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கணக்கிடுகின்றனர். மற்றொரு பகுதி நீர் நிலத்தினுள் ஊடுருவிச் சென்றுவிடுகிறது. இதை நிலத்தடி நீர் என்கிறோம். மீதமுள்ள நீர் மேற்பரப்பில் ஓடி ஆறாகப் பாய்கிறது.
இவ்வாறு தொடர்ச்சியாக நீரானது சுழன்றுகொண்டே இருக்கிறது. இதைத்தான் நீரின் சுழற்சி என்கிறோம். இந்தச் சுழற்சியால்தான் உலகத்தில் உள்ள உயிரினங்கள் இயங்க முடிகிறது. சமவெளிகளில் உள்ள உப்புகளைக் கரைத்துக்கொண்டு நீர் கடலை நோக்கிச் சென்றாலும், வெயிலின் வெப்பத்தால் அது ஆவியாகும்போது தூய நீராக நமக்குக் கிடைக்கிறது. அதேநேரம் சில வகை உப்புகள் தாவரங்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் தேவையாகவும் இருக்கிறது. இவையும் இந்த நீரின் சுழற்சியால்தான் சாத்தியப்படுகிறது.
அனைத்துக்கும் அடிப்படை
ஆறுகளின் ஓட்டமும் நீரின் சுழற்சியால்தான் சாத்தியப்படுகிறது. ஆறுகள் அருவிகளாக மலைகளில் தோன்றி, பின்னர் சமவெளிகளில் பாய்கின்றன. இதனால் மருத நிலம் எனப்படும் வயலும் வயல் சார்ந்த பகுதிகளும் செழிப்படைகின்றன. அதன் பின்னர் ஆறுகள் கடலை அடைகின்றன. இதற்கு ‘கழிமுகங்கள்’ என்று பெயர். கடல் புகும் இடங்களை ‘புகார்’ என்று பண்டைய மக்கள் அழைத்தனர். இந்தப் பகுதிகள் மிகவும் வளமான உயிரினப் பெருக்கம் நிறைந்த இடங்கள். ஏராளமான மீன்கள் இங்குக் குஞ்சு பொரிக்கின்றன. நல்ல சத்தான மண்ணும் நீரும் இங்குதான் உள்ளன. இப்படியாக உயிரினங்கள் அனைத்துக்கும் அடிப்படையாக நீரின் சுழற்சி அமைந்துள்ளது.
எனவே, பண்ணையில் விழும் ஒவ்வொரு துளி நீரும் சுழற்சிக்குள் வந்தாக வேண்டும். வெளியேறி வீணாகக் கூடாது. அதற்கான கட்டுமானங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். மரங்களை நட்டுக்கொள்ள வேண்டும். நீரைப் பிடிக்கும் மட்கைப் பெருக்கிக்கொள்ள வேண்டும். இந்த நீர்தான் நமக்கு மாட்டின் வழியாகப் பாலாகவும் தாவரங்களின் வழி பழச் சாறாகவும் கிடைக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
(அடுத்த வாரம்: உலகெங்கும் நிறைந்திருக்கும் வாயு)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com