சென்னை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் நாற்றத்தை தாங்க முடியாமல் அந்தப் பகுதி மக்கள் 27 ஆண்டுகளாக பெரிதும் அவதிப்படுகின்றனர். இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரி விரைவில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்படவுள்ளது.
வடசென்னையில் உள்ள கொடுங்கையூரில் 350 ஏக்கரில் குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. 1986-ம் ஆண்டு வரை இங்கு மாட்டு வண்டியில் குப்பைகள் (தினமும் 200 டன்) எடுத்து வந்து கொட்டப்பட்டன. 1987-ம் ஆண்டு முதல் லாரிகளில் எடுத்து வரப்படுகின்றன.
இப்போது மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர் ஆகிய ஆறு மண்டலங்களில் இருந்து தினமும் 2,800 டன் திடக்கழிவும், 500 டன் கட்டிடக் கழிவும் இங்கு கொட்டப்படுகிறது. இதனால் இங்கு 300 ஏக்கரில் குப்பைகள் மலைபோல குவிந்து கிடக்கின்றன. மீதமுள்ள 50 ஏக்கரில் இன்னும் 5 ஆண்டுகள் மட்டுமே குப்பைகளைக் கொட்ட முடியும்.
கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் இருந்து பிளாஸ்டிக், அட்டை உள்ளிட்ட பொருட்களைப்பொறுக்கி எடுத்து விற்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பிழைப்பு நடத்துகின்றனர். குப்பையில் தீ வைத்தால்தான், பழைய டயர்களில் இருந்து கம்பிகள், வயர்களில் இருந்து செம்புக் கம்பிகள் எடுக்க முடியும். காந்தத்தைப் பயன்படுத்தி உலோகப் பொருட்களையும் எடுக்க முடியும். அதனால்தான் குப்பை பொறுக்க வருபவர்கள் யாருக்கும் தெரியாமல் தீ வைத்துவிடுகின்றனர்.
இதுகுறித்து “தேவை” அமைப்பின் நிறுவனர் இளங்கோ கூறுகையில், “கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் இருந்து புகை வெளியேறுவதால், ராஜரத்தினம் நகர், எழில்நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், ரெட்டியார் நகர் உள்ளிட்ட 25 நகர்களில் வசிக்கும் 4 லட்சம் பேர் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்” என்றார்.
‘எவர் விஜிலென்ட்சிட்டிசன்ஸ் வெல்பேர் அசோசியேஷன்’ தலைவர் என்.எஸ். ராமச்சந்திர ராவ் கூறியதாவது:
கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் புகையால் லட்சக்கணக்கான மக்கள் கண் எரிச்சல், தொண்டை கரகரப்பு, மூச்சுத்திணறல், நுரையீரல் மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு, விஷக் காய்ச்சல், தோல் நோய், ஈ மற்றும் கொசுத்தொல்லையால் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதைக் கண்டித்து தர்ணா போராட்டம் நடத்தினோம். கைது செய்து சிறையில் அடைத்தனர். கொடுங்கையூர் குப்பை கிடங்கை அகற்றக்கோரியும், குப்பைகளை எரிப்பதை தடுக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். குப்பைகளை எரிக்கக் கூடாது என்று 2010-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகும் குப்பை எரிக்கப்பட்டுவந்தது.
இதுபற்றி உயர்நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு போனாம். குப்பை எரிக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது. அதன்பிறகு புகையால் ஏற்படும் பாதிப்பு குறைந்துள்ளது. இருந்தாலும், குப்பையில் இருந்து வெளியேறும் நாற்றத்தை தாங்கவே முடியவில்லை. இந்த விஷயம் தொடர்பாக விரைவில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர உள்ளோம்” என்றார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "சாலையில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் கொண்டுபோய்த்தான் குப்பை கொட்டப்படுகிறது. நாற்றத்தைக் குறைக்க சாலையோரத்தில் 70 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 2 ஏக்கரில் காட்டாமணக்கு, ஆமணக்கு விதைகளைத் தூவியிருக்கிறோம். குப்பையை யாரும் கொளுத்தாமல் இருக்க குப்பைகள் மீது கட்டிட இடிபாடுகளைப் போடுகிறோம்” என்றார்.