உயிர் மூச்சு

அந்தமான் விவசாயம் 23: தாழையைச் சாப்பிடும் ஆதிகுடிகள்

செய்திப்பிரிவு

தாழை தாவரத்தின் அனைத்துப் பாகங்களும் பயன்படுகின்றன என்பதைவிட, சிறிய தீவுகளில் வாழும் மக்களின் தேவைகளை அது பூர்த்தி செய்கிறது என்ற புரிதலே மிகவும் இன்றியமையாதது. 2 முதல் 4 கிலோ எடையுள்ள தாழையின் கூட்டுக் கனிகள் அந்தமான் நிகோபார் பழங்குடி மக்களின் அடிப்படை (பாண்டனஸ் லிரம்) உணவுகளில் ஒன்று.

உணவும் மருந்தும்

கனிகளைப் பறித்து, சுடுநீரில் அவித்து, பின் நார்ப் பகுதியைப் பிரித்தெடுத்துவிடுகிறார்கள். எஞ்சிய பகுதியை உணவாகவும் பல்வேறு வகையான உணவுப் பதார்த்தங்களாகச் செய்தும் உட்கொள்கின்றனர். 100 கிராம் எடையுள்ள பழத்தில் 75 - 80 கிராம் நீர், 15 கிராம் மாவுப்பொருள், 3.5 கிராம் நார்ச்சத்து, 1.3 மில்லிகிராம் புரதச்சத்து போன்றவை உள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைத் தவிர கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின்-சி, பீட்டா கரோட்டின், தயமின் போன்றவையும் உள்ளன.

தாழை பழத்தின் விதைகளும் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. இருப்பினும் கால்சியம் ஆக்சலேட் எனும் வேதிப்பொருள் இருப்பதால், இதை நன்கு வேகவைப்பது அவசியம். இதைத் தவிர ஆயுர்வேத மருத்துவத்தில் தலைவலி, நரம்புத் தளர்ச்சி, வெடிப்புகள், வைரஸ் தொற்று, பல்வேறு வகையான படைநோய்களுக்கு இத்தாவரம் (பாண்டனஸ் ஒடராடிஸிமஸ்) பயன்படுகிறது.

அலைச்சீற்றம் குறைக்கும்

பொதுவாக அனைத்து வகையான தாழை இலைகளும் பாய்கள் பின்னவும் கூரை வேயவும் பயன்படுகின்றன. தண்டுப் பகுதிகளிலிருந்து நார்கள் உரித்தெடுக்கப்படுகின்றன. மற்றப் பாகங்கள் குடிசை கட்டுமானப் பொருளாகப் பயன்படுகின்றன. இம்மரங்கள் அடர்த்தியாக வளர்வதால், கடற்கரைப் பகுதியில் மண் அரிப்பைத் தவிர்த்துக் கடல் சீற்றத்திலிருந்தும் பாதுகாப்பை அளிக்கின்றன.

2004-ம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட ஆழிப்பேரலைகளின் தாக்கத்திலிருந்து, இத்தாவரங்கள் உயிர் அரண்களாகச் செயல்பட்டுப் பல தீவுகளில் பழங்குடியினரைக் காத்துள்ளன.

மணமும் சுவையும்

சில வகையான தாழை தாவரங்களின் (பாண்டனஸ் ஒடன்டோடெர்மஸ்) பூக்களிலிருந்து வாசனைப் பொருட்கள் எடுக்கப்படுகின்றன. தற்போதும் இந்தியாவின் கிழக்குக் கடற்கரைச் சமவெளிகளில், குறிப்பாக ஒடிஷா மாநிலத்தில் இது ஒரு லாபகரமான தொழிலாக உள்ளது. இதைத் தவிரப் பெரும்பாலான ஆசிய நாடுகளில் (பாண்டனஸ் அமாரில்லிபோலியஸ்) பண்டன் இலைகள் சுவையூட்டும் பொருளாகச் சமையலில் பயன்படுத்தப்படுகின்றன. தாய்லாந்து நாட்டில் ரோஜாவுடன் இதன் மணம் தரும் இலைகளைச் சேர்த்துப் பூங்கொத்துகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை வீட்டுத் தோட்டங்களிலும் வளர்க்க முடியும்.

பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இந்த வகையான மணம் பரப்பும் தாழம் பூக்களைப் பற்றிய பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன. ‘தாழையாம் பூ முடித்துத் தடம் பார்த்து நடை நடந்து’ என்ற திரைப்படப் பாடலும் பரவலாக அறியப்பட்ட ஒன்று.

(அடுத்த வாரம்: ஆதிகுடிகளின் பரம்பரை அறிவியல்)
கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: velu2171@gmail.com

SCROLL FOR NEXT