உயிர் மூச்சு

வெயிலுக்கு இதம் தரும் ‘மண் ஃபிரிட்ஜ்’

செய்திப்பிரிவு

வெயிலில் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிய பின் ஜில்லென்று தண்ணீர் குடிக்கும்போது, அதில் அடங்கும் தாக உணர்வே தனிதான். இந்நிலையில் ஜில்லென்று ஃபிரிட்ஜ் தண்ணீர் குடிக்கப் பலரும் ஏக்கம் கொள்கின்றனர். அதைவிட மண்பானைத் தண்ணீரைக் குடிக்கும்போது, மண்வாசனையும் அதனுடன் இலவச இணைப்பாகச் சேர்ந்து அந்தத் தண்ணீரின் மேல் அலாதியான பிரியத்தை ஏற்படுத்திவிடும். மண்பானையில் தண்ணீர் குடித்தால் உடனடியாகத் தாகம் தீரும்.

மவுசு அதிகம்

நகர்ப் பகுதிகளில் மண்கலங்களை பார்ப்பதே அரிதாகிக் கொண்டிருக்கிறது. கோடை காலத்தில் சாலை ஓரங்களில் மண்பானை விற்பனை திடீரென முளைத்துச் சூடுபிடிக்கும். “அந்தக் காலத்தில் மண்கலங்கள் தான் சமையல் செய்யப் பயன்பட்டன. இடையே அலுமினியமும், எவர்சில்வரும், தற்போது பிளாஸ்டிக்கும் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டன. இருந்தாலும் மண்பானைத் தண்ணீருக்கு இன்றளவும் மவுசு அதிகம்.

கோடைக்காலம் வந்துவிட்டால் விதவிதமான மண்பானை வடிவங்களில் தண்ணீர் வைக்க மண் பாத்திரங்கள் செய்யப்படுகின்றன. இதில் குழாய் வைத்துத் திருகும் வகை மண் பானைகள் தற்போது அதிக அளவில் விற்பனையாகின்றன. அதேபோல் ஜாடி மாதிரியிலும் மண்பானைகள் விற்பனை செய்கிறோம். ரூ. 100 முதல் இந்த மண்பானைகள் கிடைப்பதால் பொதுமக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

மண் ஃபிரிட்ஜ்

மண்பாண்டக் குளிர்பதனப் பெட்டியும் தற்போது அதிகமாக விற்பனைக்கு வருகிறது. இந்த ஃபிரிட்ஜில் அதிகம் புளிக்காத வகையில் இட்லி மாவு, பழங்கள் ஆகியவற்றை ஒரு வாரம்வரை கெடாமல் வைத்திருக்கலாம். இது ரூ. 300 முதல் கிடைக்கிறது.

மண்பாண்டங்கள் செய்ய மண் கிடைப்பதில்தான் தொழிலாளர்களுக்கு சிரமம் உள்ளது. இருந்த போதிலும் பழமை மாறாமல் சிலர் அந்தந்தப் பருவத்தில் மண்பாண்டங்களை எங்களிடம் தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர்” என்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த கண்ணன்.


மண்ணால் செய்யப்பட்ட விதவிதமான குடிநீர் கலங்கள்.

SCROLL FOR NEXT