ஆடு, மாடு போன்ற வீட்டு விலங்குகளின் சிறுநீர், சாணம் போன்றவை நீண்டகாலமாக விவசாயத்தில் உரமாகப் பயன்பட்டு வருகின்றன. இதைப் போலவே, மனிதக் கழிவான சிறுநீர், ரசாயன உரங்களுக்கு மாற்றாக நல்ல உரமாக உள்ளது. ஆடு-மாடுகள் குறைந்துவிட்ட இந்தக் காலத்தில் இயற்கை வேளாண்மையை வலியுறுத்தும்போது, இதையும் சேர்த்துப் பேச வேண்டும்.
மனித சிறுநீரில் தழைச்சத்து (நைட்ரஜன்) அதிக அளவிலும், மணிச்சத்து (பாஸ்பரஸ்), சாம்பல் சத்து (பொட்டாசியம்) குறிப்பிடத்தக்க அளவிலும் உள்ளன. சரி, இந்தச் சத்துக்களை எப்படிப் பிரித்தெடுத்துப் பயன்படுத்துவது?
சூழலியல் காக்கும் கழிவறை
சூழலியல் காக்கும் கழிவறை (Ecological Sanitation Toilet) என்பது சிறுநீர், மலம், உடலைச் சுத்தம் செய்த தண்ணீரைத் தனித்தனியே பிரித்து உரமாக்குகிறது. இந்தக் கழிவறையில் மலத்தை அகற்றத் தண்ணீர் நேரடியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. அதனால் இன்று பரவலாக உள்ள தண்ணீர் பற்றாக்குறைக்கு, இவ்வகை கழிவறைகள் நிரந்தரத் தீர்வாக அமையும்.
மேலும் கடினப் பாறைகள், ஆற்றுப் படுகைகளில் சாதாரண வகை கழிவறைகளைக் கட்ட முடியாது. சூழலியல் காக்கும் கழிவறைகள் பூமிக்கு மேற்பரப்பில் கட்டப்படுவதாலும், மேற்பரப்பிலேயே பாதுகாப்பான முறையில் கழிவு சேமிக்கப்பட்டு, மக்க வைக்கப்படுவதால் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில்லை.
சிறந்த மாற்று
இந்தியாவில் பரவலாகக் கட்டப் படுகிற செப்டிக் டேங்க், தேன்கூடு வகை கழிவறைகளைப் பயன்படுத்த அதிகத் தண்ணீர் தேவை. இதில் செப்டிக் டேங்க் கழிவு, நீர்நிலைகளில் கலப்பதால் சுற்றுச்சூழல் சீர்கெடுகிறது. தேன்கூடு வகை கழிவறைகளில் குடிநீர் ஆதாரங்களுக்கும் (கிணறு, அடிகுழாய்) மலக் குழிக்கும் இடையே போதிய இடை வெளி விட முடிவ தில்லை. இதனால் நிலத்தடி நீர் மாசடைகிறது.
முன்னோடி
இந்தியாவில் சூழலியல் காக்கும் கழிவறை அமைப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. இக்கழிவறையைப் பரவலாக்க 'நிர்மல் பாரத் அபியான்' என்ற திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. சூழலியல் காக்கும் கழிவறைகளில் சிறுநீர் தனியாகச் சேமிக்கப்படுகிறது. இதை நெல், வாழை, காய்கறிகளுக்கு உரமாகப் பயன்படுத்தினால் அதிக மகசூல் கிடைக்கும்.
மனிதச் சிறுநீரைச் சேமித்துப் பயன்படுத்துவதற்கு எளிதான வழி சூழலியல் காக்கும் கழிவறையே. அத்துடன் மனித மலத்தைச் சாம்பல் மூலம் மூடுவதால், 6-8 மாதங்களில் சிறந்த உரம் கிடைக்கும்.
உரக் கிடங்கு
ஒவ்வொரு மனிதனும் ஒரு நடமாடும் உரக் கிடங்குதான். ஒரு வருடத்துக்கு ஒரு மனிதன் 50 கிலோ மலத்தையும் 500 லிட்டர் சிறுநீரையும் வெளியேற்றுகிறான். இதிலிருந்து 4.5 கிலோ நைட்ரஜன், 0.55 கிலோ பாஸ்பரஸ், 1.28 கிலோ பொட்டாசியம் சத்துகள் கிடைக்கின்றன. இவற்றை முறைப்படி சேகரித்துப் பயன்படுத்தினால் உரச் செலவைப் பெருமளவு குறைக்கலாம்.
நீருக்காக ஏற்படும் போட்டியால்தான் அடுத்த உலகப் போர் நிகழும் என ஐ.நா. அறிஞர்கள் எச்சரிக்கின்றனர். இக்கழிவறை நீர் செலவைக் குறைப்பதாலும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பதாலும், இவற்றைப் பரவலாக்க அரசு முன்வர வேண்டும்.
ஏன் மறுசுழற்சி அவசியம்?
# மனிதக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதால் சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுக்கப்படுகிறது.
# உறிஞ்சு குழி கழிப்பறை மூலம் வெளியேற்றப்படும் கழிவுநீர் நீர்நிலைகளையும் உயிர்ச் சூழலையும் பாதிக்கிறது.
# மறுசுழற்சி செய்வதால் மண்ணுக்கு ஊட்டச்சத்து கிடைக்கிறது. வேதி உரத் தேவை பெருமளவு குறையும்.
# மனிதக் கழிவுகளை உரமாகப் பயன்படுத்துவதால் மண்ணின் தரம் பாதுகாக்கப்பட்டு, பயிர் அதிக மகசூல் தருகிறது.
# மனித உரம் செலவில்லாமல் கிடைக்கிறது.
# சுழலியல் காக்கும் கழிவறை மனிதக் கழிவுகளை வளமாக மாற்றுகிறது.
அது மட்டுமல்லாமல், ஒரு தனிமனிதனின் கழிவுகளை உரமாகப் பயன்படுத்துவதன் மூலம் சுமார் 16 கிலோ பசுங்குடில் வாயுவை ஒரு வருடத்தில் குறைக்கமுடியுமாம். இக்கழிவறைகள் பல நன்மைகளைத் தருகின்றன
மூன்று முக்கிய நன்மைகள்
# நீர்நிலைகள் பாதுகாக்கப்படுகின்றன (குறைவான தண்ணீர் பயன்பாடு, மாசடைவது தடுக்கப்படுகிறது)
# அதிக விவசாய உற்பத்தி
# திறந்தவெளியில் மலம் கழிப்பதால் வரும் நோய்கள் தடுக்கப்படுகின்றன.
சூழலியல் காக்கும் கழிவறையைப் பரவலாக்க இக்காரணங்களே அடிப்படையாக உள்ளன.
கட்டுரையாளர்,
ஹேண்ட் இன் ஹேண்ட்
இந்தியா நிறுவனத் திட்ட இயக்குநர்
தொடர்புக்கு: putheribabu@gmail.com