உயிர் மூச்சு

ஒரு பேரழிவின் கதை: புத்தகத்திலிருந்து சில பகுதிகள்

செய்திப்பிரிவு

மகத்தான படைப்புகள் எல்லாவற்றுக்கும் உள்ள விநோதமான முன்னெச்சரிக்கை உணர்வைக் கொண்ட அகிரா குரசோவாவின் கனவுகள் (Dreams) படக்காட்சியை ஃபுக்குஷிமா நினைவூட்டியது. அந்தப் படத்தில் நிலநடுக்கம் காரணமாக ஆறு அணுஉலைகள் வெடிக்கும். மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடுவார்கள். அந்தப் படத்தில் அணுஉலை மையப் பொறுப்பை ஏற்ற மின்சக்தி நிறுவனம், ஆரம்பத்தில் மக்கள் யாரும் ஓடவில்லை என்று பொய் சொல்லும். 20 ஆண்டுகளுக்குப் பிறகு குரசோவாவின் பயங்கரமான கனவுகள் நனவாகிவிட்டன.

சோர்ந்துபோன மினாமி-சோமா பகுதியைச் சேர்ந்த ஒரு பாட்டி தூக்கில் தொங்கினார். அணுஉலை மையத்தில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் வசித்துவந்த அவர், தன் மகள் வீடு, மருத்துவமனை, வீடு என அலைபாய்ந்துகொண்டிருந்தார். கதிரியக்கம் காரணமாக தன் ஊரில் உள்ளவர்களும் வெளியேற்றப்படக்கூடும் எனும் செய்தி அவருக்குத் தெரியவந்தது.

அலைகழிப்புகளால்

தன் தற்கொலைக்கு விளக்கம் அளித்து 4 கடிதங்களை விட்டுச் சென்றுள்ளார். “அணுஉலை காரணமாக தினமும் என் இதயமே வெடித்துவிடுவதுபோல் உள்ளது. இந்த அமளியால் அரண்டுபோன நான், இங்கிருந்து வெளியேறி என் கல்லறைக்குச் செல்கிறேன்,” என்று கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். என்றாவது ஒரு நாள் அணுஉலை சோகத்துக்குக் கணக்குப் பார்க்கும்போது இவரை யாரும் மறக்க முடியாது.

கா என்ற அணுஉலை மீட்புப் பணியாளரை நான் சந்தித்தேன். நிலநடுக்கம் நடந்த நேரத்திலும், அதைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கும், ஃபுக்குஷிமாவில் பாதிக்கப்பட்ட பகுதியில் கா இருந்துள்ளார். பின்னர் சீரான இடைவெளியில் அங்கு சென்று வந்துள்ளார். அவர் நேரடியாக அணுஉலை மையத்தின் தெப்கோ நிர்வாகத்திடம் வேலை செய்யவில்லை. ஜப்பானில் உள்ள பெரும்பாலான அணுஉலைப் பணியாளர்களைப் போல அவரும் ஒரு ஒப்பந்தப் பணியாளர்தான். இவர்கள் ‘அணுஉலை நாடோடிகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். அவர் புறப்படுவதற்கு முன் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள் இவை: “அவர்களிடம் நன்றாகச் சொல்லி வையுங்கள். அழுவதால் எந்தப் பயனும் இல்லை. இப்பொழுது நரகத்தில் இருக்கிறோம் என்றால், நாம் செய்யக்கூடியதெல்லாம் தட்டுத் தடுமாறி மேலே வர வேண்டியதுதான்.”

மழை பெய்கிறது. ஆனால், அது மழையாக இல்லை. காற்று வீசுகிறது. ஆனால், அது காற்றாக இல்லை. மகரந்தத்துக்குப் பதிலாக சீசியத்தை அது கொண்டுவருகிறது. நறுமணத்துக்குப் பதிலாக நச்சுப்புகைக் காற்று வந்தது. தொடர்ந்து செந்நிறமாக மாறிவந்த கடல், நடைபெறும் பயங்கரத்தின் மவுன சாட்சியாகிப் போனது. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இக்கழிவுகளை முடிந்தவரை கடல் நீர்க்கச் செய்தது. எங்கும் தப்பித்துச் செல்ல இயலாத நிலை. பகல் வேளைகளில் வசிக்க முடியாத நிலை. இரவு வரும்போது எதையும் மறக்க முடிவதில்லை. ஒவ்வொரு முறையும் புதிது புதிதாகத் துக்கமான, கோரமான கனவுகள் வருகின்றன. பயங்கரமே சூழலானது.

அடுத்த நாள் மெட்ரோவின் தண்டவாள ஆட்டத்தில் தூங்கிவிழும் வயதான மனிதர் ஒருவரின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன். யாரையோ திட்டிக்கொண்டிருந்தார். “பயங்கரமான விஷயம். இது ஜப்பானின் பேரழிவு. இப்படித்தான் அணுஉலை நம் கனவுவரை ஊடுருவி இருக்கிறது. பேரிடர், நம் கற்பனைகளையும் ஆக்கிரமித்துவிட்டது. ஒவ்வொரு நாளும், நம் மன ஓவியங்களில் கொஞ்சம் அதிகமாகவே கலந்து, நம் வாழ்வின் அந்தரத்தில் மிக நெருக்கமாக ஊடுருவிவிட்டது. துகள்கள், பாகங்கள், உயிரணுக்கள் என நம் சொந்த உடலுக்கு மாற்றாக, அதை ஸ்தம்பிக்க வைக்கும் நோக்கத்தில் வந்த நிலக்கரி ஒட்டுண்ணிகள் அவை”.

கதிரியக்கம் என்பது சுவையற்றது, மணமற்றது, பார்க்க முடியாதது. வெறும் கண்ணால் பார்க்க முடியாதது, தொடு உணர்வால் உணர முடியாதது, சுவையால் அறிய முடியாதது. விதிவிலக்காக, மிகவும் அரிய சந்தர்ப்பங்களில், நாக்கில் தங்கும் சிறு உலோகச் சுவை, செர்னோபில்லில் உயிர்ப் பிழைத்தவர்களை நினைவூட்டும். அதனுடன் பிரியா உறவு கொண்ட பணத்தைப் போலவே, கதிரியக்கமும் மணமற்றது. அது வருவது தெரியாது, செவிக்குப் புலப்படாது. நம் ஐந்து புலன்களையும் செயலிழக்கச் செய்து, கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அறியாமலேயே நம் உடம்பை மாற்றிவிடும். இன்னும் சொல்வதென்றால் நிர்மூல சக்தியான அது, சிறு உணர்வையோ, குறைந்தபட்ச விவேகத்தனமோ நம்மிடம் இல்லாமல் பார்த்துக்கொள்ளும்.

ஃபுக்குஷிமா: ஒரு பேரழிவின் கதை
மிக்கேயில் ஃபெரியே (தமிழில்: சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்),
தடாகம் வெளியீடு,
தொடர்புக்கு: 112, திருவள்ளுவர் சாலை,
திருவான்மியூர், சென்னை 41 / 89399 67179

SCROLL FOR NEXT