கருப்பு நிற பெண்ணழகிகளும் இந்தப் பூவினால் சுட்டப்பட்டனர் என்பதை “தூநிற வெள்ளை அடர்த்தாற் சூரியனிவ பூவைப் புதுமலரான்” என்று சிலப்பதிகார (17:12:2) வரிகள் சுட்டுகின்றன. காயாவின் புதிய மலர் போன்ற நிறத்தையுடைய இந்த அழகிய குமரி, அந்தத் தூய்மையான வெள்ளை நிறக் காளையை அடக்கியவனுக்கு உரியவள் என்பதே மேற்கூறப்பட்ட வரிகளுக்கு பொருள். இதன்காரணமாகவே கருப்பு நிறப் பெண்களுக்கு காயாம்பூ என்ற பெயர் தமிழ்நாட்டின் கிழக்கு கடலோரக் காட்டுப் பகுதிகளில் ஒருகாலத்தில் பரவலாக வைக்கப்பட்டது. இதேபோன்று, `பூவை’ (காயாவின் மறு பெயர்) என்ற பெயரும் பெண்களுக்கு சூட்டப்பட்டது. (“என் பூவைக்கினிய சொற் பூவை” ஐங்குறுநூறு 375). “பூவை பால் கொள் பழகு நெய்ச் சொக்கர்க்கே” என்ற மதுரைக்கலம்பக வரியின் (58:4) படி உமையும் `பூவை’ எனப்பட்டாள் என்று தெரியவருகிறது.
இம்மரத்தின் இலைச்சாறு நல்ல மஞ்சள் நிற சாயத்தைத் தரும். பண்டைய காலத்தில் நாகப்பட்டினம் பகுதியில் வாழ்ந்த புத்தத் துறவிகள் இந்த சாயத்தைப் பயன்படுத்தி, தம்முடைய ஆடைகளுக்கு நிறமேற்றியுள்ளனர். கடுக்காய், சப்பான் மரக்கட்டை சாயங்களோடு இதைச் சேர்த்தால் தலைசிறந்த அடர் சிவப்பு நிற சாயம் உருவாக்கப்படும். சிதம்பரம் அருகில் உள்ள கொள்ளிடம் பகுதி கோரைப்பாய் தயாரிப்பாளர்கள் ஒரு காலத்தில் இதன் சாயத்தை பாய்கள், தயாரிப்பில் பயன்படுத்தியுள்ளனர். இன்று இது ஏறத்தாழ ஒதுக்கப்பட்டு விட்டது.
இந்த மரத்தின் உருண்டையான, சதைப்பற்று நிறைந்த, கருஞ்சிவப்பு நிற பழங்கள் ஒரு பஞ்சகால உணவு. கண் நோய் மற்றும் பாலியல் நோய்களுக்கு இதன் பழம் நல்ல மருந்தாகக் கருதப்படுகிறது. இலைச்சாறு வயிற்றுப் போக்கைத் தடுக்கிறது. எனவே, காயா தாவரத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் நாம் அனைவரும் உடனடியாக ஈடுபட வேண்டும்.
காடும் காடு சார்ந்த தமிழகப் பகுதிகளில் ஒரு காலத்தில் மிகவும் சாதாரணமாகக் காணப்பட்ட காயா குறுமரங்களின் எண்ணிக்கை, தற்போது மிகவும் குறைந்துவிட்டது. நல்ல அலங்காரத் தாவரமாக வளரக்கூடிய இதைப் போற்றிக் காப்பதும் வளர்ப்பதும் தமிழக மக்களின் முக்கியக் கடமை. இதன் பொருளாதார முக்கியத்துவம் கருதியும் இது பேணப்படவேண்டும்.
(அடுத்த வாரம்: மருந்துக்குப் பயன்படும் நுணா) கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in