உயிர் மூச்சு

சென்னை மாநகராட்சி பூங்காக்களில் கருகும் புல்வெளிகள்- வெப்பத் தாக்குதல், தண்ணீர் பற்றாக்குறை எதிரொலி

டி.செல்வகுமார்

சென்னையில் வெப்பத் தாக்குதலாலும் போதிய தண்ணீர் இல்லாததாலும் மாநகராட்சி பூங்காக்களில் உள்ள புல்வெளிகள் காய்ந்து கருகுகின்றன. இதனால், பூங்காக்கள் பொலிவிழக்கின்றன என்கிறார்கள் நடைபயிற்சியாளர்கள்.

சென்னையில் பொழுதுபோக்க ஏற்ற இடங்களில் மாநகராட்சி பூங்காக்களுக்கு முக்கிய இடம் உண்டு. சென்னையில் 40 பெரிய பூங்காக்கள் உள்பட 260 பூங்காக்கள் உள்ளன. சென்னை மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில் 87 பூங்காக்கள் உள்ளன. இங்கு காலை, மாலை நேரங்களில் ஏராளமானோர் நடைபயிற்சி செய்கின்றனர். பூங்காக்களில் உள்ள விளையாட்டுப் பகுதியில் குழந்தைகள் குதூகலத்துடன் விளையாடி மகிழ்கின்றனர். பூங்காக்களில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள ‘யோகா மேடை’ நடுத்தர வயதினருக்கும் முதியவர்களுக்கும் பெரிதும் பயனளிக்கிறது.

இதுதவிர, உடல்சோர்வு காரணமாக சற்று ஓய்வெடுக்க வேண்டும் என்று விரும்புவோரும் பூங்காக்களில் அவ்வப்போது தஞ்சமடைகின்றனர்.

இப்படி பல வகையிலும் பயனளிக்கக்கூடிய பூங்காக்களில் உள்ள மரங்கள், செடி, கொடிகள், பச்சைப் போர்வை விரித்தது போன்ற புல்தரை ஆகியவை கண் ணுக்கும் மனதுக்கும் இதமாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருக் கின்றன. இவற்றை தண்ணீர் ஊற்றி பராமரிப்பதற்காக பூங்காக்களில் திறந்தவெளி கிணறுகளும், ஆழ் துளை கிணறுகளும், இந்த இரண்டும் இல்லாத இடங்களில் தரைமட்டத் தொட்டிகளும் உள்ளன.

சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துகொண்டே போவதால் பூங்காக்களில் உள்ள திறந்தவெளி கிணறுகள், ஆழ் குழாய் கிணறுகளில் நீர்இருப்பு போதிய அளவு இல்லை. தண்ணீர் பற்றாக்குறை காரணமாகவும் வெப்பத் தாக்குதலாலும் பூங்கா வில் உள்ள புல்தரைகள் கருகு கின்றன என்கிறார் மைலேடீஸ் பூங்காவில் தினமும் நடைபயிற்சி செய்யும் ரமேஷ்குமார்.

சூளை ஏ.பி. தெருவில் உள்ள மாநகராட்சி பூங்காவின் நிலைமை இன்னும் மோசம். இங்கு புல்தரையின் பெரும்பாலான பகுதிகள் கருகிவிட்டன. அழகிய புல்தரை காய்ந்துவிட்டதால் பூங்கா பொலிவிழந்து காணப்படுகிறது. ‘‘புல்வெளிகள் காய்ந்து கருகுவ தால், குளிர்ச்சியான சூழல் போய், வெப்பம் அதிகரித்துள்ளது’’ என் கிறார் இப்பூங்காவில் நடைப் பயிற்சி செல்லும் ஹேமா.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி பூங்கா பராமரிப் புக்கான அதிகாரி கூறுகையில், ‘‘சில பூங்காக்களில் மின்மோட்டார் பழுது காரணமாக புல்வெளிக்கு தண்ணீர் ஊற்றாமல் இருந்திருக் கலாம். கடும் பனிப்பொழிவு காரணமாகக்கூட புல்வெளிகள் கருகலாம். தண்ணீர் பற்றாக்குறை யால்தான் புல்வெளிகள் காய்ந்து கருகுவதாக சொல்ல முடியாது’’ என்றார்.

SCROLL FOR NEXT