இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் நிகோபார் தீவுகள் சென்னைக்குக் கிழக்கே சுமார் 1,800 கி.மீ. தொலைவில் வடக்கு தெற்காக வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளன. இங்கு பழங்குடியினரும் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து குடிபெயர்ந்தோரும் வெவ்வேறு தீவுகளில் வாழ்கிறார்கள்.
மொத்த நிலப்பரப்பில் 85 விழுக்காடு பல்வேறு வகைக் காடுகள் பரவியுள்ளபோதும், வேளாண்மையே இந்தத் தீவுக் கூட்டத்தின் முதன்மைத் தொழில். தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழையால் இத்தீவுகளில் ஆண்டுக்குச் சராசரியாக 3,100 மி.மீ. வரை மழை பொழிகிறது. தமிழகத்தின் மழை அளவோடு ஒப்பிட்டால், இது மூன்று மடங்கு அதிகம்.
நாடு விடுதலை பெற்ற பிறகு வேளாண்மைத் தொழில் நவீன மயமாக வளர்ந்தது என்றாலும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அந்தமானில் வாழும் பழங்குடிகள் தங்கள் உணவுத் தேவையை இயற்கை வேளாண்மையின் மூலமே பூர்த்தி செய்துவந்துள்ளனர்.
இத்தீவுகளில் நிலவும் தட்பவெப்பம், கிடைக்கும் மழையளவு, மண்ணின் தன்மை போன்றவை தென்னை, பாக்கு, நெல், கிழங்கு வகைகள், நறுமணப் பயிர்கள் பயிரிட உகந்ததாக இருக்கின்றன. புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் இந்தத் தீவுகளில் குறைந்த அளவே பயன்பாட்டில் இருக்கின்றன என்பதால், இத்தீவுகளின் வேளாண் தொழில் பெருமளவு இயற்கை வழியிலேயே அமைந்துள்ளது. இவற்றில் சில சுவாரசியமான அம்சங்களை இந்தத் தொடரில் தொடர்ந்து பார்ப்போம்.
(அடுத்த வாரம்: மானாவாரி நெல்)
அ. வேல்முருகன், அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் உள்ள மத்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர். அந்தமான் பழங்குடிகளின் வேளாண் முறைகள் குறித்து ஆராய்ந்துவருகிறார். அந்தமான் துணை நிலை ஆளுநரின் விருதும் பெற்றுள்ளார்.
தொடர்புக்கு: velu2171@gmail.com |