உயிர் மூச்சு

லேபிளின் மகிமை!

சி.ஹரி

ஒரு பானத்தின் சுவை என்பது அதன் ருசியால் தீர்மானிக்கப்படுவது. ஆனால் நாகரிகமடைந்த இச்சமூகத்தில் ஒரு பண்டத்தை அதன் ருசிக்கேற்ப மட்டும் ரசித்துவிட்டால் எப்படி? தாங்கள் எதைச் சாப்பிடுகிறோம் என்பதைவிட அதை எங்கே சாப்பிடுகிறோம், என்ன விலை கொடுத்துச் சாப்பிடுகிறோம் என்பதில்தான் பலருக்குத் திருப்தி, பெருமை எல்லாம்.

சமீபத்திய சமூகவியல் ஆராய்ச்சியும் இதை நிரூபிக்கிறது. “சூழலுக்குத் தீங்கிழைக்காத வகையில் தயாரானது” என்று சான்றுரைக்கப்பட்ட பண்டங்களுக்கு இப்போது மவுசு கூடிவருகிறது. படித்தவர்கள், பணக்காரர்கள் அனைவரும் இப்போது இந்தப் புவி மீது காதல் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். படிக்காதவர்கள், ஏழைகளைவிட அவர்கள்தான் இப்போது இந்தப் புவியை அதன் இயற்கைத் தன்மை மாறாமல் காப்பாற்றத் தீவிரமாக முனைகிறார்கள். எனவே சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்காத தொழில்நுட்பம், தாவரம், விளைபொருள் ஆகியவற்றைத் தேடித் தேடிப் பயன்படுத்துகிறார்கள்.

காவ்லே பல்கலைக்கழகம், சிகாகோ பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களின் சமீபத்திய ஆராய்ச்சி இதை நிரூபித்துள்ளது. ஒரே ரகக் காபிக் கொட்டையிலிருந்து பொடி அரைத்து அதைத் தனித்தனிப் பெட்டிகளில் அடைத்து, ஒன்றை ‘சாதாரண ரகக் காப்பி’ என்றும் மற்றதை ‘சுற்றுச்சூழலின் நண்பன்’ என்றும் அடைமொழி கொடுத்தார்கள். சிலரை அழைத்து இரண்டையும் பருகக் கொடுத்தார்கள்.

இரண்டையும் சுவைத்த அவர்கள் ‘சுற்றுச் சூழலின் நண்பன்’ என்ற ரகக் காப்பியே சுவையும் மணமும் மிகுந்திருப்பதாகக் கருத்து தெரி வித்தனர். நல்லதையே ஆதரிக்க வேண்டும் என்ற எண்ணம் மிகுந்துவருவதால் இத்தகைய தேர்வுகளும் தீர்ப்புகளும் வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையே பல பண்டங்களைச் சந்தைப் படுத்துவதற்கான உத்தியாகவும் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டனர். ‘இயற்கை உரமிட்டு வளர்க்கப் பட்டது', ‘ரசாயனம் கலக்காமல் தயாரிக்கப்பட்டது', ‘பாரம்பரிய முறைச் சாகுபடியால் விளைந்தது', ‘இயந்திரமோ தொழில்நுட்பமோ இல்லாமல் கைப்பக்குவமாகச் செய்தது' என்றெல்லாம் லேபிள் ஒட்ட ஆரம்பித்துவிட்டார்கள். இந்த லேபிளில் வரும் பொருள்களுக்குக் கூடுதல் விலை தந்து வாங்கவும் மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

பூமியைக் காப்பாற்றுவது என்னும் நோக்கமும் இயற்கைப் பொருள்களைச் சாப்பிடுவது நல்லது என்னும் எண்ணம் இருப்பது நல்லதுதான். ஆனால் ஒட்டப்பட்ட லேபிளில் உள்ளதெல்லாம் உண்மைதானா என்பதையும் சரிபார்த்துக்கொள்வது அவசியம்.

SCROLL FOR NEXT