உயிர் மூச்சு

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 34: எதுவும் தனித்து வாழ்வது சாத்தியமில்லை

பாமயன்

மண்ணில் புற்கள் முளைக்கின்றன, புற்களைத் தின்று பூச்சிகள் வளர்கின்றன, அவற்றைத் தின்று தவளைகள் வளர்கின்றன, அவற்றின் தலைப்பிரட்டைகளைத் தின்று மீன்கள் வளர்கின்றன, மீன்களைத் தின்று மனிதர்கள் வளர்கின்றனர். இந்த அடுக்கு முறை என்பது ஒரு பெருமேடுபோலக் காணப்படும். ஏனெனில் சில மனிதர்கள் வாழப் பல மீன்கள் தேவை, சில மீன்கள் வாழப் பல தவளைகள் தேவை, சில தவளைகள் வாழப் பல பூச்சிகள் தேவை, சில பூச்சிகள் வாழப் பல பயிர்கள் தேவை. இப்படியான முக்கோண வளர்ச்சி இங்கு நோக்கத்தக்கது.

ஆனால் இயற்கையில் இப்படி நேர்கோட்டில் மட்டும் உணவுச் சங்கிலி விரிவதில்லை, அது ஒரு சிலந்தி வலைபோல, மேலும் பல சங்கிலிகளை இணைத்துக்கொண்டே விரிவடைகிறது. அதாவது பயிர்களைப் பூச்சிகள் மட்டும் உண்பதில்லை, முயல்கள், மான்கள் போன்றவையும் உண்கின்றன. பூச்சிகளைத் தவளைகள் மட்டும் உண்பதில்லை, பறவைகளும் உண்கின்றன. தவளைகளை மீன்கள் மட்டும் உண்பதில்லை, பாம்புகளும் உண்கின்றன. மீன்களை மனிதர்கள் மட்டும் உண்பதில்லை, விலங்குகளும் பறவைகளும் உண்கின்றன. இப்படியாக இந்த உணவு வலை விரிந்துகொண்டே போகிறது.

இயற்கை உரம் தயாரிப்பு

பொதுவாகப் பூச்சிகளும், விலங்குகளும் பயிர்களை உண்பதோடு மட்டுமல்லாது மண்ணுக்கும் சத்துகளைக் கொடுக்கின்றன. ஒரு ஆடு மாதத்துக்கு 300 கிலோ பயிர்களைத் தின்பதாக வைத்துக்கொள்வோம். அது உடல் முழுவதும் 300 கிலோ கறியை வைத்திருப்பதில்லை, 280 கிலோவுக்கும் மேலான உணவைக் கழிவாக, அதாவது சத்தான உரமாக மண்ணுக்குத் தருகிறது. இப்படியாக ஒவ்வொரு உயிரினமும் தனது உடல் கழிவு மூலமாகவும், இறந்த உடல் மூலமாகவும் மண்ணை வளமாக்கிக்கொண்டே இருக்கிறது.

மனித இனம்தான் தனது கழிவுகளை ‘பிளஷ் அவுட்' தொட்டிகள் வழியாகச் சாக்கடைக்குத் தள்ளி மண் வளமாவதைத் தடுக்கிறது. பூச்சிகள்கூடத் தாம் தின்பதைக் குறைந்த அளவு எடுத்துக்கொண்டு, மீதத்தை மண்ணுக்கு உரமாகக் கொடுக்கின்றன. ஆகப் பயிர்கள் வளர வேண்டுமானால், இந்த உரம் தயாரிக்கும் வேலை நடந்தாக வேண்டும்.

(அடுத்த வாரம்: கொஞ்சம் உணவு நிறைய உரம்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

SCROLL FOR NEXT