தான் ஒரு தேர்ந்த காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் இல்லை என்று தன்னடக்கத்துடன் கூறும் ரவிராஜாவின் கூற்றைப் பொய்யாக்குகின்றன, அவர் எடுத்திருக்கும் ஒளிப்படங்கள். கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர், பரபரப்பான பணி வாழ்க்கைக்கு இடையே காட்டுயிர்களை ஒளிப்படம் எடுப்பதன் மூலம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார். காட்டுயிர்களைத் தேடித்தேடிப் படமெடுக்கும் தன் சிறு வயது கனவு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்தான் உயிர்பெற்றது என்கிறார் ரவிராஜா.
பறவைகள் தந்த புரிதல்
பள்ளிச் சிறுவனாக இருந்தபோது வீட்டில் லவ் பேர்ட்ஸ், வண்ணக் கிளிகள் ஆகியவற்றை வளர்த்திருக்கிறார். ஓரளவு விவரம் தெரிந்ததும் பறவைகளையும் உயிரினங்களையும் செல்லப் பிராணிகள் என்ற போர்வையில் கூண்டுகளில் அடைத்து வைப்பது தவறு என்பது புரிந்தது.
சிரிப்பான் வகைப் பறவை
“பறவைகளையும் உயிரினங்களையும் அவற்றின் இயல்பான வாழிடத்திலிருந்து பிரிப்பது தவறு என்று உணர்ந்த பிறகுதான், அவற்றின் மீதான ஆர்வம் அதிகரித்தது. கல்லூரிப் படிப்பை முடித்ததும் பறவைகள் குறித்த புத்தகங்களைப் படித்து நிறைய தெரிந்துகொண்டேன்” என்று சொல்லும் ரவிராஜா, காட்டுயிர்களைப் படம் எடுப்பதற்காகவே பல்வேறு பகுதிகளுக்கும் பயணப்படுகிறார்.
இயற்கையைச் சிதைக்க வேண்டாம்
ஒளிப்படம் எடுப்பதற்குப் போதிய பயிற்சி தேவை என்பதால், தன் நண்பர் ஒருவரிடம் ஒளிப்படக் கருவிகள், அவற்றின் நுட்பம் குறித்தெல்லாம் முதலில் கேட்டறிந்துகொண்ட பிறகே களத்தில் கால் பதித்தார். அனுபவமும் பயிற்சியும் ஒளிப்படக் கலையில் நேர்த்தியைக் கூட்டின. ஊட்டி, வால்பாறை, பவானி, கர்நாடகம், ராஜஸ்தான், டெல்லி, உத்தராகண்ட் ஆகிய இடங்களுக்குச் சென்று காட்டுயிர்களைப் படமெடுத்திருக்கிறார். இப்படிப் படங்கள் எடுக்கிறபோது காட்டுயிர்களையும் அவற்றின் வாழிடங்களையும் எந்த வகையிலும் தொந்தரவு செய்வதில்லை என்கிறார்.
“ஒரு முறை திருச்சூரில் ஏரிக்கு அருகே பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு கழுகு, நீர்க்காகத்தை வேட்டையாடி இரையாக்கிக் கொண்டிருந்தது. இயற்கையின் பரிபூரணமே இந்த உணவுச் சங்கிலியில்தானே இருக்கிறது! கழுகை எந்த விதத்திலும் இடையூறு செய்யாமல் போதுமான தொலைவில் நின்று படம் எடுத்தேன். தங்களுக்கு நல்ல படம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பலரும் பறவைகளின் கூடுகளையும் உயிரினங்களின் பொந்துகளையும் கலைத்துவிடுகிறார்கள். சில நேரம் குஞ்சுகளையும் தொந்தரவு செய்கிறார்கள். உயிரினங்களுக்கு இது எத்தனை பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர்வதில்லை” என்று வருத்தம் தெரிவிக்கிறார் ரவிராஜா.
ரவிராஜா
அவதானிப்பு தந்த புரிதல்
“கர்நாடகத்தில் உள்ள கபினிக்கு அருகே ஒரு காட்டில் படமெடுப்பதில் ஆழ்ந்திருந்தபோது, சிறுத்தையொன்று மரத்திலிருந்து இறங்கி வந்ததைக் கடைசி நேரத்தில்தான் உணர்ந்தேன். அது என்னை உற்றுப் பார்த்த நொடிகள் அற்புதமானவை” என்கிறார் ரவிராஜா.
பறவைகளையும் விலங்குகளையும் இப்படி அவதானிப்பதன் மூலமாகச் சுற்றுச்சூழல் குறித்த புரிதல் இவரிடம் அதிகரித்திருக்கிறது. இயற்கை செழிக்கும் பெரும்பாலான ஏரிகள் பிளாஸ்டிக் கழிவால் நிரம்பியிருப்பதைப் பற்றி கவலை தெரிவிக்கும் இவர், சூழலியல் பாதுகாப்பில் ஒவ்வொருவரும் அக்கறையுடன் ஈடுபட வேண்டும் என வலியுறுத்துகிறார்.
“நிறைய பேர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி பேசுகிறார்கள். காடுகளை அழிப்பதற்கு எதிராகவும் குரல்கொடுக்கிறார்கள். பெரும்பாலும் பேச்சோடு நின்றுவிடுகின்றன. எதையுமே செயல்பாட்டுக்குக் கொண்டுவந்தால் மட்டுமே, உலகில் எஞ்சியிருக்கும் காட்டுயிர்களைப் பாதுகாக்க முடியும்” என முடிக்கிறார்.