உயிர் மூச்சு

பூச்சி சூழ் உலகு 16: சருகுகளுக்கு இடையே கும்பிடு பூச்சி

ஏ.சண்முகானந்தம்

சில ஆண்டுகளுக்கு முன் களக்காடு பயணத்தில் ஒரு நாள் காலைப் பொழுதில், அருகில் இருந்த பகுதிகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம் என மெல்ல நடைபோட்டோம். முந்தைய இரண்டு நாட்களிலும் கரடியைத் தவிர, பேருயிர்கள் எதையும் பார்த்திருக்கவில்லை. ஆனால், பூச்சிகளின் உலகில் இன்புற்று இருந்தோம்.

நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த காட்டுப் பாதையில் காய்ந்தும் காயாமலும் இருந்த புதர்ச்செடியை நோக்கி என் கவனம் சென்றது. 'அப்படி என்ன பார்த்துவிட்டாய்?' என நண்பர்கள் கேட்டனர். சற்று அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு, இலைகளில் பார்வையைச் செலுத்தினேன். நான் எதிர்பார்த்தது சரிதான்.

காய்ந்த கிளைகள், இலைகளுக்கு அடியில், உருமறைத் தோற்றத்தில் தயிர்க்கடை பூச்சிகள் (கும்பிடு பூச்சி-Mantis) இணை சேர்ந்த நிலையில் இருந்தன. உடன் வந்திருந்த நண்பர்கள், 'உனக்குப் பூச்சியை விட்டால் வேறு எதுவும் தெரியாது' எனக் கேலியாகக் கூறிவிட்டு வேறு பகுதிக்குச் சென்றனர்.

தயிர்கடைப் பூச்சிகளில் ஆண் சிறியதாகக் காணப்பட, பெண் பெரியதாக உள்ளது. அடர் பழுப்பு நிற உடலில், மஞ்சள் புள்ளியும், மெல்லிய கோடுகளும் தென்பட்டன. சரியான கோணத்திலும் துல்லியமாகவும் தயிர்க்கடை பூச்சிகள் அமைந்த ஒரு சில ஒளிப்படங்களில் இதுவும் ஒன்று.

- கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: shanmugam.wildlife@gmail.com

SCROLL FOR NEXT