சில ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம், மேற்கு மலைத்தொடர் அடிவாரத்தில் உள்ள களக்காட்டுக்குச் சென்றிருந்தபோது, காலை பொழுதில் காட்டுப் பாதையில் நடந்து சென்றோம். காட்டுப் பாதையில் வளர்ந்திருந்த புதர்ச்செடியில் மரச்சிலந்தியொன்று (Wood Spider) வலைப்பின்னிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. காலை ஒளியில் மரச்சிலந்தியின் உடலின் பின்பகுதியில் இருந்து வலை பின்னுவதற்கான நூலிழைகள் வெளிவருவதை சிறப்பாகக் காட்சிப்படுத்த முடிந்தது.
கறுப்பு நிற பட்டை, இளமஞ்சள் நிற பட்டையோடு உடல் காணப்பட, கால்கள் கறுப்பு, இளமஞ்சள் பட்டையோடு காணப்பட்டன. ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிற மரச்சிலந்தியின் முகம் காலை பொன்னொளியில் பார்க்க அழகாக இருந்தது. ஆங்கிலப் படங்களில் சிலந்திகளை அச்சுறுத்தும் உயிரினமாக காட்டும் பிற்போக்குதனத்துக்கு மாறாக, பெரிய வட்ட வடிவ வலையும், சிலந்தியும் பார்ப்பதற்கு அழகுடன் காட்சியளித்தன.
சில ஒளிப்படங்கள் எடுத்தும் திருப்தியடையாமல், சற்று பொறுமையாகக் காத்திருந்து, அதன் பின்பகுதியில் இருந்து நூலிழைகள் வெளிவரும் நேரத்தை எதிர்நோக்கிப் பொறுமையாகக் காத்திருந்து பதிவு செய்திருந்தேன்.
வலை பின்னாத சிலந்திகளும், வலை பின்னும் சிலந்திகளும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. மற்ற சிலந்திகளை உண்டு தன் இன உண்ணிகளாகவும் விளங்குகின்றன. சாலையோரங்களில் உள்ள புதர்ச்செடிகளை ‘வீணானது' எனக் கருதி அழிப்பதால், ‘சமூகப் பூச்சிகளாக' கருதப்படும் சிலந்திகள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன என்பதை கவனத்தில் கொள்வோம்.
- கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: shanmugam.wildlife@gmail.com