உயிர் மூச்சு

காடுகளை கண்காணிக்க ஆளில்லா உளவு விமானங்கள்!

டி.எல்.சஞ்சீவி குமார்

வனப் பாதுகாப்பு மற்றும் வனக்குற்றங்களைத் தடுக்க ஆளில்லா விமானங்களை வனங்களில் பயன்படுத்த ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. முதல்கட்டமாக மத்தியப் பிரதேசத்தின் பன்னா வனப்பகுதியில் வரும் ஜனவரி மாதம் இத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

வனப் பாதுகாப்பு, வளர்ச்சி தொடர்பாக வனங்களைக் கண்காணிக்க பல்வேறு நாடுகள் தங்கள் வனப்பகுதிகளில் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி வருகின்றன. இந்தோனேசியாவின் சுமத்ரா மற்றும் போர்நியோ காடுகளில் மனிதக் குரங்குகள் பாதுகாப்பில் ஆளில்லா விமானங்களின் பங்கு அளப்பரியது. நேபாளத்தின் சிட்வான் தேசியப் பூங்காவில் காண்டாமிருகங்கள் மற்றும் யானைகளைக் கண்காணிக்கவும் இவ்வகை விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சீனா, ஸ்காட்லாந்து, நமீபியா மற்றும் சில மேற்கத்திய நாடுகளின் வனத் தேவைகளுக்காக இவ்வகை விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் அனுமதி

தற்போது இந்தியாவிலும் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்த அனுமதி பெற்றுள்ளது டேராடூனில் இருக்கும் இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலையம். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கூட்டு முயற்சியில் இத்திட்டம் செயல்படுத்தபட இருக்கிறது. இதுகுறித்து இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானியும் ஆளில்லா விமானத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான ரமேஷ் ‘தி இந்து’-விடம் கூறுகையில், “இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (Worldwide fund for nature) அமைப்பின் உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பாதுகாப்புக் காரணங்களால் இந்தியாவில் ஆளில்லா உளவு விமானங்களைப் பயன்படுத்த அனுமதி பெறுவது கடினம். ஆனால், இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலையம் கடந்த சில மாதங்களாக ராணுவ அமைச்சகம் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கான அனுமதியைப் பெற்றுள்ளது.

வெள்ளோட்டம்

தொடர்ந்து அமெரிக்காவின் ‘கன்சர்வேஷன் டிரோன்ஸ்’ நிறுவனம் மற்றும் ஸ்விட்சர்லாந்தின் தொழில்நுட்பக் குழுவினர் உதவியுடன் கடந்த ஏப்ரல் மாதம் அஸ்ஸாம் மாநிலம் கசிரங்கா புலிகள் காப்பகத்தில் வெள்ளோட்டமாக ஆளில்லா விமானம் வெற்றிகரமாக இயக்கப்பட்டது. வரும் ஜனவரி மாதத்தில் மேலும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் மத்தியப் பிரதேசம் பன்னா வனப்பகுதியில் ஆளில்லா விமானம் இயக்கப்பட உள்ளது.

வரைபடங்கள் தயாரிக்க…

விமானம் எடுக்கும் புகைப்படங்கள் மூலம் வனங்கள் வளர்ச்சி மற்றும் வனங்கள் அழிப்பைக் கண்காணித்து வரைபடங்கள் தயாரிக்க முடியும். வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணிகளை மேலும் சிறப்பாக செய்ய முடியும். தவிர, வனத்துக்குள் சட்டவிரோதக் கும்பல் நடமாட்டம், கஞ்சா பயிரிடுதல், வன விலங்கு வேட்டை போன்றவற்றையும் எளிதாகக் கண்காணித்து தடுக்க இயலும். மயக்க ஊசி செலுத்துதல், ஸ்பிரே தெளிப்பு தொழில்நுட்பம் போன்ற வசதிகளும் இந்த விமானங்களில் இருப்பதால் யானை, புலி, காண்டாமிருகம் போன்ற விலங்குகள் ஆபத்தில் சிக்கியிருந்தால் உடனடியாக அவைகளை மீட்க முடியும். யானை, காண்டாமிருகம் போன்ற பெரிய விலங்குகள் ஊருக்குள் புகுந்தால் இந்த விமானங்கள் மூலம் அவ்விலங்குகளுக்கு ஒவ்வாத ஒலிகளை எழுப்பியும் ஒவ்வாத வாசனை ஸ்பிரேக்களை தெளித்தும் அவற்றைப் பாதுகாப்பாக வனத்துக்குள் அனுப்ப முடியும். மத்தியப் பிரதேசம் பன்னாவைத் தொடர்ந்து தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு வனப் பகுதிகளுக்கு இதனை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT