முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் விளாத்திகுளம் மார்க்கண்டேயனின் இயற்கை வேளாண் பண்ணை அமைந்துள்ள பகுதியில் ஏறத்தாழ முப்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் கரிசல்காட்டு மானவாரி வேளாண்மை நடக்கிறது. இங்கு எந்தவிதமான பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தப்படுவதில்லை. யூரியா போன்றவையும் கிடையாது. டி.ஏ.பி. எனப்படும் உரத்தை மட்டும் சிலர் பயன்படுத்துகின்றனர்.
இப்படி இயல்பாகவே இயற்கை முறையில் விளைவிக்கப்படும் மிளகாய், கொத்தமல்லி, பயறுகளை வெளியூர் வணிகர்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கிச் செல்கின்றனர். இந்த உற்பத்திப் பொருட்களை அவர்கள் ‘ஆர்கானிக்' என்று அறிவித்து, கொள்ளை லாபம் எடுக்கின்றனர்.
பாரம்பரியப் பொடிகள்
இதற்கு மாற்றாக ஒரு மாதிரி மதிப்புக்கூட்டும் தொழிலை மார்க்கண்டேயன் நடத்திவருகிறார். இவருடைய பண்ணையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, நமது பாரம்பரியமான பொடிகளைச் செய்வதில் நிபுணத்துவம் உள்ள பெண்களின் கைப்பக்குவத்தில் மசாலா பொடி முதல் மிளகாய், இட்லிப் பொடிவரை தயார் செய்துகொடுக்கிறார். இதன் தரமும் மணமும் நம்மை ஈர்க்கின்றன.
இந்தப் பகுதிக்குச் செல்லும்போதே நாம் மறந்துபோன பாட்டி செய்த மசாலாவின் பண்டைய மணம் நம் மூக்கைத் துளைக்கிறது. இதனால் இப்பொருட்களுக்கு நல்ல மதிப்பு உள்ளது. இதை மற்றவர்கள் தயாரித்து விற்பனை செய்யவும் மார்க்கண்டேயன் கற்றுத் தருகிறார். யாராவது இளைஞர்கள் வாங்கி விற்க வேண்டும் என்றுவந்தால், சிறு முன்தொகையுடன் போதிய அளவு பொருட்களை வழங்கி அவர்களது முன்னேற்றத்துக்கும் உதவுகிறார். இவரது தாரக மந்திரம் தரம் மட்டுமே. தரம் சிறப்பாக இருந்தால், விலை ஒரு பொருட்டே அல்ல என்று அடித்துக் கூறுகிறார்.
புதியவர்களுக்கு வழிகாட்டி
இது தவிரப் பசுமைக்குடில் ஒன்றை அமைத்து அதில் இயற்கை முறையில் வெள்ளரி, காய்கறிச் சாகுபடி செய்துவருகிறார். பொதுவாகப் பசுங்குடில் வேளாண்மையில் அதிக ரசாயனங்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால், இவர் எந்த ரசாயனத்தையும் பயன்படுத்தாமல் பசுங்குடில் காய்கறி வேளாண்மையைச் செய்துகாட்டியுள்ளார். இவரது பண்ணை, தமிழக அங்கக வேளாண்மைச் சான்றிதழ் பெற்றுள்ளது.
இப்படிச் சிறப்பாகப் பண்ணையை நடத்துவதோடு மட்டுமல்லாது, மற்றவர்களுக்கும் இவர் கற்றுத் தருகிறார். ஆர்வத்துடன் வருபவர்களுக்கு அடிப்படைகளை விளக்கி எப்படி வெற்றிகரமாக ஒரு பண்ணையை நடத்த வேண்டுமென ஒரு பேராசிரியரைப் போல் வகுப்பு எடுக்கிறார். அவரது பண்ணையைப் பார்க்கச் சென்றிருந்த நேரத்தில், ஒரு இளம் தம்பதிக்குப் பால்பண்ணைத் தொழில்நுட்பங்களை விவரித்துக்கொண்டிருந்தார்.
இவர் இப்பகுதியின் இயற்கை வேளாண்மை முன்னத்தி ஏர் என்பதில் ஐயமில்லை என்பதுடன், கிராமப் பொருளாதாரத்தின் அடிநாதமாக விளங்கும் மாட்டுப் பொருளாதாரத்தை மிக இயல்பாக விளக்கும் இவரைப் போன்றவர்கள் இருக்கும்வரை, இந்தியக் கிராமங்களை அசைத்துவிட முடியாது என்ற நம்பிக்கையும் சுடர் விடுகிறது.
இன்னும் இருக்கிறார்கள்!
கடந்த ஓராண்டாகத் தமிழகம் முழுவதும் இயற்கை வேளாண்மையில் முன்னத்தி ஏர்களாக விளங்கிவரும் பல்வேறு முன்னோடி உழவர்களையும் அவர்களுடைய நுட்பங்களையும் அறிந்தோம். இன்னும் எண்ணற்ற முன்னத்தி ஏர் உழவர்கள் நம் முன்னே உள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. எழுதப்படாதவர்களில் சிலர் நன்கு அறியப்பட்டவர்களும்கூட. நேர நெருக்கடியால் அவர்கள் எல்லோரையும் பற்றி இந்தத் தொடரில் எழுத முடியவில்லை. அதேபோல, வெளியே தெரியாத எண்ணற்ற முன்னத்தி ஏர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். மண்புழுக்கள் எவ்வாறு மண்ணுக்குள் மறைந்து நன்மை செய்துகொண்டே இருக்கின்றனவோ, அப்படி இவர்கள் இருக்கிறார்கள். இயற்கையைப் போற்றும் நம் மரபின் தொடர்ச்சியான இவர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி.
கவிஞர்கள் கவிதையை எழுத மட்டுமே செய்கின்றனர். ஆனால், உழவர்களோ கவிதையாகவே வாழ்கின்றனர். இவர்களுக்கு விருதுகள் கிடைப்பதில்லை என்றாலும், உணவு உற்பத்தி என்னும் விருதுக்காகவே ஏர் என்னும் எழுதுகோலைக் கொண்டு நிலத்தில் உழவர் கூட்டம் எழுதுகிறது. எதிர்பார்ப்பே இல்லாமல் ஒரு காலக் கடிகாரம்போல இயங்கும் உழவர்களை, வேளாண்மைக்கு வெளியே இருப்பவர்களும் உரிய முறையில் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவு ஒரு தொழிற்சாலையில் உற்பத்தியாகி, பதப்படுத்தப்பட்டு வருவதைவிட ஓர் உழவரிடமிருந்து நஞ்சு கலப்பின்றி ஊட்டத்துடன் வருகிறதா என்பதை உறுதி செய்ய முயற்சிக்க வேண்டும். அதற்குத் தேவையானவற்றில் ஒரு சிறு துரும்பையாவது நாம் ஒவ்வொருவரும் கிள்ளிப் போட வேண்டும். அப்போது நாம் நலம் பெறுவதுடன், நாடும் வளம் பெறும்.
(நிறைவடைந்தது)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் | தொடர்புக்கு: adisilmail@gmail.com
மார்க்கண்டேயனைத் தொடர்புகொள்ள: 9842905111