உயிர் மூச்சு

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 16: நமது வேளாண் முன்னோடிகளின் படைப்பாக்கத் திறன்

பாமயன்

மாமரத்தில் ஒட்டுக்கட்டுவதில் வல்லுநராக விளங்குபவர் நாகை மாவட்டம் வேட்டைக்காரன் இருப்பைச் சேர்ந்த ராஜசேகர் (97510 02370). இவர் ஒரே மா மரத்தில் பல மா இனங்களை ஒட்டு செய்துள்ளார். இதன்மூலம் பல பருவங்களிலும் மாம்பழங்களைப் பெற முடியும் என்று அவர் கூறுகிறார். பழப் பண்ணைகளில் உதிர்ந்து விழும் பழங்கள், பண்ணையில் பழ ஈக்களின் அளவை அதிகரிக்கும். இதனால் பல நோய்கள் பழச் செடிகளைத் தாக்கும். இதைத் தடுக்கப் பெரிய செலவுகள் செய்ய வேண்டியதில்லை.

பழங்களை உண்ணும் கோழிகள் போன்ற உயிரினங்களை வளர்த்தாலே போதுமானது. அவை வருமானமும் தரும், பழ நோய்களும் கட்டுப்படும். குறிப்பாகப் பப்பாளித் தோப்புகளில் நிறையப் பழங்கள் உதிர்ந்துவிடும். அவை ஈக்களின் பெருக்கத்துக்கு அடிப்படையாக இருக்கும். கொசுக்களும் பெருகும். இதைக் கட்டுப்படுத்தக் கோழிகள் மிகவும் பொருத்தமானவை. ஒரு பப்பாளி மரம் ஒரு கோழிக்கான ஓராண்டு உணவைத் தர முடியும் என்று பாத தபோல்கர் குறிப்பிடுகிறார்.

கழிவும் உணவே

நடையனூர் மதியழகன் (94425 77431) கோழிக் கழிவுகளைச் சாண எரிவளிக் கலனில் சேர்த்து மின்சாரம் எடுத்தார். பின்னர் அதே கோழிச் சாணத்தை மண்புழு உரமாக மாற்றினார். அதையே ஈக்களுக்குக் கொடுத்து ஈப்புழுக்களைக் கோழிகளுக்கு உணவாக மாற்றினார்.

மனித மலத்தை அகற்றுவது என்பது ஒரு பெரிய சவால். இதற்குத் தீர்வாக, விருப்பமுள்ளவர்கள் பன்றிகளைப் பயன்படுத்தலாம். அவை மலத்தைத் தின்று புரதத்தைக் கொடுக்க முடியும், மலமும் அகற்றப்படும். பண்ணையில் கழிவறைகளை அமைக்கும்போது, பன்றிகள் மறைவாக வந்து மலத்தை உட்கொள்ளும் அமைப்பை ஏற்பாடு செய்தால் போதுமானது.

மதுரை முன்னோடி

நமது மரபுவழி வானவாரி (மானாவாரி) நிலங்களில் இத்தகைய படைப்பாற்றல் மிக்க ஊடுபயிர் முறை உள்ளது. எடுத்துக்காட்டாக மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி பகுதியில் வானவாரி பருத்தி சாகுபடியில் ஊடுபயிர்களாகத் துவரை, தட்டை, பச்சை மொச்சை, கொண்டைக் கடலை என்று பயறு வகைகளையும், மகழிக் கீரை, தொகிழிக் கீரை, அகத்தி போன்ற கீரை வகைகளையும், அதலைக்காய் போன்ற கொடிக்காய்களையும் இணைத்துக்கொண்டே செல்வார்கள். ஆனால் பருத்திச் சாகுபடிக்குள் பூசணி போன்ற கொடிகளை இணைக்கக் கூடாது. இவை செடியை அமிழ்த்தி விளைச்சலைக் கெடுத்துவிடும். எனவே, இது பற்றிய தெளிவு தேவை.

குடும்பத்துக்கே உணவு

வன்னிவேலம்பட்டி பாண்டி (89400 13296) பருத்திக்குள் ஊடுபயிராகப் பத்துப் பயிர்கள் சாகுபடி செய்யும் முறையை விளக்குவார். இதிலிருந்து ஒரு குடும்பத்துக்குத் தேவையான உணவை வானவாரி நிலத்தில் இருந்தும் பெற முடியும் என்பது விளங்கும்.

இப்படி நமது பண்ணையில் ஒவ்வொரு வளத்தையும் பல முறை பயன்படுத்துவதும், பல கூறுகளை ஒரு பண்ணைக்குள் இணைப்பதும் பண்ணையின் விளைச்சல் திறனைப் பெருக்கும். இந்த எல்லையற்ற புத்தாக்கப் புனைவில், நமது கற்பனைதான் இறுதி எல்லை.

(அடுத்த வாரம்: பண்ணையில் ஒவ்வொன்றும் பணி செய்கிறது)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

SCROLL FOR NEXT