குளோபல் வார்மிங், பருவநிலை மாற்றம் பற்றியெல்லாம் பேசுவது ரொம்ப சலிப்பாக இருக்கிறதா? ஓர் ஆண்டில் இந்தப் பூதாகரமான பிரச்சினையைப் பற்றி விவாதிப்பதற்கும், பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் பல நாடுகள் தங்கள் அரசு அதிகாரிகளை உலகெங்கும் அனுப்பிக்கொண்டிருக்கின்றன. ஆனால், ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? எதுவுமில்லை, எல்லாம் அப்படியே மோசமாகத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆனால், அதற்காகப் புவி வெப்பமடைதல் பற்றி அக்கறை காட்டாமலோ, பேசாமலோ விட்டுவிட முடியுமா? பருவநிலை மாற்றம் எந்த அளவுக்கு நம்மை நேரடியாகப் பாதிக்கப்போகிறது என்று தெரியுமா? அது நம் சாப்பாட்டிலும் கை வைக்கப் போகிறது.
ஐ.நா. சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஆய்வின் முடிவுகள், பருவநிலை மாற்றத்தால் பயிர் விளைச்சல் குறைந்துவருவதை உறுதிப்படுத்துகின்றன. கோதுமைப் பயிர்தான் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. வெப்பநிலை மாற்றம், மழை பெய்வதில் மாறுபாடு போன்றவற்றால் 2050-க்குள் உணவுப் பொருட்களின் விலை மூன்றிலிருந்து 84 சதவீதம் உயரப்போகிறது. அதனால் சீக்கிரமே நமது தட்டுகளில் விழும் உணவின் அளவு குறையும், செலவும் அதிகரிக்கும்.
ஒவ்வொரு பகுதிக்கும் உள்ள சிறப்பு உணவு வகைகள், அந்த ஊரின் தண்ணீர், தட்பவெப்ப நிலையைப் பொறுத்தே அமைகின்றன. அதெல்லாம் இனிமேல் ஒட்டுமொத்தமாகக் காணாமல் போகக்கூடும்.