‘சூழலியல் வெறுமனே கல்வி அல்ல, அது வாழ்க்கை. ரத்தமும் சதையும் என்பார்களே; அதுபோல் இயற்கையில் தோய்ந்து அதன் ஓர் அங்கமாகவே அனுபவித்து வாழுகின்ற வாழ்க்கைதான் சூழலியல்,’ என்று பேசுகிற ‘ஏழாவது ஊழி’ நூல் பசுமை இலக்கியத்தையும் தாண்டித் தமிழிலும் தீவிரக் கவனம் கொள்ள வேண்டிய நூல்.
சூழலியல் குறித்துப் பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் இன்றைக்குப் பத்தாண்டுகளுக்கு முன்பாகவே அதன் அத்தனை கூறுகள் குறித்தும் விரிவாகவும் ஆழமாகவும் எழுதியிருக்கும் பொ.ஐங்கரநேசன், ஈழத்தைச் சேர்ந்த சூழல் இதழியலாளர். தற்போது அங்கு வடக்கு மாகாண அமைச்சராக அவர் பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்கது. நாற்பத்தோரு கட்டுரைகள் அடங்கிய இந்நூலின் பேசுபொருள் புழு, பூச்சியில் தொடங்கிப் புவிவெப்பமாதல் வரைக்கும் விரிவானது.
பதற வைக்கும் தகவல்கள்
இன்றைய பாலைப் பகுதியில் அடைமழை பொழிய, நமது வளமான நிலங்கள் வறண்டு போகலாம் எனப் பருவநிலை மாற்றப் பாதிப்புகளை விளக்குவதிலிருந்து இந்நூல் தொடங்குகிறது. இதில் பசுங்குடில் வாயு வெளியீட்டில் நான்கிலொரு பங்கைக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் அலட்சியத்தால் பாதிக்கப்படப் போவது அதனுடைய மக்களே என்று எச்சரிக்கிறது. காரணம், உலகில் ஓசோன் படலம் மெலிந்தால் தோல் புற்றுநோயால் அவதியுறுபவர்களில் அமெரிக்கர்களே அதிகம். அதுபோல் யானைத் தந்தத்தில் ஸ்னூக்கர் பந்து செய்வதை நிறுத்துவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட நெகிழி இன்று எவ்வளவு பெரிய தீமையாக மாறியிருக்கிறது என்பதை, அதிலுள்ள டயாக்சின் நஞ்சு சென்னை பெருங்குடியில் வசிக்கும் பென்களின் தாய்ப்பால்வரை ஊடுருவியுள்ளதைக் கூறி விளக்குகிறார்.
இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் வதை முகாமில் யூத மக்களைக் கொல்லப் பயன்பட்ட போஸ்ஜீன் நஞ்சைவிட 10 மடங்கு வீரியம்மிக்கப் பெர்ஃப்ளூரோ ஐசோ பியூட்டேன் என்கிற நஞ்சை வெளிப்படுத்தும் ‘நான் ஸ்டிக்’ பாத்திரங்களுடன் பெண்கள் புழங்குவதைப் பதைபதைப்புடன் விளக்குகிறது இந்நூல். சமையலறை தீமையோடு உணவு அரசியலுக்கும் நீளும் இந்நூல், உருளைக்கிழங்கு வாழைப்பழம் முதலிய உணவுகளின் உயிரினப் பன்மை அழிக்கப்பட்டு, அது எவ்வாறு ஒற்றை வகைப் பயிராய் மாற்றப்படுகிறது என்பதை விவரிக்கிறது. ஒவ்வொரு ஹாம்பர்கர் உணவுக்காகவும் ஐந்து சதுர மீட்டர் மழைக்காட்டு வளம் பலியாவதைக் கூறிப் பதறவைக்கிறது.
செயல்படுத்த வேண்டிய தீர்ப்பு
உலகின் சூழலியல் பேரிடர்களான மினமாட்டா, போபால் நிகழ்வுகளோடு ஒலி மாசால் ஏற்படும் உடல்நலப் பாதிப்பு, ஆஸ்பெஸ்டாஸ் கூரையால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு, பறவைக் காய்ச்சலின் அரசியல், மென்பானங்களால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பேசுவதுடன் நில்லாமல் இயற்கையின் மீதும் பெரும் அக்கறையை வெளிப்படுத்துகிறது இப்பிரதி. பவழத் திட்டுகள், அலையாத்திக் காடுகள், மழைக் காடுகள் போன்ற இயற்கை அமைப்புகளோடு நில்லாது கார்த்திகைப்பூ எனப்படும் செங்காந்தள் மலர், சிலந்தி, வண்ணத்துப்பூச்சி, புலி, சிங்கம், மனிதக் குரங்குகள்வரை விரிவாகப் பேசுகிறது. ஈழத்துக்குச் சென்ற இந்திய அமைதிப்படை தம்மோடு கொண்டுசென்ற பார்த்தீனியத்தால், அங்குச் சுற்றுச்சூழல் எவ்வாறு சீர்கெட்டது என்பதும் விளக்கப்படுகிறது.
தொடர்ந்து மரபணு மாற்று விதைகள், மூலிகைத் தாவரங்கள் கொள்ளைபோதலைப் போன்ற பல சிக்கல்களை எடுத்துரைக்கும் இந்நூல், இயற்கை அனுபவித்துவரும் அத்தனை இன்னல்களுக்கும் மனிதர் என்கிற ஒற்றை இனமே காரணம் என்று தீர்ப்பளிக்கிறது. ஆனால், இதை வெறுமனே தகவல்களோடு கடந்துவிடாமல் அதன் அனைத்துப் பரிமாணங்களையும் விரிவாக அலசி ஆராய்ந்திருப்பதே இந்நூலின் சிறப்பம்சம்.
இறுதியில் நமக்குக் கிடைக்கும் தீர்ப்பு என்னவென்றால் இயற்கையின் மீது மனிதர்கள் மேலாண்மை செய்வதை விடுத்து, கூட்டாண்மைக்குத் திரும்புவதே மனிதர்கள் பிழைத்திருப்பதற்கான ஒரே வழி என்பதே.
- கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com.