உயிர் மூச்சு

பூச்சி சூழ் உலகு 17: மூன்று முக்கோண அழகு

ஏ.சண்முகானந்தம்

நிறங்கள், உடலமைப்பைப் பொறுத்து அந்திப்பூச்சிகளில் எண்ணற்ற வகைகள் காணப்படுகின்றன. இந்திய அளவில் அந்திப்பூச்சிகளை முறைப்படுத்தவும், முழுமைப் படுத்தவும் இயலாமல் இருக்கிறது. விரல் நகத்தின் அளவில் இருந்து உள்ளங்கை அளவு வரை பல்வேறு அளவிலும் நிறங்களிலும் அந்திப்பூச்சிகள் வேறுபட்டுள்ளன.

ஆந்தைகள், வெளவால்கள், பக்கிக் குருவிகள், தேவாங்குகளுடன் இணைந்து ஒளி குறைந்த இரவில் உயிர்ச் சங்கிலியை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் அந்திப்பூச்சிகளும் முக்கியப் பங்காற்றுகின்றன. வண்ணத்துப்பூச்சிகள் பகலாடிகளாக இருக்க, அந்திப்பூச்சிகள் இரவாடிகளாக இருப்பது இரண்டுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு.

சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியான களக்காட்டில் ஒரு அந்திப்பூச்சியைக் கண்டேன். புற்களுக்கு இடையில், அடர் பழுப்பு நிறத்தில், கூம்பு வடிவத்தில், கீழ்நோக்கி இறங்கும் இறகுகள் வளைந்து முடியும் தன்மையுடன் அமைந்திருந்தன. முக்கோண வடிவில் இருந்த அந்த அந்திப்பூச்சியைப் படம் எடுப்பதற்குப் பல முயற்சிகள் எடுத்தும், புற்களுக்கு இடையில் இருந்ததால் படம் எடுப்பதற்குச் சற்றே சிரமமாக இருந்தது.

தலையில் தொடங்கி இரண்டு இறகுகளில் சேர்ந்த முக்கோண வடிவமும், பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு இறகுகளில் தனித்தனி முக்கோண வடிவம் என மூன்று அடர் பழுப்பு நிற முக்கோணங்களும், அவற்றைச் சுற்றி இளம் பழுப்பு நிறப் பட்டையும் சேர்ந்து பார்ப்பதற்கு அழகுடன் அந்த அந்திப்பூச்சி காட்சியளித்தது. என்னுடைய பயணங்கள் பெரும்பாலும் பேருயிர்களால் சூழப்பட்டதாக இல்லாமல் போனாலும், பூச்சிகளால் சூழப்பட்டிருந்தது மகிழ்ச்சியைத் தருகிறது.

- கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: shanmugam.wildlife@gmail.com

SCROLL FOR NEXT