வயலில் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நமது உழவர்கள் பல்வேறு பாரம்பரிய முறைகளைப் பின்பற்றிவருகின்றனர். வெற்றிலைக் கொடிக்கால் எனப்படும் சாகுபடி முறையில் இயற்கையான பசுங்குடில் விளைவை உருவாக்கி, நமது உழவர்கள் விளைச்சலை எடுக்கின்றனர். மிக நெருக்கமாக அகத்தி மரங்களை வளர்த்து நிழலை உருவாக்குகின்றனர்; வெப்பத்தைக் கட்டுப்படுத்துகின்றனர். இதன்மூலம் ஏறத்தாழ 28 பாகை செல்சியஸ் வெப்பமும், எழுபது முதல் 80 விழுக்காடுவரை ஈரப்பதத்தையும் உருவாக்க முடிகிறது. இது இப்போது செயற்கையாக உருவாக்கப்படும் பிளாஸ்டிக் குடில்களுக்கு (Polyhouse) சற்றும் குறைவானதல்ல.
இதேபோல மரங்களுக்கு இடையில் சாகுபடி செய்யும்போது வெப்பத்தைக் குறைக்க முடியும். நீர் ஆவியாதலைத் தடுக்க முடியும். காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியும். இப்படி ஒவ்வொரு வகையிலும் பண்ணையில் நுண்பருவ நிலையை உருவாக்கிவிட்டால் விளைச்சல் சிறப்பானதாக இருக்கும்.
திணையும் பருவங்களும்
பண்டைத் தமிழர்கள் புவி அமைப்பைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நான்கு திணைகளாகப் பிரித்துள்ளனர். வறட்சிக் காலத்தில் முல்லைத் திணையும் குறிஞ்சித் திணையும் பாலைத் திணையாக மாறும் என்றும் விளக்கியுள்ளனர். அமையும் குறிஞ்சி நிலத்தில் காய்கறி, பழங்களின் விளைச்சல் சிறப்பாக இருக்கும். முல்லை நிலத்தில் கால்நடை வளர்ப்பு சிறப்பாக இருக்கும். மருதத்தில் நெல் விளைச்சலும், நெய்தலில் மீன் வளர்ப்பும் சிறப்பாக இருக்கும்.
இவை தவிரப் பருவங்கள் (Seasons) பற்றிய அறிவும் பண்ணை வடிவாக்கத்துக்கு தேவை. தென்னிந்திய மக்களான நமக்கு ஆறு பருவங்கள் உள்ளன. இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி ஆகிய ஆறும் அதற்கே உரிய மழை, காற்று, வெயில் போன்ற கூறுகளைக் கொண்டவை. இவற்றைத் தெளிவாக அறிந்து பயிர் செய்ய வேண்டும். வடக்கு உலக மக்களுக்குக் கோடை, குளிர், இலையுதிர், வசந்தம் ஆகிய நான்கு பருவங்களே உள்ளன.
இழந்த பேரறிவு
'பருவத்தே பயிர் செய்' என்பது ஒரு பழமொழி. பயிர்களின் வளர்ச்சிக்குப் பட்டம் அல்லது பருவம் மிகவும் முக்கியமானது. குறிப்பிட்ட பருவத்தில் குறிப்பிட்ட பயிரைப் பயிரிட்டால் சிக்கல் குறைவு. சம்பா பருவத்தில் சம்பா நெல்லையும், கார் பருவத்தில் கார் நெல்லையும் மக்கள் பயன்படுத்திவந்துள்ளனர். ஆனால், பசுமைப் புரட்சி என்ற 'நவீன வேளாண்' முறை அறிமுகம் ஆன பின்னர் ஒரே வகையான விதைகளும், சாகுபடி முறைகளும் அறிமுகம் செய்யப்பட்டன.
இதன் விளைவாகப் பயிர்களுக்கு நிறைய நோய்கள் ஏற்பட்டன. பூச்சி தாக்குதல் அதிகரித்தது. அது மட்டுமல்லாது உழவர்கள் தங்களது மரபு சார்ந்த அறிவையும் இழந்துவிட்டனர். தற்சார்பையும் இழந்துவிட்டனர். எனவே, பருவம் பற்றிய அறிவும், பருவநிலை பற்றி அறிவும் இயற்கை வேளாண் உழவருக்கு மிகவும் அவசியம்.
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com