உருமறைத் தோற்றத்துக்குப் பொருத்தமான உதாரணமாக, இலைப்பச்சை வெட்டுக்கிளியைக் கூறலாம். அதன் உடல், நிறம், அமைப்பு என அனைத்தும் புறச் சூழலோடு பொருந்திப் போயிருக்கும். ஓணான், சிறு பறவைகள், சிற்றுயிர்களுக்கு இரையாக உள்ள வெட்டுக்கிளிகள், தங்களைக் காத்துக் கொள்வதற்கு உருமறைத் தோற்றம் பெரிதும் துணைபுரிகிறது.
பாபநாசம் அருகேயுள்ள களக்காடுப் பயணத்தில் என்னை ஆச்சரியப்படுத்திய நிகழ்வு ஒன்றைக் குறிப்பிடுவதென்றால், 'இலைப்பச்சை வெட்டுக்கிளி'யைப் பார்த்த அனுபவத்தைக் கூறலாம். களக்காட்டின் பாறை முகட்டில் இருந்த புல்வெளிப் பகுதிகளில் பூச்சிகளைத் தேடி அலைந்துகொண்டிருந்த நேரத்தில், புல்லின் நிறத்தையொத்த வெட்டுக்கிளியைப் பார்த்து, சிறிது நேரம் ஏதும் புரியாமல் அமைதியாக இருந்துவிட்டேன்.
காய்ந்த புல்லைப் போன்று இளம் பழுப்பு நிறத்தில் மேல் பக்க உடல், இலைப்பச்சை நிறத்தில் கீழ் உடல், கால்கள் பழுப்பு நிறம், பின் பக்கம் அடர் பழுப்பு நிறத் திட்டுகள், கண்களும் உணர்கொம்புகளும் பழுப்பு நிறத்திலும் காணப்பட்ட 'இலைப்பச்சை வெட்டுக்கிளி'யைச் சற்று நேரம் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.
நெடுநேரம் ஒளிப்படம் எடுப்பதை மறந்துவிட்டு வெட்டுக்கிளியின் தோற்றத்தையும் நிறத்தையும் ரசித்துக் கொண்டிருந்துவிட்டு, தன்னிலைக்கு வந்த பிறகே சில ஒளிப்படங்களைப் பதிவு செய்தேன்.
- கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: shanmugam.wildlife@gmail.com