உயிர் மூச்சு

யானைகளின் ரட்சகன்

கே.பூமிகா

“வளர்ப்பு யானைகளிடம் யானைப் பாகன்கள் குரூரமாக நடந்துகொள்ளாமல் இருப்பதற்குப் புதிய, கருணைமிக்க முறைகளைக் கற்றுத் தருவது அவசியம்" என்கிறார் விலங்கு மருத்துவரும், காட்டுயிர் பாதுகாவலருமான டேக் கோரிங்.

ஜெய்ப்பூரில் ஒரு பெண் யானை, அதன் குட்டிக்குச் சிகிச்சை அளிக்கக் கிடைத்த வாய்ப்பின் மூலம் யானைகளின் உலகத்துக்குள் நுழைந்தார் டேக் கோரிங். அந்த அனுபவம் அவரை காட்டுயிர் பாதுகாவலராகவும் மாற்றிவிட்டது.

இந்த அனுபவத்தின் மூலம் யானை பாதுகாப்பு இயக்கமான ‘எலிபண்ட் எர்த் இனிஷியேட்டிவ்' என்ற இயக்கத்தை இங்கிலாந்தில் அவர் தொடங்கினார். தற்போது யானை வேட்டைக்கு எதிராக உலகெங்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

யானைகளின் உலகம்

அருமையான ஒளிப்படக் கலைஞராகத் திகழும் டேக் கோரிங்கின் படங்கள் பெங்களூர் ரங்கோலி மெட்ரோ ஆர்ட் சென்டரில் "எலிபண்ட் எனிக்மா" என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவரிடம் கலந்துரையாடியபோது "2007இல் ஒட்டகங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி தெரிந்துகொள்வதற்காக ராஜஸ்தான் வந்திருந்தேன். அப்போது ஜெய்ப்பூரில் ஒரு அடைப்பிட யானைக்குப் பிரசவம் நடந்திருந்தது. அடைப்பிட யானை ஒன்று அங்குக் குட்டிபோடுவது, 70 ஆண்டுகளில் முதன்முறை. அதனால் யானைப் பாகன்களால் அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க முடியவில்லை.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த விலங்கு பாதுகாப்பு இயக்கமான ‘ஹெல்த் இன் சபரிங்’கைச் சேர்ந்த ஒரு நண்பர் என்னை உதவிக்கு அழைத்தார். புதிதாகப் பிறந்த குட்டி யானையைப் பார்ப்பது என்பது எனக்கும் விந்தையாகவே இருந்தது. அந்தத் தாய் யானை அருகே சென்றபோது, திடீரென்று தன் தும்பிக்கையால் அது என்னைச் சுழற்றிப் பிடித்து எனது கண்களையே உற்றுநோக்கியது. அந்த அனுபவம் திகிலாகவும், பெரும் சாகசமாகவும் இருந்தது. யானையின் கண்கள் அவ்வளவு உணர்ச்சிகளை வெளிப்படுத்தின" என்கிறார்.

யானையின் கண்ணைக் க்ளோசப் ஷாட்டில் படம் எடுத்திருக்கிறார் டேக் கோரிங். அதன் கண்ணைச் சுற்றியுள்ள குறுக்குநெடுக்கான கோடுகள் செல்லும் சதையை நெருக்கமாகப் பதிவுசெய்த படம் அது. "இதன்மூலம் யானைப் பாதுகாப்பு விழிப்புணர்வுச் செயல்பாட்டுக்கான விதைகளை மக்கள் மனதில் விதைக்கிறேன்" என்கிறார்.

இவரது மனைவியும் எழுத்தாளருமான மரியா காஃபேயுடன் சேர்ந்து, ‘ஹிடன் பிளேசஸ் டிராவல்ஸ்' என்ற நிறுவனத்தை ஆரம்பித்து யானைச் சுற்றுலாக்களையும் சாகசப் பயண நிகழ்ச்சிகளையும் நடத்திவருகிறார். அதன் மூலம் தனது எலிபண்ட் எர்த் இனிஷியேட்டிவ் இயக்கத்துக்குப் பணம் திரட்டுகிறார்.

பிரச்சினைகளும் தீர்வுகளும்

இந்தியாவில் மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்குள் காட்டு விலங்குகள் நுழைந்துவிடுவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்துத் தீர்க்கமான கருத்தை முன்வைக்கிறார் டேக் கோரிங். 2008ஆம் ஆண்டு அவர் பெங்களூரில் இருந்தபோது, நகர எல்லையில் யானைகள் செய்யும் ‘அட்டூழியம்’ குறித்து எல்லா நாளிதழ்களிலும் செய்திகள் நிரம்பி வழிந்தன. "இந்தியாவில் மக்கள்தொகையும், யானைகளின் தொகையும் பரஸ்பரம் அதிகரித்ததால்தான், இந்த மோசமான நிலை ஏற்பட்டது. விவசாயத்துக்கான நிலங்களாக நிறைய இடங்கள் மாற்றப்படும்போது, யானைகளின் வசிப்பிடத் தேவைக்கும், மனிதனின் தேவைக்கும் மோதல் உருவாகிறது" என்கிறார்.

காட்டில் பெருமளவு யானைகள் பாதுகாப்பாக இருப்பதற்கு இந்தியாவில் அவை கடவுளாக மதிக்கப்படுவதுதான் முக்கியக் காரணம் என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். ஆனால், வளர்ப்பு யானைகள் விஷயத்தில் அந்த மதிப்பு கொஞ்சமும் கொடுக்கப்படுவதில்லை என்னும் கோரிங், "கேரளா போன்ற மாநிலங்களில் கோவில் யானைகள் நடத்தப்படும் விதத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்கிறார்.

அதேநேரம் யானைப் பாகன்கள் குரூரமானவர்கள் அல்ல என்றும் வலியுறுத்துகிறார் டேக் கோரிங். "வழக்கமாக அவர்கள்தான் இதில் குற்றம்சாட்டப்படுகிறார்கள். யானைகளைக் கையாளும் முறை அவர்களுக்குத் தெரியவில்லை. இது அறியாமையே தவிர, குரூரம் அல்ல" என்கிறார்.

யானைப் பாகன்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் தரமான பயிற்சிகளைக் கொடுக்கும் திட்டம் ஒன்றை உருவாக்கக் கோரிங் முயற்சித்து வருகிறார். இந்தப் பயிற்சிகளின் மூலம் யானைகளைக் கருணையுடனும், ஆரோக்கியமாகவும் அவர்கள் கையாள முடியும் என்று அவர் நம்புகிறார். இதனால் யானைகளுக்கு ஊனம் ஏற்படுவது தவிர்க்கப்படும். யானை பராமரிப்புச் செலவுகளையும் குறைக்க முடியுமாம்.

"நான் ஒரு விலங்கு மருத்துவன். விலங்குகளிடம் எப்படி அகிம்சை முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்பது எனக்குத் தெரியும். இந்தியாவில் பல மாநிலங்களுக்கும் சென்று அந்த வழிமுறைகள் பற்றி பேசிவருகிறேன். தமிழக அரசும் கேரளமும் எனது திட்டத்தை வரவேற்றுள்ளன." என்கிறார் டேக் கோரிங்.

தமிழில்: ஷங்கர்

தி இந்து (ஆங்கிலம்)

SCROLL FOR NEXT