உயிர் மூச்சு

சுற்றுச்சூழல் பாதிப்பால் புற்றுநோய், காசநோய் அதிகரிப்பு: புகையில்லா போகி பிரச்சார விழாவில் அமைச்சர் பேச்சு

செய்திப்பிரிவு

சுற்றுச்சூழல் மாசுபடுவதால் புற்றுநோய், காசநோயின் பாதிப்பு அதிகரித்துள்ளது என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான போகியன்று பயனில்லாத மரச் சாமான்கள், பழைய பொருட்கள், பாய் போன்றவற்றை எரிக்கும் வழக்கம் மக்கள் மத்தியில் உள்ளது. கிராமங்களில் தொடங்கி மாநகரங்கள்வரை வீட்டுக்கு வீடு, தெருவுக்குத் தெரு ஒரே நாளில் இவ்வாறு பொருட்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் அதிக அளவில் மாசுபடுகிறது என்ற கருத்து சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் போகிப் பண்டிகை கொண்டாடுவோம் என்ற கருத்தை மக்கள் மத்தியில் வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டில், போகிப் பண்டிகையின்போது காற்று மாசுபடுவதைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சார தொடக்க விழா, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மடுவங்கரையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடந்தது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், மேயர் சைதை துரைசாமி ஆகியோர் புகையில்லா போகி பிரச்சார வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் தா.கார்த்திகேயன், உறுப்பினர் செயலாளர் வெங்கடாச்சலம், ஜி.செந்தமிழன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பேசியதாவது:

சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கு தொழிற்சாலைகள் மட்டுமே காரணமல்ல. மக்கள்தொகை அதிகரிப்பு, வாகனப் பெருக்கம், திடக்கழிவுகளை எரிப்பது போன்றவற்றாலும் சுற்றுச்சூழல் அதிகம் மாசுபடுகிறது. சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக புற்றுநோய், காசநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது.

காற்று மாசுபடுவதால் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துவிட்டது. 100 ஆண்டுகளுக்கு முன்பு உலக அளவில் 32 சதவீத அளவுக்கு காடுகள் இருந்தன. தற்போது 12 சதவீத அளவு மட்டுமே காடுகள் உள்ளன. மரங்கள் அதிக அளவில் அழிக்கப்படுகின்றன. இதனால், மழை குறைந்துவிட்டது. மழைக்காக புயலை நம்பி இருக்கவேண்டி உள்ளது.

நாமும் வருங்கால சந்ததியும் சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டுமென்றால் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும். பள்ளிகளிலும் அதிக அளவில் மரங்களை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போகிப் பண்டிகையின்போது டயர், பிளாஸ்டிக் போன்றவற்றை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு அனைவரும் புகையில்லா போகி கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார். ‘புகையில்லா போகி’ பற்றி பேசிய 9-ம் வகுப்பு மாணவி நிவேதிதா, சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பாடல்

பாடிய 8-ம் வகுப்பு மாணவிகள் 3 பேர் ஆகியோருக்கு அவர் தலா ரூ.500 பரிசு வழங்கினார்.

SCROLL FOR NEXT